எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, September 28, 2012

‘Innocence of Muslims’ - காழ்ப்புணர்ச்சியின் ஒரு வடிவம்


இன்று உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களிடையேயும் பிற மதத்தவர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ‘Innocence of Muslims’ என்ற திரைப்படத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களை மட்டுமல்ல, மற்றொரு மனிதனையும் அவனுடைய மதம், கலாச்சாரம் போன்றவற்றை மதிக்கத் தெரிந்த சகல மக்களையும் கொந்தளிப்புள்ளாக்கிய ஒரு திரைப்படமாக இது அமைகிறது. அமெரிக்காவில் வாழும் யூதக்குழுவால் தயாரித்து வெளியிடப்பட்ட இத்திரைப்படமானது, இஸ்லாமிய மக்களின் வழிகாட்டியும் இறைத்தூதருமான முஹம்மது நபி (ஸல்) அவர்களை மிகவும் கேவலமாக சித்தரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படமானது, முஸ்லிம் மக்களின் மனங்களில் ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை சரியாகத் தெரிந்து கொள்ளாமல், ஒரு ஒழுக்கமான மதத் தலைவரை இப்படிக் கேவலமாக இழிவு படுத்தி இஸ்லாமிய நெஞ்சங்களைக் குத்திக் கிழித்து அதில் அற்பமான சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கீழ்த்தரமான செயலை, தனி மனிதனின் உச்சக்கட்டக் கருத்துச் சுதந்திரமாய் அமெரிக்க அரசாங்கம் வர்ணித்திருப்பது அவர்களின் காழ்ப்புணர்ச்சியை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. இஸ்லாமிய வளர்ச்சி பொறுக்க மாட்டாமல் இஸ்லாம் மதத்துக்கும், மதத்தவர்களுக்கும் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் மற்றுமொரு நாசகார விளையாட்டாகத்தான் இதைக் காண முடிகிறது. அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதைத்தான் அவர்கள் கருத்துச் சுதந்திரமாகக் கொள்கிறார்களா?. இதுதான் கருத்துச் சுதந்திரம் என்றால், எல்லாருமே இந்தக் கருத்துச் சுதந்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டால், உலகமே சுடுகாடாகிவிடாதா?. அமெரிக்கர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு ஒரு கோட்பாடு இல்லையா?. அவரவர் சுதந்திரம் அடுத்தவரின் மூக்கு நுனியளவுதான் என்ற அடிப்படை நாகரிகம் கூடத் தெரியாதவர்களா அவர்கள்?.
இப்படியான சர்ச்சைக்குரிய திரைப்படங்களை தரவேற்றி அதன் மூலம் இலாபம் காணப் பார்க்கும் இணையத் தளங்களை என்னவென்பது?. எந்த ஒரு சமூக ஊடகமும் சமய, கலாச்சார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும். ஊடகத்துறையானது, சமய, கலாச்சார வளர்ச்சியில் பங்கேற்க வேண்டுமே தவிர, அநாகரிகங்களுக்கு துணை போகக் கூடாது. தங்களுடைய கோட்பாடுகளுக்கு அமைவாகத்தான் இந்தத் திரைப்படம் அமைகிறது என்று சொல்கிற Youtube தளம், எந்த ஒரு கலைப் படைப்பும் அடுத்தவரைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது என்ற மிகச் சாதாரணமான நாகரிகத்தை தங்களின் கோட்பாடுகளுக்குள் இணைத்திருக்கவில்லையா?.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சிறு வயது முதலே ஒழுக்கசீலராகவும், உண்மையாளராகவும், நம்பிக்கையாளராகவும் இருந்தவர்கள். ஒழுக்கத்தின் சின்னமாக இலங்கிய நபி முஹம்மத் (ஸல்) அவர்களை இப்படிக் கீழ்த்தரமாக சித்தரித்த இந்த மனிதர்களின் தேவை எதுவாக இருக்க முடியும்?. இது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியின் பிரதிபலிப்புத் தானே.
முஸ்லிம்கள், நபி (ஸல்) அவர்களை தங்கள் உயிரை விடவும் மேலாக நேசிப்பவர்கள். உங்கள் நேசத்துக்குரிய ஒருவரை யாராவது அவதூறாகப் பேசினால் நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பீர்களா?. முஸ்லிம்கள் அலையலையாகக் கிளர்ந்தெழுந்து தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியது நபி (ஸல்) அவர்கள் மீது கொண்ட பேரன்பினால்தான். ஆனால், சில முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்பட்டு மிகவும் அநாகரிகமான முறையில் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியதாக அறிகிறோம். இந்தச் செயல் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அது முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே இழிவு படுத்திக் கொள்ளும் நிலை. முஸ்லிம்களின் ஒவ்வொரு செயலும், அது ஆர்ப்பாட்டங்களானாலும் போராட்டங்களானாலும், அது இஸ்லாமிய ஒழுக்க நெறி முறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும். முஸ்லிம்களின் நடை முறையைப் பொறுத்துதான் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு பிரதிபலிப்பும் நன்மதிப்பும் வேற்று மததவர்களிடையே ஏற்படும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், இந்த வன்செயலைப் பார்த்து கொதித்தெழுந்திருக்க மாட்டார்கள். இந்தப் பாதகச் செயலை செய்தவனுக்காக வருத்தப்பட்டிருப்பார்கள். அவனுக்கு இஸ்லாமியப் பேரொளி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்திருப்பார்கள். பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் இலக்கணமானவர்கள் அவர்கள். இதை விட மோசமான செயல்களைக்கூட சகித்து, பொறுமை காத்து வெற்றியடைந்தவர்கள். அவர்களைப் பின்பற்றி நடக்கக்கூடிய முஸ்லிம்கள், தங்கள் நடைமுறைகளை இஸ்லாமிய மார்க்கத்தினதும், முஹம்மது நபி (ஸல்) அவர்களினதும் கௌர்வத்தை பாதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.
அல்லாஹ் சகலமுமறிந்தவன். அவனே தண்டிக்கவும், மன்னிக்கவும் போதுமானவன். தன் தூதரை நிந்தித்தவனுக்குரிய தீர்ப்பை அவனே கொடுத்து விடுவான்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன