எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, April 25, 2011

என் முன்னுரை

எழுத்துத்துறையில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருக்கிறது.
முன்பெல்லாம் அவ்வப்போது எதையாவது எழுதிக்கொண்டிருப்பேன்.  ஆனால் ஒருபோதும் அவற்றை அரங்கேற்ற  முயற்சித்ததில்லை. 
இப்பொழுதும் நிறைய எழுதவேண்டுமென்ற ஆசை இருக்கிறது.
தனிமையில் பிரயாணம் செய்யும்போதெல்லாம் என் கற்பனை அருவி அணை உடைத்து ஓடும்.
அவற்றிற்கு வரி வடிவம் கொடுத்து முழுமைப்படுத்துவதற்க்கான நேரமும் சூழ்நிலையும் மனநிலையும் ஒருங்கே அமையப்பெறுவதுதான் அரிது. அப்படியான சந்தர்ப்பங்கள் எப்போதாவது அமையும்போது என் பேனாப் பறவையும் மெல்லியதாய்ச் சிறகை விரிக்கும்.
என் எழுத்துக்களை நான் யாரோடும் பகிர்ந்து கொண்டதில்லை. உதவாமல்போகும் உலோபியின் சொத்துக்களைப்போல அவை என் நாட்குறிப்புகளுக்குள்ளே பதுங்கிக்கிடக்கும். 
எப்போதாவது என் ஞாபகப் பெட்டகம் தூசு தட்டப்படும்போது என் பழைய உளறல்கள் எனக்குள்ளே பனி மழையை பொழிந்து விடும்.
என் எழுத்துக்களை பதிந்து கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு வலைப்பக்கத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அண்மையில்தான் வந்தது. 
என்னுடைய பழைய படைப்புக்களில் பல அரங்கேற்றப்படாமலேயே அடக்கம் பெற்றுவிட்டன.
இருப்பதையாவது பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆவலோடும், இன்னுமின்னும் எழுதவேண்டுமென்ற ஆர்வத்தோடும், யாராவது ஒருவராவது இவற்றை ரசிக்கக்கூடும் என்ற நம்பிக்கையோடும் இந்த வலைப்பதிப்பை ஆரம்பிக்கிறேன்.
இந்தப் பக்கம் பொதுவாக என்னுடைய கவிதைகளையும், நான் ரசிக்கின்ற பல விடயங்களையும், என்னுடைய விமர்சனங்களையும் சுமந்து வரும்.
அன்பு நண்பர்களே, என்னோடு இணைந்திருங்கள் எப்போதும். 
உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

Post Comment

1 comment:

rajahir said...

Warmly welcome............for ur efford

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன