எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, September 28, 2012

‘Innocence of Muslims’ - காழ்ப்புணர்ச்சியின் ஒரு வடிவம்


இன்று உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களிடையேயும் பிற மதத்தவர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ‘Innocence of Muslims’ என்ற திரைப்படத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களை மட்டுமல்ல, மற்றொரு மனிதனையும் அவனுடைய மதம், கலாச்சாரம் போன்றவற்றை மதிக்கத் தெரிந்த சகல மக்களையும் கொந்தளிப்புள்ளாக்கிய ஒரு திரைப்படமாக இது அமைகிறது. அமெரிக்காவில் வாழும் யூதக்குழுவால் தயாரித்து வெளியிடப்பட்ட இத்திரைப்படமானது, இஸ்லாமிய மக்களின் வழிகாட்டியும் இறைத்தூதருமான முஹம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் கேவலமாக சித்தரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படமானது, முஸ்லிம் மக்களின் மனங்களில் ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை சரியாகத் தெரிந்து கொள்ளாமல், ஒரு ஒழுக்கமான மதத் தலைவரை இப்படிக் கேவலமாக இழிவு படுத்தி இஸ்லாமிய நெஞ்சங்களைக் குத்திக் கிழித்து அதில் அற்பமான சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கீழ்த்தரமான செயலை, தனி மனிதனின் உச்சக்கட்டக் கருத்துச் சுதந்திரமாய் அமெரிக்க அரசாங்கம் வர்ணித்திருப்பது அவர்களின் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. இஸ்லாமிய வளர்ச்சி பொறுக்க மாட்டாமல் இஸ்லாம் மதத்துக்கும், மதத்தவர்களுக்கும் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் மற்றுமொரு நாசகார விளையாட்டாகத்தான் இதைக் காண முடிகிறது. அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதைத்தான் அவர்கள் கருத்துச் சுதந்திரமாகக் கொள்கிறார்களா?. இதுதான் கருத்துச் சுதந்திரம் என்றால், எல்லாருமே இந்தக் கருத்துச் சுதந்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டால், உலகமே சுடுகாடாகிவிடாதா?. அமெரிக்கர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு ஒரு கோட்பாடு இல்லையா?. அவரவர் சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனியளவுதான் என்ற அடிப்படை நாகரிகம் கூடத் தெரியாதவர்களா அவர்கள்?.
இப்படியான சர்ச்சைக்குரிய திரைப்படங்களை தரவேற்றி அதன் மூலம் இலாபம் காணப் பார்க்கும் இணையத் தளங்களை என்னவென்பது?. எந்த ஒரு சமூக ஊடகமும் சமய, கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும். ஊடகத்துறையானது, சமய, கலாச்சார வளர்ச்சியில் பங்கேற்க வேண்டுமே தவிர, அநாகரிகங்களுக்கு துணை போகக் கூடாது. தங்களுடைய கோட்பாடுகளுக்கு அமைவாகத்தான் இந்தத் திரைப்படம் அமைகிறது என்று சொல்கிற Youtube தளம், எந்த ஒரு கலைப் படைப்பும் அடுத்தவரைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது என்ற மிகச் சாதாரணமான நாகரிகத்தை தங்களின் கோட்பாடுகளுக்குள் இணைத்திருக்கவில்லையா?.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிறு வயது முதலே ஒழுக்கசீலராகவும், உண்மையாளராகவும், நம்பிக்கையாளராகவும் இருந்தவர்கள். ஒழுக்கத்தின் சின்னமாக இலங்கிய நபி முஹம்மத் (ஸல்) அவர்களை இப்படிக் கீழ்த்தரமாக சித்தரித்த இந்த மனிதர்களின் தேவை எதுவாக இருக்க முடியும்?. இது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியின் பிரதிபலிப்புத் தானே.
முஸ்லிம்கள், நபி (ஸல்) அவர்களை தங்கள் உயிரை விடவும் மேலாக நேசிப்பவர்கள். உங்கள் நேசத்துக்குரிய ஒருவரை யாராவது அவதூறாகப் பேசினால் நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா?. முஸ்லிம்கள் அலையலையாகக் கிளர்ந்தெழுந்து தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியது நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட பேரன்பினால்தான். ஆனால், சில முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகவும் அநாகரிகமான முறையில் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியதாக அறிகிறோம். இந்தச் செயல் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அது முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே இழிவு படுத்திக் கொள்ளும் நிலை. முஸ்லிம்களின் ஒவ்வொரு செயலும், அது ஆர்ப்பாட்டங்களானாலும் போராட்டங்களானாலும், அது இஸ்லாமிய ஒழுக்க நெறி முறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும். முஸ்லிம்களின் நடை முறையைப் பொறுத்துதான் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பிரதிபலிப்பும் நன்மதிப்பும் வேற்று மததவர்களிடையே ஏற்படும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், இந்த வன்செயலைப் பார்த்து கொதித்தெழுந்திருக்க மாட்டார்கள். இந்தப் பாதகச் செயலை செய்தவனுக்காக வருத்தப்பட்டிருப்பார்கள். அவனுக்கு இஸ்லாமியப் பேரொளி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்திருப்பார்கள். பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் இலக்கணமானவர்கள் அவர்கள். இதை விட மோசமான செயல்களைக்கூட சகித்து, பொறுமை காத்து வெற்றியடைந்தவர்கள். அவர்களைப் பின்பற்றி நடக்கக்கூடிய முஸ்லிம்கள், தங்கள் நடைமுறைகளை இஸ்லாமிய மார்க்கத்தினதும், முஹம்மது நபி (ஸல்) அவர்களினதும் கௌர்வத்தை பாதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் சகலமுமறிந்தவன். அவனே தண்டிக்கவும், மன்னிக்கவும் போதுமானவன். தன் தூதரை நிந்தித்தவனுக்குரிய தீர்ப்பை அவனே கொடுத்து விடுவான்.

Post Comment

Tuesday, September 25, 2012

நீ ஜெயித்திடு

இளையவனே, ஒரு சேதி கேளடா.
உலகமிது உன் காலின் கீழடா.
அதை உதைத்திடு, நீ ஜெயித்திடு.
உன் மனபலம் கொதித்திடும் போது
இந்த பூமியே உனக்கொரு கோது.
நீ ஜெயித்திடக் கிளர்ந்தெழும் போது
கரும் பாறைகள் சின்னத் தூசு.

காட்டு மூங்கிலாய் நீ உயரு.
ஊற்றுத் தண்ணீரென நீ பெருகு.
நேற்று  நடந்ததை  தூரம்  வைத்து
வேற்றுக் கிரகங்களில் பாதம் வை.
தனக்குத் தானே பாதை போட்டு
தலை நிமிர்ந்து போகும் நீரோட்டம் போல்,
உனக்கு நீயே பாதை போட்டு
உயர்ந்து பறந்து நிலவில் இறங்கு.
அந்த வானம் போல
நீயும் கூட
போடாதே உனக்கு  எல்லைக் கோடு.

கற்பகத் தருவாய் நிழல் கொடு.
கற்பனைக்கும்  கொஞ்சம்  இடம்  கொடு.
தர்மம் ஜெயிக்க குரல்  கொடுத்திடு.
தாய்மண்ணைக்  காத்திட  உயிர்  கொடு.
கொத்தாய்  விதைகள்  சுமந்த  போதும்
குனிந்தே  நிற்கும் நெற்கதிர் போல
எத்தனை உயரம்  போனாலும்  நீ
மண்ணின்  மகன்தான்  விழுந்து  வணங்கு.
உன்னை  நிமிர்ந்து பார்த்து
சல்யூட்  செய்து
இமயம்  பாடும்  வெற்றிக்  கீதம். 








Post Comment

Sunday, September 23, 2012

அனடோமிக் தெரபி - செவி வழி தொடு சிகிச்சை

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா?, இனிப்பு சாப்பிடுங்கள். இரத்த அழுத்தம் இருக்கிறதா?, உப்பு சாப்பிடுங்கள் என்று சொன்னால் என்னை உதைப்பீர்களா?. இதோ சொல்லுகிறார்  Healer's Baskar  அவர்கள். அனடோமிக் தெரபி - செவி வழி தொடு சிகிச்சை என்ற நூலில், நாம் சரியென்று பின்பற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு சிகிச்சை முறைகளையும் நடைமுறைகளையும் பிழையென்று நிரூபிக்கிறார். இந்த செவி வழி தொடு சிகிச்சை மூலம் சகல விதமான நோய்களையும் குணப்படுத்த முடியுமென்று விளக்குகிறார். இந்த சிகிச்சை முறையில் மருந்து மாத்திரை கிடையாது, பத்தியங்கள் (உணவுக் கட்டுப்பாடுகள்) கிடையாது. தனது உரையை கேட்டுக் கொண்டிருப்பதன் மூலமாகவே நோயைக் குணப்படுத்திவிட முடியுமென்று உறுதியளிக்கிறார். அப்படியென்ன பேசப் போகிறார் என்று கேட்க ஆவலாயிருக்கிறதல்லவா?. இதே ஆவலோடுதான் நானும் அந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.

இந்த
நூலில் நமக்கு ஏற்படக் கூடிய பல்வேறு நோய்கள் பற்றிய ஒரு ஆழமான பார்வையின் மூலம் அந்த நோய் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் அலசி ஆராயப்படுகிறது. தும்மல் முதல் AIDS வரை, ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய சகல நோய்களுக்குமான காரணங்கள் ஒரு பச்சைக் குழந்தைக்கு சொல்வது போல் சொல்லப்பட்டிருக்கிறது.
நம்மில் பெரும்பாலானோர் நமக்கு என்ன நோய் வந்திருக்கிறது, எதனால் வந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளாமலேயே ஏராளமான மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் சுகயீனம் என்று வைத்தியரிடம் சென்றால், வைத்தியர் என்ன செய்கிறார்?. என்ன வருத்தம் என்று கேட்கிறார். நாம் தடிமன் என்றோ தலைவலி என்றோ ஒரு வருத்தத்தை சொல்கிறோம். உடனே தன் கழுத்தில் மாட்டியிருக்கும் ஒரு கருவியை காதுகளுக்குள் மாட்டி மறுமுனையை நம் முதுகிலும் நெஞ்சிலும் வைத்து மூச்சை இழுத்து விடச் சொல்கிறார். நாமும் ஆழ்ந்து மூச்சிழுக்கிறோம். அதன் பிறகு ஒரு காகிதச் சீட்டை எடுத்து கரகரவென்று ஏதோ கிறுக்குகிறார். இந்த மருந்துக்கு சரியாகாவிட்டால் 3 நாட்களுக்கு பிறகு மறுபடியும் வரச் சொல்கிறார். அவர் எழுதுவதை 3 நாட்களுக்குப் பிறகு அவராலேயே வாசிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
அந்தக் காகிதத்தை மருந்தகத்தில் கொடுத்தால் சாப்பாட்டுக்குப் பின் என்றும், முன் என்றும் ஒரு ஏழெட்டு உறைகளைக் கொடுப்பார்கள். அந்தக் காகிதத்தில் எழுதப்பட்ட மருந்தைத்தான் அவர்கள் கொடுக்கிறார்களா அல்லது அது போன்ற எழுத்துக்களுடைய வேறு ஏதேனும் மருந்து கொடுக்கப்படுகிறதா என்று யாருக்கும் தெரியாது. நமக்கு என்ன வருத்தம் இருக்கிறது, இது எதனால் வந்தது, இது வேறு ஏதாவது வருத்தத்துக்கான அறிகுறியா, இது எப்போது குணமாகும் என்று எதுவும் நமக்குத் தெரியாது. அந்தக் கழுத்தில் மாட்டியிருக்கும் கருவியினால் செய்த சோதனையின் மூலம் அவர்கள் அறிந்துகொண்டது என்னவென்று இதுவரை எந்த வைத்தியரும் நமக்குச் சொன்னதுமில்லை.
இப்படி, மருத்துவத் துறை ஒரு இரகசியத் துறையாய் மிளிர்ந்து கொண்டிருக்கும் பொழுது, Healer's Baskar அவர்களின் Anatomic Therapy என்ற நூல் ஒவ்வொரு நோய் பற்றியும் மிக ஆழமாகவும் அகலமாகவும் அலசுகிறது. அவர் நமது உடலை பல உறுப்புகளாக பிரித்து நோக்கவில்லை. மனித உடலானது பல கோடிக்கணக்கான செல்களினால் கட்டமைக்கப்பட்டது என்ற அடிப்படையில் அவருடைய அலசல் அமைகிறது. இந்த ஆழமான அலசலின் பின், நம் உடலில் ஏற்படக்கூடிய சகலவிதமான நோய்களுக்குமான காரணங்களாக 5 காரணங்களை முன்வைக்கிறார். நமக்கு ஏற்பட்ட நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும்போது அந்த நோய் காணாமல் போய்விடுகிறது என்று விபரிக்கிறார். 
Healer's Baskar  அவர்கள், அந்த நூலில் நாம் திடுக்கிடக்கூடிய ஆச்சரியமான பல விஷயங்களைச் சொல்கிறார். உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா, நிறைய இனிப்புப் பலகாரங்கள் சாப்பிடுங்கள் என்கிறார். உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறதா, உப்பு சாப்பிடுங்கள் என்கிறார். சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் என்றெல்லாம் நோய்களே இல்லை என்கிறார். அறுசுவை உணவை திகட்டும்வரை உண்ணுங்கள் என்கிறார். தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டாம் என்கிறார். காய்ச்சல் வந்தால் பாயாசம் வைத்து பக்கத்து வீடுகளுக்கெல்லாம் கொடுத்து சந்தோஷத்தைப் பரிமாறுங்கள் என்கிறார். இவற்றையெல்லாம்விட மிக மிக ஆச்சரியமானது என்னவென்றால், இந்த விடயங்களையெல்லாம் அவர் மிக மிகத் தெளிவாக விளக்கி அவற்றை ஏற்றுக்கொள்ள வைத்து நமக்கு அறிவு புகட்டுவதுதான்.
இதே நூலில் நமக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து மருந்து மாத்திரையில்லாமல் குணமாகக் கூடிய வித்தையை மிக எளிதாகக் கற்றுத் தருகிறார். பாமரன் கூடப் புரிந்துகொள்ளக்கூடிய மிக எளிய தமிழில் எளிய உதாரணங்களின் மூலம் மிக சிக்கலான உயிரியல் விடயங்களை விளக்கியிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.
படிக்கத் தொடங்கினால் இடையில் நிறுத்த மனமில்லாமல் தொடரக்கூடிய ஒரு மருத்துவ நூல் இது. நூலாசிரியர் கூட இந்த நூலை அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாக படிக்காமல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்ச்சியாக படிக்குமாறு வேண்டுகிறார்.
இத்தனை பொக்கிஷமான நூலை படிக்கவேண்டுமென்ற ஆர்வம் உங்களுக்கு ஏற்படுகிறதல்லவா?. இந்த நூலின் மென்பிரதியை பெற்றுக்கொள்ள www.anatomictherapy.org  என்ற வலைத்தளத்திற்கு சென்று அங்கே Free Book Downloads என்ற tab ல் Anatomic Tamil pdf Book Free Download என்ற பட்டனை அழுத்தி தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி போன்ற தகவல்களை அனுப்புங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அதன் pdf வடிவம் அனுப்பி வைக்கப்படும். 
இப்படியொரு அருமையான நூலைத் தந்தமைக்காக Healer's Baskar  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலைப் பின்பற்றி அனைவரும் ஆரோக்கியமாய் வாழ பிரார்த்திக்கிறேன்.

Post Comment