எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, August 15, 2011

யார் இந்த மர்ம மனிதர்கள் (Grease men )???....

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் பரபரப்பாய்  பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கிரீஸ் மனிதர்களைப் பற்றிய சின்னதொரு அலசலும் என் எண்ணங்களின் பதிதலும்தான் இது.

ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில்தான் உடல் முழுவதும் கிரீஸ் பூசிய  இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டமும் அட்டூழியங்களும் ஆரம்பித்ததாய் கூறப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை பகுதிகளில்தான் இது ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். பின் நாட்டின் மத்திய பிரதேசத்துக்கும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் விஷ்தீரனமாயுள்ளது.

அது சரி, யார் இந்த மர்ம மனிதர்கள், எதற்காக வருகிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டுமில்லையா? யாருக்குங்க தெரியும்? நானே ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா என்றுதான் செய்தி பார்ப்பன், எனக்கெப்படி இதெல்லாம் தெரியப் போகுது? திடீர்னு ஒருநாள் ஒரு வானொலியில பத்திரிகை வாசிக்கிற காலை நிகழ்ச்சியொன்றில் (வெற்றி FM- விடியல்) தான் முதல் முறையாக இந்த மர்ம மனிதர்களைப்  பற்றி கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகுதான் யாருப்பா இவங்க என்கிற எண்ணம் எனக்கு வந்தது.

இணையத்தில்  தேடித் பார்த்தேன்.ஒரு வலைத் தளத்தில் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை சம்பவங்கள விளக்கமா போட்டிருந்தாங்க. ஆண்கள் இல்லாத வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்களை தாக்க முயற்சிப்பதாக சொல்லப்பட்டது. அவர்களை ஊரார் துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போது அவர்கள் ஏதோ ஒரு பொருளை பொலிஸாரிடம் காட்டியதும், பொலிஸார் அவர்களுக்கு சல்யுட் அடித்து விடுவித்ததாகவும் சொல்லப்பட்டது.

எந்த உலகத்துலடா  குற்றவாளிக்கு காவல்துறை சல்யுட் அடிக்கிறது? எல்லாம் மர்மமாத்தான் இருக்கு.. அதுமட்டுமில்லாம நாட்டின் பல பாகங்களிலும் ஒரே  நேரத்துல  இந்த சம்பவங்கள்  நடக்கிறதால  இத செய்யிறது  நிச்சயமா  ஒரு பெரிய  கூட்டமாத்தான்  இருக்கணும் . இதன் பின்புலத்துல பெரியதொரு சக்தியும் இருக்கணும் என்கிறது தெள்ளத் தெளிவு. இது குறித்து  குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சொன்னதாக சொல்லப்படும் கருத்துக்களும் வியப்பா இருந்தது.

இப்படியிருக்க,  நாட்டின் பல பகுதிகளிலும்  இந்த மர்ம மனிதர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அன்றாடம் பல அசம்பாவிதங்கள் நடப்பதும், மக்கள் துரத்துவதும், பிடிப்பதும், காவல்துறையிடம் ஒப்படைப்பதும், அவர்கள் யாருக்கும் தெரியாமல் விடுவிப்பதுமாயிருக்க நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப் படுவதும், இரு தரப்பினரும் காயப்படுவதும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவதுமாய் ஏகப்பட்ட செய்திகள் அன்றாடம் வெளிவந்தவண்ணமிருந்தன.என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே   என்கிற மாதிரி சும்மா  இருக்கவும்  விடாம  மர்ம மனிதர்கள் உள்ளூருக்குள்ளும்  வர  ஆரம்பிச்சுட்டாங்க.  மூன்று நான்கு நாட்களுக்குமுன் சம்மாந்துறை பிரதேசத்தில் ஒரு பெண்மணியைத் தாக்கியவனை ஊரார்  துரத்திக்கொண்டு  வர, அவன்  காவல்  நிலையத்துக்குள்  ஓடி  ஒழிந்ததும், உடனே காவல் நிலைய மின் விளக்குகள் அணைக்கப்பட்டதும், அது பற்றி பொலிஸாரிடம் வினவ, அப்படி யாரும் வரவில்லை  என்று  அவர்கள் சொல்ல அந்தப் பிரதேசத்திலும் பிரச்சினை தொடங்கியது. ஊர் மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு கல்லெறிய, அவர்கள் கண்ணீர் புகையடிக்க, கிட்டத் தட்ட இரவு 2 மணி மட்டும் ஊரார் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

மற்றுமொரு சம்பவம் வாழைச்சேனையிலும்  இடம்பெற்றது. பிடிக்கப்பட்ட மர்ம மனிதரை பொலிஸாரிடம்  ஒப்படைத்த மக்கள் ஏதோ சந்தேகத்தில் அவனைக் காட்டுமாறு கேட்க அவர்கள் மறுத்தபோது, அங்கேயும்  கலவரம்  வெடித்தது. காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

பொத்துவிலிலும் இப்படியான சம்பவம் நடைபெற்று கைகலப்பில் ஒரு குடிமகன் இறந்துபோனதும்கூட புதிதில்லை.

இப்படிப் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க கல்முனை நகர்ப் பகுதியிலும் சாய்ந்தமருது, காரைதீவுப் பகுதிகளிலும் கிரீஸ் மனிதன் வந்ததாக பல தகவல்கள் பொசிந்தன. முந்த நாள் இரவு கல்முனைக்குடியில்  ஒரு பள்ளி வாசலில் பதுங்கியிருந்த கிரீஸ் மனிதனை மக்கள் துரத்த அவன் கூரைகளுக்கு மேல் பாய்ந்து மறைந்து போனதாகவும் கண்டவர்கள் சொன்னார்கள்.

நேற்றிரவு , கிரீஸ் மனிதன் மிக அருகில் வந்து விட்டான். எங்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றுப் பின்னேரமே நடமாட்டம் தெரிந்து மக்கள் தேடிச்  சென்றபோது, இடையிலேயே பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் அப்படி யாரும் வர சாத்தியமில்லை என்று சொல்லி மக்களை தடுத்ததாக சொல்லப்பட்டது. நேற்றிரவு அந்தப் பாடசாலைக்கருகில் வசித்து வந்த ஒரு பெண்மணியின் கையில் கிரீஸ் மனிதனின் ஆயுதத்தால்  மூன்று கீறல்கள் செய்யப்பட்டதை அடுத்து   அப்பெண்  உடனடியாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு இளைஞர்களெல்லாம்  அவனை தேடிச் சென்ற போதும் பிடிக்க முடியாமல் போய்விட்டது.

நான் அறிந்த வரையில் நடைபெற்றவற்றை இதுவரைக்கும் சொல்லியிருக்கிறேன். இன்னும் பல்வேறு சம்பவங்களும் நாட்டின் பல பகுதியிலும் நடைபெற்றிருக்கின்றன.

என்ன நான் கதை சொல்லி போரடிக்கேனா? என்ன செய்றது? சொன்னாத்தானே தெரியாதவங்களும் தெரிஞ்சுக்க முடியும்...
 

இப்படியான அசம்பாவிதங்கள் எத்தனையோ நடைபெற்ற போதும், அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும், மர்ம மனிதர்கள் என்று யாரும் இல்லை, பொய் வதந்திகள், கட்டுக் கதைகள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

அப்படியென்றால்  இதையெல்லாம்  யார் செய்வது? அவன் திருடன், மனநோயாளி, யானை கணக்கெடுக்க வந்தவன், பூனை கணக்கெடுக்க வந்தவன் என்றுதான் எல்லாப் பெருந்தலைகளும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  அதென்ன , எல்லாத்  திருடர்களும் , மனநோயாளிகளும்  ஒரே நேரத்தில் வரிந்து கட்டிக் கொண்டு  இறங்கி ஒரே வேலையை செய்வது? ஆச்சரியமாயில்லையா?சரி, அப்படித்தான் அவன் மனநோயாளி, திருடன் என்றாலும் அவன் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நேரம் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது இவர்களுக்கு கடமை இல்லையா? பொதுமக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்துக் கொண்டு கொடுக்க பொறுப்பில்லாமல் அவர்கள் விட்டுவிட்டால்.அந்த மனநோயாளிகள் இன்னும் பலரை தாக்க மாட்டார்களா?

அதைவிட பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் காவல்துறைதானே குற்றவாளிகளைக்  கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடித்து பிடிப்பவர்களை எங்களிடம் கொண்டு வந்து தாருங்கள் என்று கேட்டு விட்டு அவர்கள் சும்மா இருப்பது எப்படி நியாயம் ? 119 க்கு call எடுத்தபோதும் அவர்கள் வந்து சேர முக்கால் மணி நேரம் ஆனதாமே..

யார் மறுப்புரை தெரிவித்தபோதும், நிச்சயமாக இந்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பின் புலத்தில் யார் இருக்கிறார்கள்?, இவர்களின் அடிப்படை நோக்கம்தான்  என்ன?, இதனால் யாருக்கு என்ன லாபம்?, இது எதுவரைக்கும் நீடிக்கும்?, இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறது.

யாரால் பதில் சொல்ல முடியும்?. . பொறுத்திருப்போம் காலம் என்ன பதில் சொல்கிறது என்று தெரிந்துகொள்ள.

Post Comment

Saturday, August 13, 2011

பேரழகில் கரைந்துவிடு

உன்னை விளக்க
போதுமானதாய் அல்ல
என்னுடைய கவிதைகள்.

உன் சுவாச இடைவெளிகளின்
நீட்சியை
எந்தவொரு மொழியின் ஆளுமையாலும்
அளந்து குறிக்க இயலாது.

மௌனங்களைக்
குழைத்துத் தீட்டிய
ஓவியங்களாய்
வெறுமையை பிரதிபலிக்கும்
உன் புன்னகைகள்
எந்தவொரு பொருளையும்
உணர்த்துவதாய் இல்லை.

எப்போதாவது,
உன் மௌனங்கள் உடையும்போதும்
உணர்வுகள் வெளிப்படாமல்
உள்நாக்கினுள்ளேயே ஒட்டியிருக்கிறது.

பூச்சியங்களுக்குள்  இருக்கும்
வெறுமையை நீ
வெளிப்படுத்திய போதும்,
எனக்கு மட்டும் தெரிகிறது...
பூமிக்கடியில் உள்ள உஷ்ணம்
உன் இதயத்துக்குள்ளும் இருப்பது.

வீசாத பல புயல்களும்
வெடிக்காத சில எரிமலைகளும்
உன் அமைதிக்குள்
ஒழிந்திருப்பதை
உன் இமைகள் தாங்கும் பாரங்களில்
கண்டு கொள்கிறேன்.

உன்னில் தெறித்து விழுந்த
ஒரு மழைத்துளி
மண்ணைச் சுடுகிறது.
***

மௌனங்களுக்குள்ளும்
வெறுமைகளுக்குள்ளும்
தொலைந்துபோன உன்னை
ஏன் நீ
மீட்டெடுக்கக் கூடாது?

உன்னைச் சுற்றும் காற்றிலும்
உன்னில் தூறும் சாரலிலும்
உன் சாலைப் பூக்களின் வாசத்திலும்
நீ ஏன் கரைந்துவிடக் கூடாது?

சுகமாய் சுடும்
அதிகாலைச் சூரியனின் ஸ்பரிஷத்திலும்,
சுதி மாறாமல் பாடும்
காட்டுக் குயில்களின் சங்கீதத்திலும்
ஏன் உன் இதயம்
மயங்கிவிடக் கூடாது?

இரவுகளின் நம்பிக்கையாய்
வெளிச்சத்தை வார்த்துக்கொண்டே
வீதி உலாப் போகும்
மின்மினிப் பூச்சிகளின் அழகிலும்,
வானப் பந்தலில்
பூத்துக் கிடக்கும்
நட்சத்திரப் பூக்களின் பேரொளியிலும்,
ஒளியை வழியனுப்பி
மெல்லிய குளிரை
சில்லெனத் தடவும்
குளிர் நிலவின் பிரம்மாண்டத்திலும்
நீ ஏன் தொலைந்துவிடக் கூடாது?
***

உன் வெறிச்சோடிய வாழ்வில்
நீ எதைக் கண்டாய்?

இன்னும்
எதைக் காண்பதற்காய்
நீ விரதமிருக்கிறாய்?

நீர்க்குமிழியாய்
எந்தநிலையிலும்
உடைந்துவிடக் கூடிய வாழ்வில்
வெப்பத்தை சுமந்துகொண்டு
நீ எதை சாதிக்கப் போகிறாய்?

எழிலைப் போர்த்தியிருக்கும்
இந்த உலகத்தின் இனிமைகளை
நீ இழந்துவிடப் போகிறாயா?
***

அருவிக் கரையில் நீராடி
உன் எரிமலையின் உஷ்ணத்தை
நீ அணைத்துவிடு.

மல்லிகைப் பூக்களின் வாசனை கொண்டு
உன் வெறுமைகளை
நீ நிறைத்துவிடு.

பிஞ்சுத் தென்றலில்
புரண்டு விழுந்து
உன் புயல் காற்றை
அடக்கிவிடு.

வானம் பூமி விரிந்து கிடப்பதும்
மலைகளும் கடல்களும்
படர்ந்து கிடப்பதும்
மரங்களும் மலர்களும்
அடர்ந்து கிடப்பதும்
உன் தனிமையை
துடைப்பதற்காய்த்தான்.

உலகத்தின் பேரழகை
நீ கட்டித் தழுவு.
உன்னை
இறுக்கிய உணர்வுகளின் எச்சங்களை
கண்ணீர்த் துளிகளால்
கழுவித் துடைத்துவிடு.
Post Comment

Sunday, August 7, 2011

உருகி வடியும் வலிகள்


இறுகிப் பிணைந்த
உயிர்ப்பிணைப்பின்
மயிரிழை வெடிப்புக்களுக்குள்ளிருந்து
ஒழுகி விழுகின்ற
கண்ணாடித் துளிகள்
கண்களுக்கு எட்டாத
இருதயத்தின் 
நிர்மலமான இருட்டிற்குள்
உடைந்து விழுகின்றன.

ஆர்ப்பாட்டமில்லாத
தனிமைகளில்
செலவழிக்கப்படாமலிருக்கும் கணங்களின்
உயிர்த்துடிப்புகளை
அந்த உடைதல்களின் 
கீறல்கள்
வலி செய்கின்றன.

மௌனம் மறைத்துக்கொண்டிருக்கும்
அந்தகாரத்தின் கொடூரங்களுக்குள்
ஒரு ஆத்மாவின் கதறல்கள்
துடிக்கத் துடிக்கப்
புதைக்கப்பட்டிருக்கின்றன.

உருகி வடியும் வலிகளின்
விழுப்புண்களாய்,
இன்னமும்
துடைக்கப்படாத ஈரங்களுக்குள்
சேகரித்து  வைத்திருக்கும்
வியர்வைத் துளிகளின் வாசனை
நெஞ்சுக்குள்
பற்றிப் பரவி
ஒரு ஜீவராகத்தின்
ஸ்வரங்களை மீட்டிக்கொண்டு
பட்டை பட்டையாய்
படர்ந்திருக்கிறது. 

Post Comment

Friday, August 5, 2011

ஒரு முடிவின் கதை

என்னது,
என் உலகம்
ஸ்தம்பித்துப் போனதா?

என்னைச் சுற்றி
எந்தக் காற்றும்
அசைவதாயில்லையே...

எந்தக் கிரகமும்
என் பாதத்தின் கீழ்
சுழல்வதாயும் இல்லையே...

ஒட்டடை பிடித்த மேகம்
ஒரு அங்குலமேனும்
நகர்வதாயும் தெரியவில்லை.

ஊருக்குப் போன
மாரி மழை
இன்னமும் திரும்பி
வரவும் இல்லை.

எழுதிக் கோரவுமில்லை,
எந்தவொரு
முன்னறிவித்தலுமில்லாமல்
என் வேர்களெல்லாம்
வேலை விடுப்பு
எடுத்துக் கொண்டனவோ...

இல்லை,
ஓடிக் களைத்ததால்
ஓய்வு பெற்று விட்டனவோ...

என் காலடியில்
கருகிக் கிடப்பதெல்லாம்
என்ன?

அகன்று செறிந்து
என் பசுமையை பறைசாற்றிக் கொண்டு
என்னைப் போர்த்திக் கிடந்த
பச்சிலைகளா
இந்தச் சருகுகளெல்லாம்?

என்னில் கூடுகட்டி
குடும்பமாகிக் குதூகலித்த
குருவிக் கூட்டங்களெல்லாம்
எங்கே?

என் காலடியில் கிடந்து
கதை பேசிக் களித்த
காதலர்களெல்லாம்
எங்கே?

என் பரந்த கிளைகளின் கீழ்
மழைக்கும் வெயிலுக்குமாய்
வந்து இளைப்பாறிய
வழிப்போக்கர்கள் எங்கே?

என் பழங்களை
கொறித்துக் கொண்டு
ஓடிப் பிடித்து விளையாடிய
அணில் கூட்டங்கள் எங்கே?

கற்களோடும் கம்புகளோடும்
என்னில்
காய்கள் கொய்ய வந்த
குழந்தைகளெல்லாம் எங்கே?

என்னில் இனி
பயனில்லை என்று
ஒதுக்கி விட்டார்களா?

எனக்கு சந்தேகமாயிருக்கிறது.
ஒரு வேளை நான்...
இறந்து விட்டேனா??

ஆ... யாரது?
இரும்புக் கோடரியுடன்
என்னை நோக்கித்தானே
வருகிறான்
அந்த விறகுவெட்டி?

என் கிளைகளை
உடைக்கிறான்.
என் உடலை
தறிக்கிறான்.

என்னை வேரோடு
பிடுங்கி விடுவானோ??

வசந்தம் வரும் வரைக்கும்
என்னைக் கொஞ்சம்
விட்டுவைக்க மாட்டானா?

என் கணுக்கள் சிலவேளை
துளிர்க்கக்கூடும் அல்லவா?

என் சந்ததிகளெல்லாம்
எங்கிருக்கிறார்கள்?
அவர்களை நான்
ஒருமுறையாவது
கண்டுவர வேண்டுமே...

என்னைச் சுற்றிக் கிடக்கும்
சருகுகளையெல்லாம்
தன் சாக்கில் திணிக்கிறானே,
அவற்றையும் கூடவா
அடுப்பில் எரிப்பான்?

இல்லை,
அவனின் மனக்குரல்
எனக்குக் கேட்கிறது.

என் விதையில் விளைந்த
ஒரு மரத்துக்கு
என்னை உரமாக்கப் போகிறானாம்.

நன்றி கடவுளே...
என் ஊனம் உரமாக
என் மகனின் வடிவில்
நான் மறுபடியும் துளிர்ப்பேன்.

இப்போதுதான்
என் ஆத்மா
சாந்தியடைகிறது.

Post Comment