எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, May 20, 2011

காத்திருப்பாயா பெண்ணே!

காலமொன்று
வரும் கண்ணே.
காத்திருப்பாயா?

உன் ஜன்னல் இடுக்குகளில்

நீல வானம் பதுங்கியதும்,
என் மொட்டை மாடியிலே
நிலா வந்து உறங்கியதும்,
நந்தவன நாட்கள் கண்ணே.
ஞாபகத்தின் வேர்கள் அவை.

வேர்கள் கண்ட கனவெல்லாம்

முட்டி முளைத்து
இலையாய் கிளையாய்
உருவாகும் வேளை,
காற்று நம்மைப் பகைத்தது.
கனவின் கிளையை உடைத்தது.

அப்பாவின்

அரசாங்க வருமானம்
அடுப்பெரிக்கப் போதவில்லை.
அம்மாவின்
ஆஸ்பத்திரி பில்களுக்கு
அடகுக்கடை போதவில்லை.

இரண்டு தட்டு வீடும்

இலட்சங்களில் காசும்
இல்லாத படியால்
அக்காவின்
அந்தரங்கக் கனவுகள்
அந்தரத்தில் தொங்குதடி.

தாவணிப்

பூக்களாய்
தளைத்து நிற்கும்
தங்கைமாரில்
கால்மணித் தங்கத்தையும்
காண்பதற்கு முடியவில்லை.

வேலியிலே இத்தனை

முட்களை
வைத்துக்கொண்டு
எப்படிக் கண்ணே -
என்னால்
பூக்களில்
மெத்தை நெய்து
புரண்டு படுக்க முடியும்?

பாசம் என் கனவை

கட்டிப் போட்டது.
காதல் என் இதயத்தை
கண்ணீரால் சுட்டது.

விழிகளிலே

நீர் தாங்கி
நான் 
விடைபெற்ற வேளையிலே,
நீ உடைந்தழுதாய் .
உன் கண்ணீரை
ஏந்திக்கொள்ள
முடியவில்லை.

மன்னித்துவிடு பெண்ணே.

உனக்குக்
கனவுகளும் தந்தேன்.
கண்ணீரும் தந்தேன்.

கடல் தாண்டி வந்தேன்

தங்கத்தில் மீன்பிடிக்க.

கரைசேரும் நன்னாள்

கட்டாயம் வரும் கண்ணே.

காலம் பதில் சொல்லும்.

அதுவரைக்கும் -
காதலோடு
காத்திருப்பாயா பெண்ணே!


2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன