எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, April 28, 2011

வந்துவிடு என் தலைவா .

(மரபுக் கவிதை ஒன்று எழுதிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உந்துதலின் வெளிப்பாடு இது. மரபின் சில வடிவங்களை என் கவிதை தடவிப் பார்க்கிறது.)


அன்பே  எந்தன்  ஆருயிர்க்  காதலனே
என்  மூச்சை  என்னோடு  ஒட்டவைத்த  ஓவியமே 
உன்  பேரைச்  சொல்லித்தான்  என்  பொழுது  விடிகிறது.
உன்  உருவம்  காணாமல்  என்  இறகு  ஒடிகிறது .

சுவாசிக்கக்  கற்றுத்தந்தாய் .
சுற்றங்கள்  மறக்கச்  செய்தாய் - நான்
வாசித்த  கவிதை  எல்லாம் 
நீயென்றே  ஆகிப்போனாய் .
யோசித்துப்  பார்க்கின்றேன் - நின்னை 
நெருங்க  வழி  தெரியவில்லை - ஆதலால் 
யாசித்துக்  கேட்கின்றேன் - என் காதல்
நோய்க்கு  நீ  மருந்தென்றாவாய் .

காதலென்ற  வாசகத்தை  நான்  படித்தேன்.
கனவுகளும்  பல  கண்டு  உயிர்  துடித்தேன்.
மோதலுக்காய்  விழிகளுக்கு  மை  வரைந்தேன்.
மோகனமாய்   என்  இதழை  ஆக்கி  வைத்தேன்.
போதனைகள்  பல  களைந்து  பொன்னே  உன்றன்
புன்னகைக்காய்  காத்திருந்தேன்  வாழ்நாள் எல்லாம் 
சீதறமே  நீ  கடந்து  போகும்போது  – ஒரு 
ஓரவிழிப்  பிச்சை  இடு  போதும்  போதும் .

சித்திரமாய்  வந்தெந்தன்  நெஞ்சினிலே  குடியிருந்தாய்  
பத்திரமாய்  உன்  கனவை  வளர்த்தேன் -சத்தியமாய் 
வெட்டிவிட்டுப்  பார்த்தாலும்  என்னுடலம்  உன்  பெயரை 
சொட்டி  நிற்கும்  காதலிலே  தோய்ந்து.

வா  வா  எந்தன்  மணிமுத்துக்  காவியமே 
தீவாக  நானுள்ளேன்  தெவிட்டாமல்  ரசித்துப்பார் .
எனைச்சுற்றும்  கடலாக  நீயேதான்  மாறிப்பார் 
புனையாத  கவிதைகளின்  பொருளாக  சேரப்பார் .

2002

Post Comment

உன் புன்னகையில்...

உன்
புன்னகைக்குள் - நான்
புதையுண்டு
மீளும்போது,
மழைக்கால
விடியல்களின்
மரக்கிளைத்   தூறல்களில்
நனைந்து மீள்கிறது
மனது .

2005

Post Comment

உமிக்குவியல்

அந்தப்  பாதை .
ஏழெட்டு  வருடங்களுக்கு  முன் 
எங்கள் பிஞ்சுக்  கால்கள் 
தடம்  பதிக்காத 
மணல்களே அங்கு  
இருந்திருக்காது .

அந்தப்  பாதையில்தான் 
பாடசாலை  முடிந்தபின் 
நானும்  என்  தோழிகளும் 
நர்த்தனமாடுவோம் .

இமய  மலைபோல்  குவிந்திருக்கும் 
அந்த  உமிக்குவியல்தான் 
தினமும்  எங்களை 
புரட்டிப்  புரட்டி 
புதுமை  செய்தது .

அங்கே  ஏன்  அது 
குவிந்திருக்கின்றது  என்றறியும் 
பழுத்த  அறிவு 
எங்களுக்கிருக்கவில்லை.
அதில்  குதித்து  விளையாடும் 
குழந்தைத்  தனம்தான் 
எங்களுக்குள் 
குதித்துக்  கொண்டிருந்தது.


புத்தகப்  பைகளையும் 
காலணிகளையும் 
சேர்த்தெடுத்து 
ஓர்  ஓரமாய் 
மூடி  வைத்துவிட்டு 
அந்த  மலையில் 
நாங்கள்  
குதிக்கத்  தொடங்கினால் 
மதியச்  சூரியன் 
மயங்கிப்போய் விடுவான் .

அந்தப்  பஞ்சுக்  குவியல்மேல் 
படுத்துருளுவோம்.
பிஞ்சுக்கைகளால் 
அள்ளி  எடுத்து 
அத்தனை  பேரையும் 
உமிக்  குளியல்  செய்வோம் .

குதித்துக்  குதித்து 
கும்மாளம்  அடிப்போம் .
அந்த 
உமி  மலைக்குள் 
ஒளிந்து  மறைந்து 
புதிதாய்  மீண்டும் 
பிறந்து  வருவோம் .

உமி  மலையின் 
 உச்சியில்  நின்று 
அந்தக்  காலத்துப் 
புதுப்பாடல்களை 
மொத்தமாய்க்  கூவி 
விண்ணதிர  முழக்குவோம் .

என்னை  ஒருத்தி 
தள்ளி  விடுவாள் .
அவளை  ஒருத்தி
தள்ளி  விடுவாள் .
அப்படியப்படியே,
அத்தனை  பேரும் 
மொத்தமாய்  உருளுவோம் .

எங்கள்  பிஞ்சு  மனங்கள் 
புரண்டு  கிடந்ததால் 
உமிக்குவியல் 
புனிதம்  அடைந்ததா ?
புழுதி  அடைந்ததா?
இதுவெல்லாம்  தெரியாது .

ஆனாலும்  நாங்கள் 
மேலுமியைக்  கீழாக்கி 
கீழுமியை  மேலாகி 
அன்றாடம்  அதனை 
புதிதாகச்   செய்தோம் .

நேரம்  போனதும்,
எங்கள்  உமி  மலையை 
பிரிய  முடியாமல் 
பிரிந்து  வந்து …
சீருடையிலும் 
காலுறையிலும் இருந்த  
உமியின் 
அடையாளம்  துடைத்து …
பக்கத்துக்  கிணற்றின் 
குளிர்  நீரில்  முகம்  கழுவி ….
அடுத்த  வீட்டுக்  கிழவியின் 
மண் முட்டியில் 
புகைத் தண்ணீர்  குடித்து …
மீண்டு  வந்து - எம் 
உடைமைகளைப்  பார்த்தால் ,..
கைக்குட்டையோ  எழுதுகோலோ
காணாமல்  போயிருக்கும் .

இதயத்தில் பயமொன்று 
இடியாக  வந்திறங்கும் .


******

அப்பப்பா ….
அந்த  இறந்தகாலம் 
நினைக்க  நினைக்க 
நெஞ்சுக்குள் 
தேனள்ளித்  தெளிக்கிறது .

அந்தப்  பேரின்பன்களை 
இன்னுமின்னும் 
அனுபவிக்க 
இப்போதும்  நாங்கள்
குழந்தைகளாயில்லையே .

இப்போதும் ,..
அந்தப்  பாதையை 
கடக்க  நேர்ந்தால் …
அந்த ,
இறந்துபோன 
உமிக்குவியலில் 
உருண்டு  விட்டுத்தான் 
வருகிறேன்.

2002

Post Comment

Wednesday, April 27, 2011

நாணம்

என்  பெண்மை
எழுதிய 
புதுக்கவிதை 
கன்னக்  கதுப்புகளில் 
கசிந்து 
வழிகிறது .

2005

Post Comment

காதல் பலவீனம்

 
 (சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனுக்கு காதல் வருகிறது. அவன் புலம்புகிறான் இப்படி)

என்
விஷ்வரூபத்தின்
விளிம்புகளில்
ஏன்
உன்  விழி மையை
பூசி விட்டாய்?
தாண்ட  முடியாமல்
தவறி  விழுகிறது
மனசு .       

2005                                                          

  

Post Comment

என் கவிதை

வேதனைகளையும்
வலிகளையும்
சிதையில்போட்டு
என்
கைகள் மூட்டிய
கண்ணீர் நெருப்பு.

2011

Post Comment

Tuesday, April 26, 2011

நீதானடா என்னுயிரே....

மங்கிக்கிடந்த
என் வானத்துக்கு
பௌர்ணமி விளக்கை
ஏற்றி வைத்தவன்
நீதானடா…..


கண்ணா,..
ஊமைக்குழலாய்
ஒதுங்கிக் கிடந்தவளை
புல்லாங்குழலாக்கி
புதுமை செய்தவனும்
நீதானடா..


அங்கேயும் இங்கேயும்
சிதறிக்கிடந்த
என் அரிச்சுவடியைக் கோர்த்து
என்னை ஒரு
கவிதையாய் நெய்தவனும்
நீதானடா…


வெறும் கல்லாய்த்தான்
விழுந்து கிடந்தேன்.
உன் அன்பென்னும்
உளிகொண்டு
என்னையொரு
சிற்பமாக்கி சிறப்பித்தவனும்
என்னுயிரே,
நீதானடா….

2011

Post Comment

உன்னை எனக்குப் பிடிக்கிறது

பூங்குயில்  பாஷை  பிடிக்கவில்லை.
பூக்களின்  வாசம்  பிடிக்கவில்லை.
தென்றலின்  ஸ்பரிஷம்  பிடிக்கவில்லை.
தேனின்  இன்சுவை  பிடிக்கவில்லை.

வானின்  மீது  கோலம் போடும் 
மேகம்  எனக்குப்  பிடிக்கவில்லை.
மேகம்  என்னும்  தேரில்  உலவும் 
நிலவும்   எனக்குப்  பிடிக்கவில்லை.

ஊதும்  குழலை  பிடிக்கவில்லை.
ஊரும்  நதியை  பிடிக்கவில்லை.
பேசும்  கிளியை  பிடிக்கவில்லை.
பிஞ்சு  மழலை  பிடிக்கவில்லை.

பூமி  மேலே  சாரல்  தூவும் 
மழையை  எனக்குப்  பிடிக்கவில்லை.
மழையின்  தலைக்கு  கிரீடம்  சூடும் 
வானவில்  எனக்குப்  பிடிக்கவில்லை .

அலையும்  கடலை  பிடிக்கவில்லை.
அசையும்  கிளையை  பிடிக்கவில்லை.
உயர்ந்த  மலையை  பிடிக்கவில்லை.
உலகின்  சப்தம்  பிடிக்கவில்லை .

இசையைப்  பாடி  இரையைத்  தேடும் 
பறவை   எனக்குப்  பிடிக்கவில்லை.
பறவை   மீது  விசிறி யாடும் 
சிறகை  எனக்குப்  பிடிக்கவில்லை .

உன்னை  எனக்குப்  பிடிக்கிறது.
உன்  பிள்ளை  உள்ளம்  பிடிக்கிறது.
என்னை  வந்து  களவாடும் -உன் 
கண்ணை  எனக்குப்  பிடிக்கிறது .

இதயம்  திறந்து  பேசும்  போதுன் 
இதழை  எனக்குப்  பிடிக்கிறது.
இயல்பாய்  புன்னகை  பூக்கும்  போது
இமையின்  ஜாடை  பிடிக்கிறது.

காதல் நதியில் நனைகையிலே - உன்
கவிதைச் சிணுங்கல் பிடிக்கிறது 
ஊடல்  கொண்ட  பொழுதுகளில் -உன்
ஊமை  நாடகம்  பிடிக்கிறது .

உன்னில்  வந்து  மேடை  போடும்
ஆண்மை  எனக்குப்  பிடிக்கிறது.
மெல்ல  நீயோ  பேசும்போதுன் 
மென்மை  எனக்குப்  பிடிக்கிறது .

உன்னை  எனக்குக்  காணப்  பிடிக்கும்.
உனது  நிழலில்  நடக்கப்  பிடிக்கும்.
உனது  விழியால்  கதைக்கப்  பிடிக்கும்.
உனது  இதழால்  சுவைக்கப்  பிடிக்கும்.

கனவில்  உன்னுடன்  குலவப்  பிடிக்கும்.
கவியில்  உன்னை  செதுக்கப்  பிடிக்கும்.
செவியில்  ஊறும்  மகர  யாழில் 
உன்  பெயரின்  நாதம்  இசைக்கப்  பிடிக்கும்.

உன்  விழிக்குள்  என்  விழியை  தேடப்  பிடிக்கும்.
உன்னுடனே  சேர்ந்திருந்து  உண்ணப்  பிடிக்கும்.
உன்  தோளில்  சாய்ந்து கொண்டே  உளரப்  பிடிக்கும்.
உன்  மடியில்  தலை வைத்து  உறங்கப்  பிடிக்கும். 

2002

Post Comment

விடியலின் இன்னிசை

ஒரு  புல்லாங்குழல்  எழுகிறது -அது 
பூவின்  காதில்  விழுகிறது 
மெல்லப்  பூவும்  அசைகிறது 
அந்த  மெல்லிசையில்  தேன் கசிகிறது.

வண்டும்  சுற்றி   வளைக்கிறது 
வடிவாய்த் தேனை  சுவைக்கிறது 
புள்ளினம்  பாடிப்  பறக்கிறது 
புவனம்  கண்ணைத்  திறக்கிறது 

இதயம்  மெல்லத்  துடிக்கிறது 
இமையும்  மடலை  விரிக்கிறது 
கனவின்  வடிவில்  ஓர்  கவிதை 
கவலைச்  சுமையைப்  பறிக்கிறது.

புதிதாய்  உலகம்  பிறக்கிறது 
புணையும்  பண்ணில்  மிதக்கிறது 
சடமும்  இசையால்  உயிர்க்கிறது 
சுகமும்  சுவையும்  துளிர்க்கிறது.

இசையில்  உலகம்  விழிக்கிறது -அந்த 
இன்பத்  தேனில்  குளிக்கிறது.
பகைமை  மறந்து  சிரிக்கிறது 
பனியை  அள்ளிக்  குடிக்கிறது.

2002

Post Comment

Monday, April 25, 2011

நானாக நான்...

நான் வாழ்வது
ஒரு கனவுலகில்.
இங்கேதான்
என் வாழ்க்கை
அர்த்தப்படுகிறது.


நான் யாரைப்பற்றியும்
கவலைப்படவுமில்லை.
யாருக்கும்
பயப்படவுமில்லை.


நான் நானாக வாழ்கிறேன்.


மற்றவர்களை  நான்
காயப்படுத்தவில்லை.
கண்ணிமைக்கயிலும்கூட
காற்றுக்கு வலிக்காமல்
காப்பாற்றிக்கொள்கிறேன்.


மற்றவர்களுக்காக
மனம் திறந்து செய்கிறேன்.
ஆனால்,
எனக்காக எதையும்
நான் எதிர்பார்க்கவில்லை.


என் சுயத்திற்கு நானோர்
வரையறை விதிக்கிறேன்.
நேர்மையானவளாய்......
தூயவளாய்.....
நம்பகமானவளாய்....
இன்னுமின்னும்
எனக்கு நானே
சுயவிலாசம் கொடுக்கிறேன்.


எனக்கு நானே
நீதிபதியாகிறேன்.
என் வரையறைகளில் இருந்து
தப்பிக்க நேர்ந்தால்
தண்டனை கொடுக்கிறேன்.
கட்டுப்பட்டு நடந்தால்
தட்டிக் கொடுக்கிறேன்.
எனக்கு நானே
எஜமானியாகிறேன்.


என்னை நானே சமைக்கவும்
என்னை நானே சுவைக்கவும்
பழகிக் கொள்கிறேன்.


என் புலன்களை எல்லாம்
புதுப்பித்துக் கொள்கிறேன்.
இயற்கையின்
சின்னச் சின்ன
சிலிர்ப்புகளைக்கூட
ரசிக்க வைத்து
ஐம்புலன்களையும்
அடக்கியாள்கிறேன்.


மழையில் நனைகிறேன்.
வெயிலில் காய்கிறேன்.
பருவ மாற்றங்கள்
என்னை
பண்படுத்துவதாய்
பறைசாற்றிக் கொள்கின்றேன்.


பூமரங்கள் நட்டு
அவற்றின் புன்சிரிப்பிலே
புளகித்துக் கொள்கிறேன்.
காலைப் பூக்களின்
உதடுகளில் உறங்குகின்ற
பனித்துளிகளை...
அவற்றை
முத்தமிட்டு முத்தமிட்டுப் போகும்
பிஞ்சுத் தென்றலை...
அருகில் சென்று
முகர்ந்து பார்க்கிறேன்.


என்னுள்
தேன் கசிவை ஏற்படுத்தும்
காலைத் தென்றலுக்கு
நான் என்னை
காணிக்கையாக்குகிறேன்.


ஆயிரம் ஞாலம் காட்டும்
அந்திவானத்தை
அண்ணாந்து பார்க்கிறேன்.
அதன்
வினாடிச் சித்திரங்களில்
வியர்த்துப் போகிறேன்.


என்
உணர்வின் சிலிர்ப்புகளை
சப்த அரங்கத்தினுள்
சிந்தி விடுகிறேன்.
என் மெல்லுணர்வுகளை
வார்த்தைகளால் வடிகட்டி
கவிதை புனைகிறேன்.


நான் யாருக்கும்
பாரமாயில்லை.
சில ஏமாற்றங்களையும்
ஏற்றுக்கொள்கிறேன்.


என்னுள் நானே
உயர்ந்த எண்ணங்களை
விதைத்துவைக்கிறேன்.


நான்தான் உலகம்.
என்னைவிட யாரும்
உயர்வுமில்லை.
தாழ்வுமில்லை.


என்னை ஒரு
புத்தகமாய்
விரித்து வைக்கிறேன்.
எனக்குத் தோன்றுவதை
பயமில்லாமல்
எடுத்துச் சொல்கிறேன்.


நிஜ உலகத்தால்
நான்
நிராகரிக்கப்படும்போது
இயற்கையின் மடியில்
விசும்பியழுகிறேன்.


நான் பூக்களின் சாதியென்று
நானும்
தம்பட்டம் அடிக்கிறேன்.
நான் கனவுகளின் முடிச்சு.
என்னை,
இலேசாக யாரும்
அவிழ்த்துவிட முடியாதென்று
அறைகூவுகிறேன்.


புத்தகம் படிக்கிறேன்.
எனக்கு நானே
 சிறகுகள் தரவும்
என்னை நானே
தீட்டிக்கொள்ளவும்
புத்தகம் படிக்கிறேன்.


நான் நானாக வாழ்கிறேன்.
என் கனவுலகில்
வாழ்க்கை
அர்த்தப்படுகிறது.

2002

Post Comment

என் முன்னுரை

எழுத்துத்துறையில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கிறது.
முன்பெல்லாம் அவ்வப்போது எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன்.  ஆனால் ஒருபோதும் அவற்றை அரங்கேற்ற  முயற்சித்ததில்லை. 
இப்பொழுதும் நிறைய எழுதவேண்டுமென்ற ஆசை இருக்கிறது.
தனிமையில் பிரயாணம் செய்யும்போதெல்லாம் என் கற்பனை அருவி அணை உடைத்து ஓடும்.
அவற்றிற்கு வரி வடிவம் கொடுத்து முழுமைப்படுத்துவதற்க்கான நேரமும் சூழ்நிலையும் மனநிலையும் ஒருங்கே அமையப்பெறுவதுதான் அரிது. அப்படியான சந்தர்ப்பங்கள் எப்போதாவது அமையும்போது என் பேனாப் பறவையும் மெல்லியதாய்ச் சிறகை விரிக்கும்.
என் எழுத்துக்களை நான் யாரோடும் பகிர்ந்து கொண்டதில்லை. உதவாமல்போகும் உலோபியின் சொத்துக்களைப்போல அவை என் நாட்குறிப்புகளுக்குள்ளே பதுங்கிக்கிடக்கும். 
எப்போதாவது என் ஞாபகப் பெட்டகம் தூசு தட்டப்படும்போது என் பழைய உளறல்கள் எனக்குள்ளே பனி மழையை பொழிந்து விடும்.
என் எழுத்துக்களை பதிந்து கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு வலைப்பக்கத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அண்மையில்தான் வந்தது. 
என்னுடைய பழைய படைப்புக்களில் பல அரங்கேற்றப்படாமலேயே அடக்கம் பெற்றுவிட்டன.
இருப்பதையாவது பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலோடும், இன்னுமின்னும் எழுதவேண்டுமென்ற ஆர்வத்தோடும், யாராவது ஒருவராவது இவற்றை ரசிக்கக்கூடும் என்ற நம்பிக்கையோடும் இந்த வலைப்பதிப்பை ஆரம்பிக்கிறேன்.
இந்தப் பக்கம் பொதுவாக என்னுடைய கவிதைகளையும், நான் ரசிக்கின்ற பல விடயங்களையும், என்னுடைய விமர்சனங்களையும் சுமந்து வரும்.
அன்பு நண்பர்களே, என்னோடு இணைந்திருங்கள் எப்போதும். 
உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

Post Comment