எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 29, 2011

கனவுப் பூ

ஒரு புன்னகை தேசத்தில்
பூவொன்று பூத்தது.

பூங்காற்றின் மோதல்களில்
புதுப்பாடம் கற்றது.

காற்றின் அதிர்வுகளில்
கானங்கள் பயின்றது.

காலைத் தென்றலோடு
கை கோர்த்து நடந்தது.

வானத்தின் கோலத்தில்
வண்ணங்கள் அழைந்தது.


வானவில்லில் ஊஞ்சல் கட்டி
வானத்தை அளந்தது.

விண்மீனை எண்ணித்தான்
எண்கணிதம் வளர்த்தது.

விஞ்ஞானம் தெரிந்து கொள்ள
விண்ணோடு சுழன்றது.

நிலவிலே இறகு கட்டி
நெடுவானில் பறந்தது.

இரவின் பனித்துளியில்
இமை கவிழ மறந்தது.

அலைகளின் நுரைகளிலே
கலையமுது பருகியது.

இலைகளின் கரைகளிலே
இருவிழிகள் மருவியது.

நிலவொழுகும் இரவுகளை
நிலை மறந்து ரசித்தது.

மழை பொழியும் நினைவுகளில்
நீராடிக் களித்தது.

இயல் இசை கற்றதெல்லாம்
இயற்கையின் மடியில்தான் - இந்தக்

கயல் விழி பூத்ததெல்லாம்
கனவுகளின் கொடியில்தான்.

அழகான கொடிகளிலே
இடம் மாறும் இந்தப் பூ.

எழில் கொஞ்சும் இயற்கையோடு
துயில் கொள்ளும் வஞ்சிப் பூ.

இவள் ஒரு கனவுப் பூ - இவளுக்கு
நிஜவுலகம் வேப்பம் பூ.


Post Comment

Saturday, May 28, 2011

நெஞ்சை சுடும் நினைவுகள்

நிலாப் பொழியும்
கடற்கரைச் சாலைகளில்
கால்தடம் பதிக்கிறேன்.

நுரை தள்ளும் அலைகள்

என் பாதங்களை
உரசிப் போகின்றன.

அமைதியான ஒரு

தென்றல் காற்று
என் மேல் மோதிக்கொண்டு
ஒரு மெல்லிய சிலிர்ப்புடன்
விலகிப் போகிறது.

காற்றோடு கரைந்துவரும்

கடல் நீரின் வாசம்
சுவாசத்தில் கலக்கிறது.

தூரத்தில் எங்கோ...

புல்லாங்குழலின் இசையோடு
ஒரு மெல்லைய கானம்
காற்றோடு கசிகிறது.

நண்டு பிடிக்கும் சிறுவர்கள்,

மணல் வீடு கட்டும் குழந்தைகள்,
அலைகளில் துள்ளிக் குதிக்கும் இளசுகள்,
கிளிஞ்சில் பொறுக்கும் குமரிப் பெண்கள்,
என்று - இங்கே
எல்லாமே
அழகியல் மொழியின்
அசைவுகளாய்த்தான் இருக்கின்றது.

எனக்கு மட்டும்

அலைகளில் தத்தளித்து,
அரைகுறை உயிரில்கூட
அலறித் துடித்து,
உயிரை நிறுத்தி வைக்கும்
போராட்டங்களில் தோற்றுப்போய்,
அந்தரத்தில் மெல்ல அடங்கி,
மோட்சத்தில் அமர்ந்து கொண்டு,

என்னை,

கண்ணீர் கடலுக்குள்
கரைசேர முடியாமல்
காலமெல்லாம்
அமிழ்த்தி வைத்திருக்கும்
என் ஆசை மனைவியினதும்
என் செல்ல மகனினதும்
அந்தக்
கடைசி நேரக் கதறல்கள்
காதுகளுக்குள்
ரணமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

Post Comment

Friday, May 27, 2011

பூக்களே சிரிக்காதீர்கள்

பூக்களே சிரிக்காதீர்கள்
புன்னகையை உதிர்க்காதீர்கள்.

மழலையின் சிரிப்பில்கூட

மகிழ்ந்திட முடியவில்லை.- இந்த
விடலைப்பெண் கனவுக்கூடு
வெறிச்சோடிப் போனதிப்போ.

ஆகாய வெளியினிலே

ஆலாப் பறந்தது ஒருகாலம்.
ஏகாந்தக் காட்டுக்குள்
ஏங்கித் தவிப்பது நிகழ்காலம்.

குழந்தையாய் நான்

தத்தித் திரிந்தபோதும்
மகிழ்ச்சியில்
குறையேதும் இருந்ததில்லை.
இப்போ - இந்த
பருவக்குருவிக்கு
சிறகுகள் முளைத்திருந்தும்
பறந்திட முடியாமல்
பதுங்கிக் கிடக்கிறது.

வாலிபம் வந்து

வானம் திறக்க,
வண்ணக் கனவுகளின்
ஊர்வலம் நடக்க,
கரை புரண்டோடும்
உணர்ச்சி வெள்ளத்தின்
கதகதப்பில் நீராடி,
சிறகுகள் உலர்த்தும் நேரம்....

சீதனத் தாழ்ப்பாள் போட்டு

என்னை
சிலுவையில் அறைந்துவிட்டு
கனவுகள் சுகமா என்று
கண்ணடித்துக் கேட்கிறது - இந்த
கனிவில்லா சமுதாயம்.

வாய்ப்பேச்சிலேயே

வரலாறுகளை அழித்தெழுதும்
வல்லமை கொண்ட
மாப்பிள்ளைமாரும்
வந்தவரை லாபம் என்று
வாய் பொத்தி நிற்கிறார்கள்.

என் உணர்வுகளின்

உரோமங்களைப் பிடுங்கிவிட்டு,
நான் துடித்துக் கதறும் வலிகளை
தூரத்தில் நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஒரு கழுகுக் கூட்டம்.

ஓநாய்கள் வந்து

உட்கார்ந்து பார்க்கிறது
இந்தச் சின்னக் குருவியின்  முதுகிலே .

சுமை தாங்க முடியாமல்

சிறகுகள் சரிகிறது.
இமை மூட முடியாமல்
இரு விழி அழுகிறது.

பூக்களே சிரிக்காதீர்கள்.

உங்கள் புன்னகையில்
பூரிக்க முடியவில்லை.

வேதனை தீயில் - நெஞ்சு

வெந்து தகிக்கிறது.
சோதனைக் காட்டில் இதயம்
நொந்து அலைகிறது.

என்னைப்போல் எத்தனையோ

சிறகுடைந்த பட்டுப்பூச்சிகள் - தங்கள்
கனவுத் தோட்டத்தில்
புதைகுழிகள் தோண்டி
உணர்வுகளையும் ஆசைகளையும்
ஆழமாய்ப் புதைத்துவிட்டு,
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்கிக்கொண்டே,
காலத்தின் வேகத்தோடு
நடைபோட முடியாமல்
தள்ளாடி விழுகிறார்கள்.


இருந்தபோதும்
நாளையின் மீது
நம்பிக்கை இருக்கிறது.


பெண்ணியத்தின் பெருமையை
பங்கு போட்டு விற்கும்
இந்தச் சீதனச் சந்தையை
உடைத்தெறிய
நெஞ்சில் உரம் கொண்ட,
நேரிய குணம் கொண்ட,
இளைய தலைமுறையொன்று
வீறுகொண்டு எழுந்துவரும் .
அவர்களின்
காலடித் தடங்களை
பற்றிக் கொண்டு
பல விருட்சங்கள் முளைக்கும்.

பெண்மையை கேலி செய்யும்

இந்தச் சீதன அரக்கனின்
கழுத்து நரம்புகளை முறுக்கி
கடலில் எறிந்துவிட்டு,
தங்கத் தண்ணீரில் குளித்தெழுந்து
புது சரித்திரம் படைத்திட - அவர்கள்
வருவார்கள்.

ஒரு மலர்வனத்தைப்போல

மௌனமாய் புன்னகைத்து
அவர்கள் கரம் பற்றி
நாங்கள் நடப்போம்.

பூக்களே நீங்களெல்லாம்

அப்போது சிரியுங்கள்.
உங்கள் புன்னகைத் தேனை
நாங்கள்
பருகிட வருவோம்,

Post Comment

Thursday, May 26, 2011

பெயர் மாற்றம் - 'SOCIAL BIRD' 'நிழல் பூக்கள்' ஆகிறது.

என் வலைப் பதிப்பில் சில மாற்றங்களை செய்துள்ளேன். அழகான தமிழ் மொழியில் ஆக்கங்கள் செய்யும் நாம் எதற்காக ஆங்கிலத்தில் பெயர் வைத்தோம் என்று ஒரு உறுத்தல் இருந்தது. இப்போது அந்த உறுத்தல் போய் விட்டது. நான் ஒரு கனவுலகத்தில் வாழ்பவள் என்பதால் இந்த ' நிழல் பூக்கள்' என்னும் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். உண்மையில் நிழல்கள் என்றுதான் பெயர் வைக்க நினைத்தேன். ஆனால் யாரோ ஒருவர் எனக்கு முந்தி அந்தப் பெயரை வைத்துவிட்டதால் அந்தப் பெயர் எனக்கு மறுக்கப்பட்டு விட்டது. இருந்தாலென்ன, இந்தப் பெயர் கூட அழகாய்த்தான் இருக்கிறது. போதாக்குறைக்கு என் உணர்வுகளை பூக்கள் என்று வேறு சொல்கிறது. என் மென்மையான உணர்வுகளை பூக்கள் என்று சொல்வதும் பொருத்தமாய்த்தான் இருக்கிறது. அதனால் இந்தப் பெயரை நான் நேசிக்கிறேன். இப்படியொரு பெயரோடு என் உணர்வுகள் பயணிப்பது பெருமையாய் இருக்கிறது.
அது சரி, நான் மட்டும்  பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் சரியாகுமா? என் உணர்வுகளில் இளைப்பாறிவிட்டு கட்டாயம் உங்கள் கருத்துக்களையும் பொறித்து விட்டுப் போங்கள். என்னப்பா இது, ஒருத்தரும் கருத்திடவில்லை, நான் எழுதுவது கவிதையே இல்லையா அல்லது மற்றவருக்கு புரியும்படியாய் இல்லையா என்ற எண்ணம் கூட அடிக்கடி தோன்றுகிறது. எப்படியோ, என் உணர்வுகளின் உந்துதலால் எதையும் எதிர்பார்க்காமல் எழுதிக் கொண்டிருக்கிறேன், என்றைக்கோ ஒருநாள் எனக்கான அங்கீகாரம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் இந்த நிழல்  பூக்கள் கவிதைத் தேனை சிந்திக்கொண்டிருக்கிறது. அருந்திப் பாருங்கள். என்னது, கவிதையே இல்லையென்றால் அதையும் சொல்லிவிடுங்கள்.

Post Comment

மனசாட்சி

என்னோடு
வாயாடும்
என்னுடைய
குரல்கள்.

என் விழியைக்

குத்தும்
என்னுடைய
விரல்கள்.

என்னையே

சுடுகின்ற
என்னுடைய
கனல்கள்.

என் கன்னத்தில்

அறைகின்ற
என்னுடைய
கைகள்.

என் தட்டில் உண்டு,

என் சட்டை போட்டு,
என் கட்டிலில்
புரண்டுகொண்டு,..
என் மார்பிலேயே
எட்டி உதைக்கும்
என்னுடைய மனசாட்சி.

Post Comment

Wednesday, May 25, 2011

மரங்களே...

பூமிக்கு அழகு தரும்
புதுக்கவிதை
நீங்கள்தான்.

மண்ணுக்கு

இறைவன்
சூட்டிய
மணி மகுடம்
நீங்கள்தான்.

உலகுக்கே

குடைபிடிக்கும்
உத்தமர்கள் 
நீங்கள்தான்.

காற்றிலே

சுரம்பிரிக்கும்
கலைஞர்கள் 
நீங்கள்தான்.

சின்னதாய்

ஒரு வித்தில்
சுருண்டு கிடந்தாலும்,
மண்ணிலே
விழுந்தவுடன்
மலையாக
உயர்கிறீர்கள்.

சூரியனின்
சாறுறிஞ்சி
சுவைக்கத்
தருகிறீர்கள்.

உற்பத்திச் சாலையிலும்,
ஊர்திகளின் உலாக்களிலும்,
உதிரிகளாய் சுரக்கின்ற
கரியமிலத் தயிரை
கடைந்து
பருகியன்றோ
உலகத்தின் காற்றின்
உஷ்னத்தை தணிக்கிறீர்கள்   .

வானத்தில் கரைந்திருக்கும்
வன்னூதாக் கதிர்களின்
வன்முறைகள் 
ஒழுகிடாமல்
ஓசோனின் ஓட்டிலுள்ள
ஓட்டைகள் அடைக்கிறீர்கள்.

சுவாசத்தின் எச்சங்கள்
சேர்ந்து உருவான
காற்றின் அழுக்குகளை
கழுவித் துடைக்கிறீர்கள்.

இன, மொழி பேதம் பார்த்து
நீங்கள்
இறக்கைகள் விரித்ததில்லை.
எளியவன் சாய்ந்தபோதும்
ஏந்திட மறுத்ததில்லை.

கழுத்துக்கு மாலை
வீழுமென்று
காற்றுக்கு நீங்கள்
அசைந்ததில்லை.
கைதட்டல் வேண்டி
என்றும்
கலர் கலராய்
பூத்ததில்லை.

புகழாரம்
பெறுவதற்காய்
பழம் காய்கள்
காய்த்ததில்லை.
புன்னகையும்
கண்ணீரும்
பொய்யாக
உதிர்த்ததில்லை.

சில
கோலாடிக் காம்புகள்
உங்கள்
கிளைக் கைகள் உடைத்தாலும்,
வீறாப்புக்காரர்கள்
வேரோடு அழித்தாலும்
விறகாகிக் கூட
விருந்துகள்
படைக்கிறீர்கள்.

எதையுமே
வேண்டிடாமல்
எல்லாமே தருகிறீர்கள்.
எதனிடமும்
தோற்காமல்
எவரெஸ்டில்
இருக்கிறீர்கள்.

மரங்களே நீங்கள்தான்
மனிதனின்
பள்ளிக்கூடம்.
உங்கள்
மார்பிலே
சுரக்கும்  பால்தான்
மாந்தர்க்கு
சொல்லும்  பாடம்.

Post Comment

Sunday, May 22, 2011

நீளுகின்ற பயணங்கள்

ஒரு  முடிச்சுக்குள்ளிருந்து 

அவிழ்த்து  
எறியப்பட்டு
வீதியில் 

விழுந்தபோது
புதுப் பயணங்கள்
தொடர்ந்தேன்.

என் பாதையின்
நீளம்
தெரிந்திருந்தும்
ஒரு
நப்பாசையுடன்
பயணித்துப் பார்த்தேன்.

இப்போது,
என் பாதைகள்
முடிந்துபோயின.
என்
நிறைவு பெறாத 
பயணங்கள் மட்டும்
நிராதரவாக.

முடியவில்லை.
என் பாதை தெரியாத
பயணங்களை
நிறைவு செய்ய
முடியவில்லை.

எனக்குள்ளிருந்து 
என்னை
சுழற்றிவிடும்  
ஏதோ ஒரு உணர்வின்
உந்துதலால்
என்னால்
ஓய்ந்திருக்க  
முடியவில்லை.

சந்துகளிலும்
பொந்துகளிலும்
என் சக்கரங்கள்
எதையோ தேடி
சுழன்றுகொண்டிருக்கின்றன.   

2004

Post Comment

உயிர் தொடா வலிகள்

மனசு
ரணமாய்
கிழிக்கப்பட்ட
பொழுதுகளில்
கண்ணீரைப் போல
கவிதையும் வருமா?

ஏனோ,

பூதாகரமாய்த்
தோன்றும்
வாழ்க்கைப் புதரில்
எனக்கு
பூப்பறிக்கும்
எண்ணம் வந்தது.

உணர்வுகளில்

ஏமாற்ற
முட்களின்
எத்தனையோ
கிழிசல்கள்.

பனித்துளிகளாய்

இரத்தச்
சொட்டுக்கள்
படர்ந்திருக்கும்
அபாயப் புல்வெளிகளில்
அலைமோதுகிறது
வாழ்க்கை.

இந்தப்

புரட்சிக்  களத்துக்கு
அப்பாலும்,
இந்த வன்முறைகள்
குத்திப் பெயர்த்துவிடாத
மனதின் ஆழத்தில்
சின்னதாய்
ஒரு -
நம்பிக்கை
ஒளிக்கீற்று
காரிருளில்
மின்மினிப் பூச்சியின்
வெளிச்சமாய்.

அதுதான்

என் கண்ணீரை
கவிதையாய்
மொழிபெயர்க்கும். 


2005

Post Comment

பெரும்பாலும் என் கவிதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்த வலை பதிப்பில் என் உணர்வுகளைத் தரிசித்து உங்கள்  விமர்சனத் தடங்களை விட்டுச் செல்லுங்கள். எந்தப் படைப்பாளியும் தன்னை புடம்போட்டுப் பார்க்கவும், புதுப்பித்துக் கொள்ளவும் ஆக்கபூர்வமான விமர்சனங்களைத்தான் எதிர்பார்க்கிறா(ன்)/ள். என்னைத் துலக்கக்கூடியதான உங்கள் விமர்சனத் தூரிகைகளை நானும் எதிர்பார்க்கிறேன். இன்னும் இன்னும் என் எழுத்துக்களின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் அழகுபடுத்த வேண்டும் என்ற ஆசையுடன்,
Riphnas Mohamed Salihu.

Post Comment

என் கனவுகள்

என்
இளமைக்காலத்தின் 
எழுத்துப் பிழைகள்.

என்
பிஞ்சு விரல்களின்
பிள்ளைக் கிறுக்கல்கள்.

நான்
கிழித்துப் போட்ட
கவிதைத் தாள்கள்.

என்னிடமிருந்து
சிதறி விழுந்த
சில்லறைக் காசுகள். 


2005

Post Comment

Friday, May 20, 2011

காத்திருப்பாயா பெண்ணே!

காலமொன்று
வரும் கண்ணே.
காத்திருப்பாயா?

உன் ஜன்னல் இடுக்குகளில்

நீல வானம் பதுங்கியதும்,
என் மொட்டை மாடியிலே
நிலா வந்து உறங்கியதும்,
நந்தவன நாட்கள் கண்ணே.
ஞாபகத்தின் வேர்கள் அவை.

வேர்கள் கண்ட கனவெல்லாம்

முட்டி முளைத்து
இலையாய் கிளையாய்
உருவாகும் வேளை,
காற்று நம்மைப் பகைத்தது.
கனவின் கிளையை உடைத்தது.

அப்பாவின்

அரசாங்க வருமானம்
அடுப்பெரிக்கப் போதவில்லை.
அம்மாவின்
ஆஸ்பத்திரி பில்களுக்கு
அடகுக்கடை போதவில்லை.

இரண்டு தட்டு வீடும்

இலட்சங்களில் காசும்
இல்லாத படியால்
அக்காவின்
அந்தரங்கக் கனவுகள்
அந்தரத்தில் தொங்குதடி.

தாவணிப்

பூக்களாய்
தளைத்து நிற்கும்
தங்கைமாரில்
கால்மணித் தங்கத்தையும்
காண்பதற்கு முடியவில்லை.

வேலியிலே இத்தனை

முட்களை
வைத்துக்கொண்டு
எப்படிக் கண்ணே -
என்னால்
பூக்களில்
மெத்தை நெய்து
புரண்டு படுக்க முடியும்?

பாசம் என் கனவை

கட்டிப் போட்டது.
காதல் என் இதயத்தை
கண்ணீரால் சுட்டது.

விழிகளிலே

நீர் தாங்கி
நான் 
விடைபெற்ற வேளையிலே,
நீ உடைந்தழுதாய் .
உன் கண்ணீரை
ஏந்திக்கொள்ள
முடியவில்லை.

மன்னித்துவிடு பெண்ணே.

உனக்குக்
கனவுகளும் தந்தேன்.
கண்ணீரும் தந்தேன்.

கடல் தாண்டி வந்தேன்

தங்கத்தில் மீன்பிடிக்க.

கரைசேரும் நன்னாள்

கட்டாயம் வரும் கண்ணே.

காலம் பதில் சொல்லும்.

அதுவரைக்கும் -
காதலோடு
காத்திருப்பாயா பெண்ணே!


2011

Post Comment

'ஏடி கள்ளச்சி' பாடல்- ஒரு அழகான இசையனுபவம்

அண்மைக் காலத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த ஒரு பாடல் தான் தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏடி கள்ளச்சி' பாடல். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கவே  தோணுகிறது. அப்படியொரு அற்புதமான பாடல் இது. என் மனதை மிகவும் கொள்ளை கொண்டு விட்டது.
இந்தப் பாடலின் இசையில்தான் நான் முழுவதுமாக மயங்கிப் போனேன். இந்த இசையில் திளைக்கும்   போதெல்லாம் இதயத்தில் தேன் சுரக்கிறது. பாடலின் வரிகள் மிகவும் அருமை. பாடகர்களான விஜய்பிரகாஷ் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோரின் குரலில் அப்படியே மூழ்கிக் கிடக்கலாம் போலிருக்கிறது. இப்படியாக இந்தப் பாடலின் ஒவ்வொரு அம்சமும் அப்படியே அணுவணுவாக அனுபவிக்க வைக்கிறது.
இந்தப் பாடலின் பாடலாசிரியருக்கு அதாவது என் பேரபிமானத்துக்கும் மரியாதைக்குமுரிய  கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு  தேசிய விருது கிடைத்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறேன். அது அவருக்கே உரித்தான  விருது. அவருக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வார்த்தைகளே புரியாமல் தாம் தூம் இசையில் தமிழ்ப் பாடல்கள் குத்துயிராய் ஒலிக்கின்ற இந்தக் காலத்தில் இப்படியான அற்புதமான பாடல்களை கேட்கும்போது தமிழும் இசையும் ஒருபோதும் தாழ்ந்து போகாது என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்தப் பாடலுக்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.
தமிழ் சினிமா உலகத்திலிருந்தும், இசைக் கலைஞர்களிடமிருந்தும் இப்படியான மனநிறைவான பாடல்களை இன்னுமின்னும் எதிர்பார்க்கிறேன்.

Post Comment

துடுப்பொன்று வேண்டும்.

என்னை
இந்த உலகத்தின்
எந்தப் பொருளாலும்
எந்த உயிராலும்
திருப்திப்படுத்த
முடியவில்லை.

என் பார்வையில்

இந்த உலகமே
அர்த்தமற்றதாய்த்
தெரிகிறது.

நான்

எனக்கு வெளியே நின்று
என்னை
எட்டிப் பார்க்கும் போது
நானே
பூஜ்ஜியமானவளாய்த்
தெரிகிறேன்.

என் உள்மனத்தின்

உணர்ச்சிகள்
நான் என்ற
வெறுமைக்குள்
வாழ முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றன  .

எனக்குள்ளே
ஏகப்பட்ட  முரண்பாடுகள் .

என்னை எனக்கு
புரிந்துகொள்ளத்  தெரிகிறது.
புதுப்பித்துக்  கொள்ளத்தான்
தெரியவில்லை .

இப்படியே ,
செல்லரித்துப்போன
என் வாழ்க்கையில்
திருத்தங்கள்  எதுவும்
நிகழ்த்தப்படாவிட்டால்
காலத்தோடு  நானும்
கரைந்து
காணாமல்  போய்விடுவேன் .

எனக்கு
வாழ்க்கை  பிடிக்கவேயில்லை .

காற்றின்  திசையோடும்
அலைகளின்  திசையோடும்
அலைந்து  அலைந்து
என் வாழ்க்கைப்  படகு 
தள்ளாடிக்கொண்டிருக்கிறது .

அடர்த்தியான  ஒரு  காற்றில்
இந்தப்  படகு
மூழ்கி
மூச்சுத் திணறத்தான் போகிறது .

நம்பிக்கை என்னும்
துடுப்புகள்  கொடுத்து
அதை
நிமிர்த்தி வைக்கவேண்டும் .

பல  
அலைகளோடும் 
புயல்களோடும்
போராடிக்கொண்டு
முயற்சியுடன்  அது
முன்னேற்றம் காணவேண்டும் .


2004 

Post Comment

Thursday, May 19, 2011

என் பேனா முனை

இந்தப்  பேனா!

இதுதான் 

என்னை -

எழுத்துக்  கடலுக்குள் 

அமிழ்த்தி  எடுப்பது .ஒன்று  சொன்னால் 

ஆச்சரியப்படுவீர்கள் .என்  மூளையை  விடவும் 

அதிகமாய்ச்  சிந்திப்பது 

என்  பேனா  முனைதான் .பேனாவின்  மூடி  திறக்கும்வரை 

நானொரு 

ஞானசூன்யம்.காகிதமும்  என்  பேனாமுனையும் 

கை குலுக்கிக் கொண்டபின்தான் 

என் அறிவும் ஹோர்மோன்களும் 

சுரந்துகொள்கின்றன.சிலவேளைகளில் 

எனக்குக்  கவிதை  வரும்.

ஆனால்,

எழுத  வராது.சிலவேளைகளில்  

எனக்கு  எழுத  வரும்.

ஆனால்,

கவிதை  வராது .கவிதையும்  எழுத்தும் 

ஒன்றாய்  வரும்போது 

இந்தப்  பேனாமுனைதான் 

என்  உணர்ச்சிகளை 

சாறு  பிழியும்.அந்தத் 

துளித் துளிகள்தான் 

கவித் துளிகளாய் 

மொழி  மாறும் .

2002

Post Comment

தூது செல் காற்றே..

காற்றே  கொஞ்சம்  வருவாயா ?
என்  இமையை  மெல்லத்  திறப்பாயா ?
கண்ணில்  மிதக்கும்  கனவுகளை 
என்  காதலன்  விழிக்குள்  புதைப்பாயா ?

பேதை  நெஞ்சின்  காதலினை 
நாயகனிடத்தில்  உரைப்பாயா ?
நாவினால்  மறுத்தவன்  உரைத்தாலும் -என் 
சாவிற்கு  அழைத்ததாய்  சொல்வாயா ?

ஈரமான  நினைவுகளை 
இனிக்க  இனிக்கத்  தந்தவனே -நெஞ்சில் 
பாரமான  சுமையாகி -எனை 
பைத்தியம்  ஆக்கினான்  அறிவாயா ?

ஊண்  உறக்கம்  மறந்துவிட்டு 
உயிர்தேடி  அலைந்ததுவும் ,
நிம்மதியைத்  தொலைத்துவிட்டு 
நித்திரைக்காய்ப்  புரண்டதுவும்,

எதை எதையோ  இழந்துவிட்டு 
அவன் நினைவால்  வாடியதும்,
எடுத்தவனிடத்தில்  உரைப்பாயா ?
என்  உயிரை  மீட்டுக்  கொடுப்பாயா ?

அவன்  விட்டுச்சென்ற  சுவாசக்காற்றை 
என்  சுவாசப்பையில்   திணிப்பாயா ?
காற்றே  உன்னை  கெஞ்சுகிறேன் .
ஈதென்  கடைசி  ஆசை  செய்வாயா ?

2002

Post Comment

வாழ்த்து மடல்

என் பாதையில்
ஒரு பூ
உதிர்ந்து விழுகிறது
மரம்
எனக்கனுப்பிய
வாழ்த்து மடல்களை
சுமந்துகொண்டு. 

2005

Post Comment

தீபமா? தீப்பிழம்பா?

எனக்குள்ளே
எரிந்துகொண்டிருப்பது
என்ன?
தீபமா?
தீப்பிழம்பா?

தீபம்

அமைதியானது.
தன் ஒளியால்
பிறரையும்
பிறர்  சந்தோஷத்தில்
தன்னையும்
திருப்திப்படுத்திக் கொள்கிறது.

தீப்பிழம்பு

நொடிப் பொழுதில்
ஒரு
யுகப் புரட்சியையே
நிகழ்த்தி  முடிக்கிறது.

தீபம் -

ஒரு புள்ளியிலிருந்து
உலகத்தை
எட்டிப் பார்க்கிறது.

தீப்பிழம்பு -

உலகத்தின்
பார்வையையே
ஒரு புள்ளியில் குவிக்கிறது.

தீபம் -
சிலவேளைகளில்
என் மூச்சுக் காற்றிலேயே
மூச்சுத் திணறுகிறது.


தீப்பிழம்பு-

என் மூச்சின்
வெப்பத்தையும்
சேர்த்துக் கொண்டு
முன்னேறிப் போகிறது.

தீபம்

இருளுக்கு
ஒளி கொடுக்கிறது.

தீப்பிழம்பு-

சிலவேளைகளில்,
ஒளியைக் கூட
இருட்டாக்கி விடுகிறது.

நான்,

தீபமாயிருப்பதா?
தீப்பிழம்பாயிருப்பதா? 


2005 

Post Comment

Tuesday, May 17, 2011

இரத்தல் இழிதன்றோ!

முப்பதுக்கும் நாப்பதுக்கும்
இடையில்தான்
உனக்கு வயதிருக்கும்.
மூப்பின் நரைகூட
உன் தலைமுடியை
தொடவில்லை.

வாட்ட சாட்டமாய்
வடிவாய்த்தான் இருக்கின்றாய்.
இருந்தும் எதற்கிந்த
ஈனப் பிழைப்புனக்கு?

நீ செய்யும் தொழிலுனக்கு
கேவலமாய்த் தெரியலையா?
தெருத்தெருவாய்த் திரிகையிலே -உன்
தன்மானம் சுடவில்லையா?

அடைத்திருக்கும் கதவினை
தட்டுகிறாய் நீ.
அடுக்களையில் வேலைகளை
அப்படியே போட்டுவிட்டு,
அரும்பிய வியர்வையினை
அரைகுறையாய் துடைத்துவிட்டு,
யாரோ எவரோ என்று
ஓடி வருகின்றேன்.

கூனிக் குறுகியுன்
குருதியும் உறைந்துவிட,
நாணிக் கோணி நீ
நாற்புறமும் பார்த்துவிட்டு,
மெல்லப் பல்லிளித்து,
'ஹதியா தாங்க' என்று
கையேந்தி நிற்கின்றாய்.

உச்சிச் சூரியன்
எப்படித்தான் என்னுடைய
நுனி மூக்கில் இறங்கினானோ!
என் கண்ணின் சுவாலையிலே
நீ
கருகிப் போயிருப்பாய்.

கை கால்கள் எல்லாமே
நல்லாய்த்தான் இருக்கிறது.
கட்டுடலும் கூட
கச்சிதமாய் இருக்கிறது - என்று
எண்ணிய நான் ஏதேதோ
என் வாயால் கொட்டிவிட,

முறைத்து என்னை
விழிகளாலே சுட்டுவிட்டு,
இழுத்து தடாரென
என் கதவால் அறைந்துவிட்டு,
விருச்சென்று  நடக்கின்றாய்.
விறைத்துப்போய் நிற்கின்றேன்.

அப்படி நானென்ன
பொல்லாப்பைச் சொல்லிவிட்டேன்.
இரத்தல் இழிதென்றும்,
இடியப்பம் அவித்தாலும்

உன் குடும்பம் வாழும் என்றும்,
நிலக்கடலை வறுத்தாலும்
வறுமைப்பேய் ஓடும் என்றும்,
நல்லதைத்தானே
நானுனக்குச் சொன்னேன்.

இரத்தலினை ஈனத்தொழில்- என்று
இகழ்ந்ததாலா உனக்குக் கோபம்? - ஓ..
செய்யும் தொழில் தெய்வமெனும்
கொள்கையோடிருக்கிறாயோ?
இல்லை,
சும்மாவே சாப்பிட்டு
சுணையற்றுப் போனதனால்,
கையேந்தும் வேலை
கால்களுக்குப் பழகியதால்,
செய்யாதே என்று சொன்னால்
சூடாகிப் போகிறாயா?சோம்பேறிப் பேயின்
சிறைப்பிடியில் கிடக்கின்றாய்.
உழைப்பாலே வரும் இன்பம்
உணராமல் இருக்கின்றாய்.


உடம்போடு உயிர் பிழிந்து,
உதிரத் துளி சிந்தி,
உழைக்கின்ற வர்க்கத்தின்
கால் வயிறு நிரம்புமுன்னே
முழு மனதும் நிறையுமந்த
இன்பத்தின் சுவையை நீ
ஒரு தடவை சுகித்தாலும்
சத்தியமாய் சொல்கின்றேன்
இன்னொரு கதவினோரம்
ஒருபோதும் நெளியமாட்டாய்.


ஹதியா - தர்மம்

2011

Post Comment

Monday, May 16, 2011

எனக்கான வானம்

என் சாலைகளில் 
பல
நறுமண  மலர்கள் .

நான்

நடக்கும்  போது
என் மீது
பன்னீர்  தெளிப்பதற்காகவே
இந்த
மரஞ்  செடி  கொடிகளெல்லாம்
இராத்திரிப்   பனியில்
யாகம்  செய்கின்றன .

என்

இதழ்கள்  சிந்தும்
சிரிப்பின் சந்தத்தைத்தான் 
சங்கீதமாக்கி
அந்தப்  புல்லாங்குழல்
உங்கள்
காதுகளுக்குள்
கிசு  கிசுக்கின்றன .

என்
பாதச் சுவடுகள்
பதிந்த
மணல்களில்தான்
இந்த நதிகளெல்லாம்
புரண்டு  வந்து
தங்களை
புனிதப்படுத்திக் கொள்கின்றன .

என் விழியசைவின்
வழிகாட்டலில்தான்
நட்சத்திரங்கள்
நடந்து  செல்கின்றன .

நான்
துயில்  கொள்ள  வேண்டும்
என்பதற்காகத்தான்
சந்திரனை  எனக்கு
தாலாட்ட
அனுப்பிவிட்டு
அந்த
அந்திச்  சூரியன்
இரவு  முழுவதும்
இருட்டுத்  தவம்
புரிகின்றான் .

வானம்  பரந்ததும்,
பூமி  விரிந்ததும், 

மலைகள்   வளர்ந்ததும்,
நதிகள் வளைந்ததும், 
எல்லாமே  எல்லாமே
எனக்காகத்தான்.

இறைவன் என்னை
ஆசீர்வதித்து
அனுப்பி வைத்தான். 2005


Post Comment

ஊமைக் குமுறல்

நூலறுந்த
பட்டம்போல
திக்குத் தெரியாமல்
திசை மாறிப் பறக்கிறது
என் வாழ்க்கை.

பூக்கள்
பறிக்கும்
கனவுகளோடுதான்
உன் -
கை கோர்த்து
நடந்தேன்.

நானே
உன் மேசையின்
சாடிப் பூவாய்த்தான்
பறிக்கப்பட்டிருக்கிறேன்
என்ற
அவலம் எனக்கு
அப்போது புரியவில்லை.

கிரகங்கள் தாண்டும்
உன்
பயணங்களில்
துணை வரத்தான்
நான்  நினைத்தேன்.

நீயோ  - உன்
வீட்டு  முற்றத்தின்
விளிம்புகளைத்தான்
எனக்காக
விரித்து வைத்தாய்.

ஒளியுதிர்க்கும்
என்
இளமையின் முத்துக்களை
உனக்கு
பொன்மகுடமாய்
சூட்டிக் கொள்வாய்
என்று நினைத்தேன்.

அந்த முத்துக்களையே
நீ
அடிக்கடி
உரசிப் பார்க்கிறாய்.

பரந்து  கிடக்கும்  வானத்தில்
சிட்டுக்  குருவியாய்
சுற்றித்  திரிய
ஆசைப்பட்டேன்.

இன்று  -
உன் சுவர்களுக்கிடையில்
சிறகுடைந்து
அழுகிறேன் .

வண்ண  வண்ண 
வானவில்லாய்
வந்துபோன
என்
வாலிபக் கனவுகள்
இன்று
மங்கிப் போன
பழைய புகைப்படம் போல
பரிதவித்துப் பார்க்கிறது.

உன் கூட்டுக்குள்
சிறகடிக்கும்
லவ் பேர்ட்ஸ் போலவும்
நீ சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை போலவும்
நீ கைகாட்டும் இடத்தில்
வால் சுருட்டி உட்காரும்
நாய்க்குட்டி போலவும்
இன்னொரு
செல்லப் பிராணியாய்த்தானா
என்னையும் நீ
கொண்டுவந்தாய் ?

வார்த்தைகள் 
வெளியாகாமல்
ஊசித் துளைகளூடே  
இந்தக் 
காட்டுக் குழல்
ஊமையாய் அழுகிறது.

நீ
அலங்கரித்துக்
கொலுவில் வைக்க 
நானென்ன 
பொம்மையா?

என்
கால்களையும் கைகளையும்
கட்டிப் போட்டுவிட்டு
நீச்சல் குளத்தினை
பரிசாய்த்
தருகிறாய்.

என்
சிறகுகள்
வலிக்கிறது.

குரல்வளை
நசுக்கப்பட்ட
ஒரு குயில்
குமுறி அழுகிறது.


2011


Post Comment

Sunday, May 15, 2011

நெருக்கடி

சுமக்க முடியாத
சுமைகளுடன்
ஒரு
சிட்டுக்குருவி
தள்ளாடுகிறது.


சிறகுகளே இங்கு
சுமையாயிருக்கும்போது
எப்படி
சிலுவைகளை
சுமந்து செல்வது?


ஒற்றையடிப் பாதையொன்றில்
ஏழெட்டு விமானங்கள்
ஒன்றாகத்
தரையிறங்க வேண்டுமென்றால்
எப்படிச் சாத்தியம்?


எதிலுமே ஒட்டாமல்
விரல்கள்
விலகி நிற்கும் போது
எந்தக் கைகளால்தான்
காவியம் படைக்க முடியும்?


நான்
பின்னிக்கொண்ட
வலைகளில்
நானேதான்
சிக்கிக்கொண்டேன்.


என் விரலே
என் விழியைக்
குத்தும்போது,
இனி -
எந்த விரல் தான்
என் கண்ணீரை
துடைத்துவிட முடியும்?


சுழல்காற்றில்
சிக்கிக்கொண்டன
என் துடுப்புகள்.


கரை சேர
முடியாமல்
தத்தளிக்கிறது
என்
வாழ்க்கை ஓடம்.

2011

Post Comment

அருவி

நீ தாவிப் போகையிலே
தழுவிப் பிடித்து
கிசுகிசு மூட்டுகின்றனவா
அந்த
கூழாங்கற்கள் ?
உன் சங்கீதச்
சிரிப்பில்
நீ
சொல்லிவிட்டுப் போவதென்ன?


2005

Post Comment

Saturday, May 14, 2011

கத்தும் கவிதைகள்

என் கவிதை
என் இதயத்தின்
காயங்களுக்கு
களிம்பு
தடவியிருக்கிறது.

என்
கண்ணீரின் சூட்டை
கழுவியிருக்கிறது.

இயற்கையின்
வார்ப்புகளில்
நான்
மெய்சிலிர்த்த
பொழுதுகளில்
இதயத்தில் தேனாய்
சுரந்திருக்கிறது.

என்
கால்களின் செருப்புகள்
களவாடப்பட்டிருந்த  வேளை
என்னை
தன்  சிறகுகளில்  ஏற்றி
சுமந்திருக்கிறது .

என்
முதுகெலும்பு
முறிந்து  விழுந்த
தருணங்களில்
ஊன்றுகோலாய்  மாறி
தாங்கியிருக்கிறது  என்னை .

பருவம்  தந்த
மதர்ப்பில்
விழுதுகளில்  வேரூன்றி  
விருட்சமாய்
விரிந்து  கிடந்த
என்-
காதல்  ஆலமரத்தின்
கிளைகளில்  தாவி
குதூகலித்திருக்கிறது .

விடிவெள்ளியாய்  நான்
தனித்திருந்த  பொழுதுகளில்
உடுக்கூட்டமாய்  என்னோடு
உறவாடியிருக்கிறது .

இப்படி-
என்
உணர்வின் சிலிர்ப்புகளாயே
இதுவரை
என் கவிதை
இருந்திருக்கிறது.

இனி- என்
கவிதையின் கைகள்
நீளும்.

இன்னொருவர் கண்ணீரை
தன் கண்ணில்
ஏந்தும்.

துப்பாக்கி 
முனைகளில்தான்
சமதர்மம் பேசும்.

பனித் துளிகளோடும் 
பண்பாடும்
குயில்களோடும்
கைகோர்த்துக் கிடந்த
என் கவிதை
இனி
நெருப்புமிழும்
நட்சத்திரங்களோடு
ஒப்பந்தம்
போடும் .

நிலாச் சோறு
உண்டு களித்த
கனாக் காலம்
முடிந்து போனது
என் கவிதைக்கு.

இனி
நிகழ்காலத்தின்
சகதிகளுக்குள்
புரண்டெழுந்து
பாடும் .

வறியவன்  வயிறுகளில்
பசித்து  அழும் .

உழைப்பவன்
வியர்வையின்
உப்புக்களை
உலகச் சந்தையிலே
விலை பேசும்.

முகமூடிக் 
கலாச்சாரத்தின்
முதுகுத்  தோலை
பிய்த்தெறியும்.


வேலை தர  முடியாத
பல்கலைக்கழக
பட்டங்களையும்
மாலை  மாட்டும்
போட்டோக்களையும்  
நடுத்தெருவில்  போட்டு
கூவி  விற்கும் .


கண்கட்டிய
தேவதையின்
கைத்தராசு
வலியவன் கைகளில்
விலை போய் விட்டது.


இனி
எளியவன்
குரலில்
உரத்துக் கத்தும்
என் கவிதை.

Post Comment

ஒரு வார்த்தை பேசு.

உன்னில் எனக்கு
என்ன பிடித்தது?

உன்
அலட்சியப்  போக்கா?
அன்றேல்
அழகிய மூக்கா?

என்னைத் தவிர
எல்லாரையும்
நீ -
பார்த்துச் சிந்தும்
புன்னகைக் கீற்றா ?

என்னுடைய
விழிகளை
காந்தமாகக்
கவர்ந்து கொள்ளும்
உன் கனல் விழிகளின்
தாக்குதல்களிலிருந்து
தவிர்ந்துகொள்ள  முடியாமல்
தவித்துக்கொண்டிருக்கிறது
மனது.

போதும்.
இந்த வன்முறைகளை
நிறுத்திவிடு.

உனக்காகக்
காத்திருந்து
இதயம்
களைத்துப்போய்விட்டது .

ஒரே  ஒரு  புன்னகையால் 
என்   உயிரின் 
தேடல்களுக்கெல்லாம் 
முன்னுரை   எழுது  .

என்  வாழ்க்கையின் 
பள்ளமான 
பகுதிகளை 
உன் பாசத்தால் 
நிரப்பிவிடு  .

வா...
நம்   சங்கீதச் 
சிரிப்பொலிகளில் 
இந்த
சாலை  மரங்களெல்லாம் 
ஸ்வரங்களைக் 
கற்றுக்கொள்ளட்டும்  .

என் தேடல்கள்
தீர்ந்துவிடுமுன்
என் பாடல்கள்
ஓயந்துவிடுமுன்
உன்
மௌனத் தவத்தை
கலைத்து விட்டு
உன்
இதயத்தை
எனக்குள்ளே
ஒலிபரப்பிவிடு.


2005

Post Comment

இரவின் குளுமை

இந்த
இராத்திரிப் பொழுதின்
ரம்மியமான
நிசப்தத்தில்
பனித்துளிகளும்
புல்வெளிகளும்
செய்து கொள்கின்ற
இரகசிய ஒப்பந்தத்தை
ஒற்றை நட்சத்திரமே,
நீ -
எனக்கு
மொழிபெயர்த்துச்
சொல்லமாட்டாயா? 


2005

Post Comment

இதயத்தின் போராட்டம்

எம்
இதயங்கள்
இறுகிப்போய்விட்டன.

மனதின்

பரப்புகள்
மரணித்துப் போய்விட்டன.

ஓயாது  சுற்றும்

உலகம்  போல
ஓயாத  எங்களின்  
தேடல்களின்
இடைநடுவே ...

கொஞ்சம்  சிந்தியுங்கள் .
இதயங்கள் என்ன
எந்திரங்களா 
நீங்கள் 
முடுக்கும்   போதெல்லாம் 
இயங்குவதற்கு
?

உறக்கத்தின்
நடுப்  பொழுதில்
பூதாகரமாய்த்  தோன்றும்
நேற்றைய  நினைவுகளிலும் ...
சாதிக்கத்  துடிக்கும்
நாளைய  கனவுகளிலும் ....
அவை  -
அழகான 
ராத்திரிப் பொழுதுகளைக்கூட
தொலைத்து விடுகின்றன..

எங்கள்
இறுக்கங்களையும்
அழுத்தங்களையும்
சுமந்து  கொண்டிருப்பதால்
மனதின்
சுதந்திரம்
மறுதலிக்கப்படுகிறது.

இது  தொடர்ந்தால் ,
துடிக்கின்ற   இதயம்
சீக்கிரமே 
அடங்கி விடும் 
அபாயம்  இருக்கிறது .

ஆதலால் ,
இனி 
உங்கள்  வயிறுகளைப்  போல
இதயங்களுக்கும்
உணவு  கொடுங்கள் .

முடங்கிக்  கிடந்த
உணர்வுகளுக்கெல்லாம்
சிறகுகள் கொடுத்து
இஷ்டம் போலப்
பறக்க விடுங்கள்.

இந்த
எந்திர வாழ்க்கையின்
எல்லைகளுக்கப்பால்
உள்ள
ஒரு சுந்தர வாழ்க்கையை
சுவாசித்துப் பாருங்கள்.

பல தாழ்ப்பாள்களுக்குள்
தடுக்கப்பட்டிருக்கும்
மனதின்
மெல்லுனர்ச்சிகளை
வாய்க்கால்களுக்குள்
வடித்து விடுங்கள்.

உங்கள் மனங்களின்
வரண்டுபோன பகுதிகளை
நட்பென்னும் நதிக்குள்
நனைத்து எடுங்கள்.
முடிந்தால்
மூழ்கி  எழுங்கள்.

காதலையும்
பாசத்தையும்
ஹந்தானை மலையின்
காலைப்  பனிபோல்
இதயமெல்லாம்
நிரம்ப  விடுங்கள்.

உங்கள்
இதயங்களின்
இரத்த ஓட்டத்தை
தடுத்துக்கொண்டிருக்கும்
இரும்புத்  திரையை
உடைத்தெறியுங்கள் .

இதயத்தின்  தேவைகள்
மறுதலிக்கப்பட்டதனால்
அது
இறுகி இறுகி
இமயம் போல
உயர்ந்து விட்டது.

என்றைக்கோ ஒருநாள்
எரிமலைக் குழம்பாய்
கொதித்துவிடுமுன்,..

இப்போதே ..
எங்கள்
இதயங்களின்
இரத்த  ஓட்டத்தை
பனித்துளிகளால்
சுத்திகரிப்போம்.

இனி,
வாரத்தில்
ஒருநாளாவது,
இதயங்களுக்கு
சுவாசிக்க
இடமளிப்போம் . 2005

Post Comment

Wednesday, May 11, 2011

அன்னைக்கு ஒரு ஆலாபனை

எத்தனை கவிதைகள்
எழுதி மகிழ்ந்திருக்கிறேன்.
இருந்தபோதும்
எனைப்பெற்ற தாயே,
உன்னைப் பற்றி
ஒரு கவிதை
எழுத
முடியவில்லையே என்னால்.

எத்தனை முறை

முயன்று பார்த்திருக்கிறேன்.
உன் அன்பின்
பரிபூரணத்தை
பரிணமிக்க
எந்த வார்த்தையாலும்
முடியவில்லை என் தாயே.

ஆயிரம் மொழிகள் சேர்ந்து

அழுதழுது பாடினாலும்
உன் அன்புப் பார்வையின் முன்
அவை தோற்றுப் போகுமம்மா.

உன்னை வார்த்தைகளால்

சிறைப்பிடிக்க முடியாதம்மா.

என் உயிரை

பிழிந்து நான்
கவிதை புனைந்தாலும்
உன் தாயன்பின் முன் - அது
தரம் குறைந்து தானிருக்கும்.

உனைப்பற்றிப் பாட

எனக்குப் பயம்.

முன்பள்ளிப் பிள்ளையின்

முதலெழுத்துப் பழக்கம்போல
ஏதோ என் பாட்டுக்கு
ஏடாகூடமாய்
எதையெதையோ கிறுக்குகிறேன்  .
தாயே உன் பெருமை பாட
என் கவிக்குச்
சக்தியுண்டா?

கவிதைக்கு அழகு

உவமை.
இதுபோல அதுபோல
என்று
எதனோடும் உன்னை
இணைத்துப்பார்க்க
முடியவில்லை என்னால்.

உன்

தியாகத்தின் எல்லையை
தேடிப்பார்க்க முடியவில்லை.

தாயே,

உன்
தியாகத்துக்கும் பொறுமைக்கும்
தரணியிலே எதுவும்
நிகரில்லை அம்மா.

என் தாயே,

ஒரு ஆயிரம் தாய்மாரின்
அன்பையல்லவா
நீ எங்களுக்கு
அள்ளிச் சொரிகிறாய்.

உனைப்போல

இன்னொரு தாய்
இங்கே
பிறந்திருக்க முடியாதம்மா.

எங்களுக்காய்

நீ பட்ட வேதனைகள்
சொல்லும்போது,
அந்த
மொழிகள்கூட
அழுதுவிடுகின்றன.

உன்னைப்பற்றி

எழுத நினைத்தால்
இதயம் விம்மி
உடைந்துவிடப் பார்க்கிறது.
கண்ணீர் முட்டி
கதறியழத் தோணுதம்மா.


2011

Post Comment

Tuesday, May 10, 2011

ஞாபகங்கள்

என் ஞாபகங்கள்
என் இறந்தகாலத்தின்
இடிந்து விழுந்த
சுவர்களூடே
எட்டிப் பார்க்கின்றன.

காரணமே தெரியாமல்- நான்
கண்ணீர் விட்டழுத
அந்த
ஈரப்பொழுதுகளை - அவை
தடவிப்  பார்க்கின்றன.

என்னைச் சுற்றி
நான் பின்னிக்கொண்ட
அந்த சோக வலைகளிலே
அவை
சிக்கித் தவிக்கின்றன.

யாருக்கும் தெரியாமல்
என்
கண்ணீர் நதி
வடிந்தொழுகும் போது
எனைத் தாங்கிக்கொண்ட
கற்குவியலில்
அவை
மீண்டுமொருமுறை
கண்ணயர்ந்து போகின்றன.


2011

Post Comment

மறக்கத் தெரியவில்லை.

எப்போதாவது
வந்துவிட்டுப்  போகும்
உன்  ஞாபகங்கள்
ஒரு
விருந்தாளிபோல.

நம்
மௌனங்கள்
பேசிச் சிரித்து
புளகித்துக்கொண்ட
அந்த
வசந்தகாலத்தின்
வாசனை
எப்போதாவது-
என்னை வந்து
உரசிவிட்டுப் போகும்.

பார்வைகள்
பரிமாறிக்கொண்ட
ஆயிரம்
வார்த்தைகள்- அவ்வப்போது 
மயிலிறகால்
என் நெஞ்சை
வருடிவிட்டுப் போகும்.

பிரிவென்னும் காட்டில்
நாம்
வழிமாறும் போது
வார்த்தைகளை முழுங்கி
முந்திக்கொண்டு வந்த
நம்
கண்ணீர்த்துளிகளின்  ஈரம்
எப்போதாவது  வந்து
என்
கண்ணோரங்களில் 
கசிந்துவிட்டுப் போகும்.


2011

Post Comment

குழப்பம்

எண்ணக்கருக்களுக்குள்
அடக்க முடியாத
எண்ணங்கள்
நெஞ்சில் 
அலைமோதுகின்றன.


செய்வது 
சரியா  என்று
தெரியாத 
ஒரு மயக்கத்தில்....


விடையில்லாப்  புதிர்போல
ஆயிரம் 
கேள்விக்குறிகள்  எனக்குள்ளே .

மூச்சுக் காற்று
வெளியாக முடியாமல்
மூச்சுத்திணறி நிற்கிறது.

வாழ்க்கை போடும்
புதிர்களுக்கு
விடை சொல்லத் தெரியாமல்
வார்த்தைகள் ஊமையாகி
மண்டியிட்டுக் கிடக்கின்றன.

பிள்ளைக் கிறுக்கல்கள் போல
எத்தனை கோடுகள்
என் நெஞ்சில்.

புரிந்துகொள்ள முடியவில்லை.

புழுதிக் காற்றில்
புரண்டோடுகிறது
என்
மனக்குதிரை.


2011

Post Comment

சிலந்தி வலை

நான்கூட
ஒரு
சிலந்திதான்.
என்னைச் சுற்றி
பல
உறவு வலைகளை
பின்னிக்கொண்டிருக்கிறேன்.

2011

Post Comment

Monday, May 9, 2011

என் வருங்காலக் கணவனுக்கு

என்னைப் 
பெண்பார்த்துவிட்டுப்போன 
என்  வருங்காலக்  கணவனே (???),

நீ 
வருகிறாய்  என்று 
என்  வீட்டில் 
எத்தனை  தடபுடல்கள் .

இந்த  ஏற்பாடாவது 
சரியாகிவிட  வேண்டுமென்று 
என்  பெற்றோரின்  நெஞ்சில் 
ஆயிரம்  ஏக்கங்கள் .

கூரையைப்  பிரித்து 
தோரணம் 
ஒன்றுதான் 
போடாத  குறை .
எங்கள்  வரவேற்பில் 
எந்தக்  குறையும் 
கண்டுவிடக்  கூடாதென்பதில் 
கவனமாயிருந்தார்கள் .

புளி  போட்டுத்  துலக்கிய 
பித்தளைப்  பாத்திரம்போல் 
நான் 
பளபளக்க  வேண்டுமென்று ,
முதல்  தரப்  பட்டும்..
முகம்  முடி  ஒப்பனையும் ..
அப்பப்பா -
அழகாய்த்தான்  இருந்தேன் .

உனக்கு  அனுப்பவென்றே 
நான்
பிரத்தியேகமாய் 
எடுத்த 
புகைப்படத்தைப்  பார்த்து 
என்னைப்
பிடித்துப்போனதால்தான் 
நீ  வருகிறாய்  என்றார்கள் .

நானோ  உன்னை 
கனவிலும்  கண்டதில்லை .
நீ -
வெள்ளையா  கருப்பா  ..
ஒல்லியா  உடம்பா ..
எதுவுமே  தெரியாது .

இருந்தாலும்  பரவாயில்லை .
நானென்ன  பெண்தானே .
என்னை -
முகம்  தெரியாத 
உனக்காக  அலங்கரித்தேன் .
புத்தம்புது  ஒப்பனையில் 
பொன்னாக  ஜொலித்தேன் .
புடவைக்கடை  கொலுபொம்மையாய் 
எடுப்பாய்த்தான்  இருந்தேன் .
******
என்  பெற்றோரின்  முகத்தில் 
எத்தனை  கலவரங்கள் .
இந்தச்  சம்பந்தமாவது 
சரியாகிவிட  வேண்டுமென்று
ஓயாத  பரபரப்பு .

என்  மனது 
வறியவன் வீட்டுப்
பானைபோல
வெறுமையாய்  இருந்தது .
இந்தப் 
பெண்பார்க்கும்  படலம் 
எனக்கொன்றும்  புதிதில்லை .

ஏமாற்றக்  குளத்தில் 
எத்தனை  முறைதான் 
மூழ்கி  எழுவது ?

எத்தனை  முறைதான்
என்  எதிர்பார்ப்புகள் 
எரிந்து  சாம்பலாவது ?

நிறைகுடத்தைப்போல் 
தளம்பாமலிருந்தது  மனசு .

புகைப்படத்துக்குப்  போல 
மாப்பிள்ளைமாருக்கும்
புன்னகைத்துப்  போஸ்  கொடுத்து 
பழகிவிட்டது  எனக்கு .

வா ..
உயிருள்ள  பொம்மையொன்று 
உட்கார்ந்திருக்கின்றது .
பார்த்துவிட்டுப்  போ  என்று
எத்தனை  பேருக்கு 
காட்சி  கொடுத்திருக்கிறேன் .

இந்தப்
பெண்பார்க்கும்  படலம்
எனக்கொன்றும்  புதிதில்லை .
******
நீ 
வந்துவிட்டாய்   என்று  -உன்னிடம் 
என்னை  அழைத்துகொண்டுபோக 
அடுத்த  வீட்டுப்  பெண்கள் 
அவசரமாய்  வந்தார்கள் .

மின்கலம்  பூட்டிய 
இயந்திர  பொம்மையாய் 
வழி  தொடர்ந்தேன்  நான் .

தேநீர்த்  தட்டு  
கையில்  தரப்பட்டது .
உனக்குத் 
தேநீர்  தந்துவிட்டு 
எதிரே  வந்து 
உட்கார  வேண்டும் .
இதுதான்  ஏற்பாடு .

நல்ல  வேளை .
நீ 
தனியாய்த்தான் 
வந்திருந்தாய் .
இல்லாவிட்டால் 
உன்  நண்பனும்  என்னை 
இலவசமாய்ப்  பார்த்திருப்பான் .

சொல்லித்தந்தது  போல் 
தலைகுனிந்தே  நடந்து  வந்து
தேநீர்த்  தட்டை 
நீட்டினேன்  உன்னெதிரே.

நீ -
தேநீர்க்கோப்பையை 
தொடும்போது ..
நம்  கண்கள்  நான்கும் 
மோதிக்கொண்டன .

மின்சாரம்  ஒன்று 
பாய்ந்த்தது  நெஞ்சிலே .
இதயம்  வேகமாய் 
அடித்துக்  கொண்டது .
கைகளில்  நடுக்கம் ,
இதழ்களில்  துடிப்பு .
சமாளிக்கத்  தெரியாமல் 
தடுமாறிப்  போனேன் .

நீ
பார்த்துக்கொண்டேதானிருந்தாய் .
அழுத்தமான  பார்வை .
உதடுகளில் 
மெல்லியதாய்  ஒரு 
புன்னகைக்  கோடு .

நீ
அழகாய்த்தானிருந்தாய் .
திடமான தோள்கள்  ..
துடிப்பான  மீசை ..
நீ
அழகாய்த்தானிருந்தாய் .

அந்த 
ஓரிரு  வினாடிகள் 
அத்தனை  நீளமா ?

உன்  எதிரே 
நான்  அமர்ந்தேன் .
நிமிர்ந்து  உன்னை
நேராய்ப்  பார்க்க 
முடியவேயில்லை  என்னால் .

நீ
அளவாகக்  கதைத்தாய் .
இயல்பாக  சிரித்தாய் 
என்  பெற்றோரோடு .

ஓரக்கண்ணால் 
உன்னை  பார்த்ததை 
நீ
கண்டுவிட்டாய் .
ஐயோ ..
நாணத்தில் 
நான்  பட்ட  அவஸ்தை !!

நான்   நினைக்கிறேன் 
நீதான்
எனக்கானவன்  என்று .

என்னை
பிடித்திருக்கின்றது என்றோ 
பிடிக்கவில்லை என்றோ 
நீ  – எதுவுமே 
சொல்லவில்லை .
சொல்லியனுப்புகிறேன் 
என்று 
சொல்லிவிட்டுப் 
போய்விட்டாய் .
******
திருமணம் என்பது 
என் 
பெற்றோரின்  சுமைதீர்க்க -நான்
புரிந்துகொள்ளும் 
ஒப்பந்தம்  என்றுதான் 
எண்ணியிருந்தேன் .
உன்னை  பார்த்தபின்தான் 
ஆசைக்  கனவுகள் 
அனலாய்  சுட்டன .
******
இரண்டு  மூன்று  நாளாய் 
உன்  முடிவு  வருமென்று 
காத்திருந்தே 
என்  கனமான  இதயம் 
கரைந்துபோய்  விட்டது .

இது 
சரிவராவிட்டாலும்  என்று
என்  பெற்றோர் 
இன்னொரு 
பெண்பார்க்கும்  நாடகத்தை 
இன்றைக்கோ  நாளைக்கோ 
அரங்கேற்றப்  பார்க்கிறார்கள் .

அவர்களைச்  சொல்லி 
குற்றமுமில்லை .

இன்னுமொருமுறை 
முகச்சாயம்  பூசி 
தேநீர்  கொடுக்க 
என்னால் 
முடியாதடா.

தயவுசெய்து 
சம்மதமென்று 
நீ 
ஒரு  வார்த்தை  சொல்லிவிடு .

பெண்ணின்  உடலில் 
தசையும்  எலும்பும் 
மட்டுமில்லை .
தன்மானம்  ஒன்றும் 
உள்ளதென்று 
நீ  மட்டுமாவது 
புரிந்துகொள்.

2011

Post Comment