எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, October 17, 2011

விழி நீரில் ஒரு ராகம்

வேறாரும் பேசாத பாஷை  இது
போராடும்  குயிலொன்றின்  ஓசை   இது
என்   மூச்சுக்   குழலில்
மூழ்கிப்போன
காற்றின்   கானம்   இது...
இன்று
மூக்கு   நுனியில்
முடிந்த பிறகு
தேம்பும்   ராகம்   இது...
விழி   நீரில்  ஒரு   கோலம் ...
விதி  போடும்  அடையாளம் ...

வேர்கள் பிரிந்தாலும் மண்ணில்
சிறு  நார்கள்  நெழிந்தோடுமே ...
மூச்சு  பிரிந்தாலும் தேகம்
சிறு  சூட்டில்  உயிர்  தாங்குமே ...
அறுந்திடும் உறவினில்
விழுந்திடும் ஈரமே....
பிரிந்திடும் வேளையில்
நெருங்கிடும் தூரமே.... - இது
எரிந்து முடிந்த மூங்கில் கரியில்
கசிந்து வழியும் இசையோ....

வானம் பொழிகின்ற துளியில்
மன ஊனம் அழிகின்றதே....
கார்மேகம் திசை மாறும் போது
வெறும்  காற்று புயல் வீசுதே ...
பழகிய சூரியன்
மறைந்திடும் நேரமே....
அழகிய வானவில்
கரைந்திடும் சோகமே .... - இது
உதிர்ந்து  விழுந்த மலரின் நினைவில்
அழுத கொடியின் குரலோ ....

Post Comment

Sunday, October 2, 2011

ஒரு நிலா இரவில்...

ஒரு நட்சத்திரப் பூந்தோட்டமாய்
செழித்துக் கமழ்கிறது
கனவுப் பூக்கள்.

பூரணை நிலவின் பேரொளியாய்
நம்பிக்கை வெளிச்சம்
நெஞ்சத்தின் அறைகளுக்குள்
வெள்ளைத் தீந்தை அடிக்கிறது.

வானத்தில் விசிறப்பட்ட
நீலத் திரவமாய்
மனசோடு கலக்கிறது
புதிதாக ஒரு ஊற்று.

ஒவ்வொரு கணமும்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
இராத்திரி வானம்
 போதி மரமாக
புதுப் போதனை செய்கிறது.
சில்லென்று தழுவும் பூங்காற்று
உற்சாக பானமாய்
உச்ச போதை  கொடுக்கிறது.

ஒரு ஆனந்த  நிகழ்வின்
ஆரம்ப  விழாவுக்கு
வரவேற்புப் பாடல் பாடிக்கொண்டு
ரெக்கை விரித்துப் பறக்கிறது
ஒரு பட்டுப் பூச்சி.

Post Comment