எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, November 24, 2011

எதிர்காலம்

நிமிடங்களின் ஆதிக்கம்
கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
சுமத்திவிட்டுப் போகும் பாரங்கள் ..
எதிரே தெரியும் பூதாகரத்தை
எதிர்கொள்ளத் துணிவின்றி
உடைந்து நொறுங்கிவிட்ட ஒரு இதயம்.
பேச்சிழந்து,..
பெருமூச்சுக்கள் மட்டும்
வெப்பத்தை வெளியாக்கும்.
இருண்ட காட்டினுள்
ஆந்தைகள் அலறும் சப்தங்களாய்
பயமுறுத்தும்
அடர்த்தியான மர்மம்.
பதில் சொல்லத் தெரியாமல்
வெறித்துப் பார்க்கும்
மௌனங்கள்.
பிரித்துப் பார்க்க முடியாத
பின்னல்களுக்குள்
முடிந்து வைக்கப் பட்டிருக்கிறது
என் எதிர்காலம்.

Post Comment

Monday, October 17, 2011

விழி நீரில் ஒரு ராகம்

வேறாரும் பேசாத பாஷை  இது
போராடும்  குயிலொன்றின்  ஓசை   இது
என்   மூச்சுக்   குழலில்
மூழ்கிப்போன
காற்றின்   கானம்   இது...
இன்று
மூக்கு   நுனியில்
முடிந்த பிறகு
தேம்பும்   ராகம்   இது...
விழி   நீரில்  ஒரு   கோலம் ...
விதி  போடும்  அடையாளம் ...

வேர்கள் பிரிந்தாலும் மண்ணில்
சிறு  நார்கள்  நெழிந்தோடுமே ...
மூச்சு  பிரிந்தாலும் தேகம்
சிறு  சூட்டில்  உயிர்  தாங்குமே ...
அறுந்திடும் உறவினில்
விழுந்திடும் ஈரமே....
பிரிந்திடும் வேளையில்
நெருங்கிடும் தூரமே.... - இது
எரிந்து முடிந்த மூங்கில் கரியில்
கசிந்து வழியும் இசையோ....

வானம் பொழிகின்ற துளியில்
மன ஊனம் அழிகின்றதே....
கார்மேகம் திசை மாறும் போது
வெறும்  காற்று புயல் வீசுதே ...
பழகிய சூரியன்
மறைந்திடும் நேரமே....
அழகிய வானவில்
கரைந்திடும் சோகமே .... - இது
உதிர்ந்து  விழுந்த மலரின் நினைவில்
அழுத கொடியின் குரலோ ....

Post Comment

Sunday, October 2, 2011

ஒரு நிலா இரவில்...

ஒரு நட்சத்திரப் பூந்தோட்டமாய்
செழித்துக் கமழ்கிறது
கனவுப் பூக்கள்.

பூரணை நிலவின் பேரொளியாய்
நம்பிக்கை வெளிச்சம்
நெஞ்சத்தின் அறைகளுக்குள்
வெள்ளைத் தீந்தை அடிக்கிறது.

வானத்தில் விசிறப்பட்ட
நீலத் திரவமாய்
மனசோடு கலக்கிறது
புதிதாக ஒரு ஊற்று.

ஒவ்வொரு கணமும்
தன்னை
புதுப்பித்துக் கொள்ளும்
இராத்திரி வானம்
 போதி மரமாக
புதுப் போதனை செய்கிறது.
சில்லென்று தழுவும் பூங்காற்று
உற்சாக பானமாய்
உச்ச போதை  கொடுக்கிறது.

ஒரு ஆனந்த  நிகழ்வின்
ஆரம்ப  விழாவுக்கு
வரவேற்புப் பாடல் பாடிக்கொண்டு
ரெக்கை விரித்துப் பறக்கிறது
ஒரு பட்டுப் பூச்சி.

Post Comment

Monday, August 15, 2011

யார் இந்த மர்ம மனிதர்கள் (Grease men )???....

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் பரபரப்பாய்  பேசப்பட்டுக் கொண்டிருக்கும் கிரீஸ் மனிதர்களைப் பற்றிய சின்னதொரு அலசலும் என் எண்ணங்களின் பதிதலும்தான் இது.

ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில்தான் உடல் முழுவதும் கிரீஸ் பூசிய  இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டமும் அட்டூழியங்களும் ஆரம்பித்ததாய் கூறப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை பகுதிகளில்தான் இது ஆரம்பித்ததாக சொல்கிறார்கள். பின் நாட்டின் மத்திய பிரதேசத்துக்கும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் விஷ்தீரனமாயுள்ளது.

அது சரி, யார் இந்த மர்ம மனிதர்கள், எதற்காக வருகிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டுமில்லையா? யாருக்குங்க தெரியும்? நானே ஆடிக்கொருக்கா ஆவணிக்கொருக்கா என்றுதான் செய்தி பார்ப்பன், எனக்கெப்படி இதெல்லாம் தெரியப் போகுது? திடீர்னு ஒருநாள் ஒரு வானொலியில பத்திரிகை வாசிக்கிற காலை நிகழ்ச்சியொன்றில் (வெற்றி FM- விடியல்) தான் முதல் முறையாக இந்த மர்ம மனிதர்களைப்  பற்றி கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகுதான் யாருப்பா இவங்க என்கிற எண்ணம் எனக்கு வந்தது.

இணையத்தில்  தேடித் பார்த்தேன்.ஒரு வலைத் தளத்தில் இறக்காமம், வரிப்பத்தாஞ்சேனை சம்பவங்கள விளக்கமா போட்டிருந்தாங்க. ஆண்கள் இல்லாத வீடுகளுக்கு சென்று அங்குள்ள பெண்களை தாக்க முயற்சிப்பதாக சொல்லப்பட்டது. அவர்களை ஊரார் துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போது அவர்கள் ஏதோ ஒரு பொருளை பொலிஸாரிடம் காட்டியதும், பொலிஸார் அவர்களுக்கு சல்யுட் அடித்து விடுவித்ததாகவும் சொல்லப்பட்டது.

எந்த உலகத்துலடா  குற்றவாளிக்கு காவல்துறை சல்யுட் அடிக்கிறது? எல்லாம் மர்மமாத்தான் இருக்கு.. அதுமட்டுமில்லாம நாட்டின் பல பாகங்களிலும் ஒரே  நேரத்துல  இந்த சம்பவங்கள்  நடக்கிறதால  இத செய்யிறது  நிச்சயமா  ஒரு பெரிய  கூட்டமாத்தான்  இருக்கணும் . இதன் பின்புலத்துல பெரியதொரு சக்தியும் இருக்கணும் என்கிறது தெள்ளத் தெளிவு. இது குறித்து  குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சொன்னதாக சொல்லப்படும் கருத்துக்களும் வியப்பா இருந்தது.

இப்படியிருக்க,  நாட்டின் பல பகுதிகளிலும்  இந்த மர்ம மனிதர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அன்றாடம் பல அசம்பாவிதங்கள் நடப்பதும், மக்கள் துரத்துவதும், பிடிப்பதும், காவல்துறையிடம் ஒப்படைப்பதும், அவர்கள் யாருக்கும் தெரியாமல் விடுவிப்பதுமாயிருக்க நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பொலிஸ் நிலையங்கள் தாக்கப் படுவதும், இரு தரப்பினரும் காயப்படுவதும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவதுமாய் ஏகப்பட்ட செய்திகள் அன்றாடம் வெளிவந்தவண்ணமிருந்தன.என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே   என்கிற மாதிரி சும்மா  இருக்கவும்  விடாம  மர்ம மனிதர்கள் உள்ளூருக்குள்ளும்  வர  ஆரம்பிச்சுட்டாங்க.  மூன்று நான்கு நாட்களுக்குமுன் சம்மாந்துறை பிரதேசத்தில் ஒரு பெண்மணியைத் தாக்கியவனை ஊரார்  துரத்திக்கொண்டு  வர, அவன்  காவல்  நிலையத்துக்குள்  ஓடி  ஒழிந்ததும், உடனே காவல் நிலைய மின் விளக்குகள் அணைக்கப்பட்டதும், அது பற்றி பொலிஸாரிடம் வினவ, அப்படி யாரும் வரவில்லை  என்று  அவர்கள் சொல்ல அந்தப் பிரதேசத்திலும் பிரச்சினை தொடங்கியது. ஊர் மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு கல்லெறிய, அவர்கள் கண்ணீர் புகையடிக்க, கிட்டத் தட்ட இரவு 2 மணி மட்டும் ஊரார் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

மற்றுமொரு சம்பவம் வாழைச்சேனையிலும்  இடம்பெற்றது. பிடிக்கப்பட்ட மர்ம மனிதரை பொலிஸாரிடம்  ஒப்படைத்த மக்கள் ஏதோ சந்தேகத்தில் அவனைக் காட்டுமாறு கேட்க அவர்கள் மறுத்தபோது, அங்கேயும்  கலவரம்  வெடித்தது. காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

பொத்துவிலிலும் இப்படியான சம்பவம் நடைபெற்று கைகலப்பில் ஒரு குடிமகன் இறந்துபோனதும்கூட புதிதில்லை.

இப்படிப் பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க கல்முனை நகர்ப் பகுதியிலும் சாய்ந்தமருது, காரைதீவுப் பகுதிகளிலும் கிரீஸ் மனிதன் வந்ததாக பல தகவல்கள் பொசிந்தன. முந்த நாள் இரவு கல்முனைக்குடியில்  ஒரு பள்ளி வாசலில் பதுங்கியிருந்த கிரீஸ் மனிதனை மக்கள் துரத்த அவன் கூரைகளுக்கு மேல் பாய்ந்து மறைந்து போனதாகவும் கண்டவர்கள் சொன்னார்கள்.

நேற்றிரவு , கிரீஸ் மனிதன் மிக அருகில் வந்து விட்டான். எங்கள் வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றுப் பின்னேரமே நடமாட்டம் தெரிந்து மக்கள் தேடிச்  சென்றபோது, இடையிலேயே பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் அப்படி யாரும் வர சாத்தியமில்லை என்று சொல்லி மக்களை தடுத்ததாக சொல்லப்பட்டது. நேற்றிரவு அந்தப் பாடசாலைக்கருகில் வசித்து வந்த ஒரு பெண்மணியின் கையில் கிரீஸ் மனிதனின் ஆயுதத்தால்  மூன்று கீறல்கள் செய்யப்பட்டதை அடுத்து   அப்பெண்  உடனடியாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு இளைஞர்களெல்லாம்  அவனை தேடிச் சென்ற போதும் பிடிக்க முடியாமல் போய்விட்டது.

நான் அறிந்த வரையில் நடைபெற்றவற்றை இதுவரைக்கும் சொல்லியிருக்கிறேன். இன்னும் பல்வேறு சம்பவங்களும் நாட்டின் பல பகுதியிலும் நடைபெற்றிருக்கின்றன.

என்ன நான் கதை சொல்லி போரடிக்கேனா? என்ன செய்றது? சொன்னாத்தானே தெரியாதவங்களும் தெரிஞ்சுக்க முடியும்...
 

இப்படியான அசம்பாவிதங்கள் எத்தனையோ நடைபெற்ற போதும், அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும், மர்ம மனிதர்கள் என்று யாரும் இல்லை, பொய் வதந்திகள், கட்டுக் கதைகள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

அப்படியென்றால்  இதையெல்லாம்  யார் செய்வது? அவன் திருடன், மனநோயாளி, யானை கணக்கெடுக்க வந்தவன், பூனை கணக்கெடுக்க வந்தவன் என்றுதான் எல்லாப் பெருந்தலைகளும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  அதென்ன , எல்லாத்  திருடர்களும் , மனநோயாளிகளும்  ஒரே நேரத்தில் வரிந்து கட்டிக் கொண்டு  இறங்கி ஒரே வேலையை செய்வது? ஆச்சரியமாயில்லையா?சரி, அப்படித்தான் அவன் மனநோயாளி, திருடன் என்றாலும் அவன் பொது மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நேரம் அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது இவர்களுக்கு கடமை இல்லையா? பொதுமக்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு பிடித்துக் கொண்டு கொடுக்க பொறுப்பில்லாமல் அவர்கள் விட்டுவிட்டால்.அந்த மனநோயாளிகள் இன்னும் பலரை தாக்க மாட்டார்களா?

அதைவிட பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் காவல்துறைதானே குற்றவாளிகளைக்  கண்டுபிடிக்க வேண்டும். அதைவிடித்து பிடிப்பவர்களை எங்களிடம் கொண்டு வந்து தாருங்கள் என்று கேட்டு விட்டு அவர்கள் சும்மா இருப்பது எப்படி நியாயம் ? 119 க்கு call எடுத்தபோதும் அவர்கள் வந்து சேர முக்கால் மணி நேரம் ஆனதாமே..

யார் மறுப்புரை தெரிவித்தபோதும், நிச்சயமாக இந்த மர்ம மனிதர்களின் அட்டூழியங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பின் புலத்தில் யார் இருக்கிறார்கள்?, இவர்களின் அடிப்படை நோக்கம்தான்  என்ன?, இதனால் யாருக்கு என்ன லாபம்?, இது எதுவரைக்கும் நீடிக்கும்?, இதுபோன்ற இன்னும் பல கேள்விகள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறது.

யாரால் பதில் சொல்ல முடியும்?. . பொறுத்திருப்போம் காலம் என்ன பதில் சொல்கிறது என்று தெரிந்துகொள்ள.

Post Comment

Saturday, August 13, 2011

பேரழகில் கரைந்துவிடு

உன்னை விளக்க
போதுமானதாய் அல்ல
என்னுடைய கவிதைகள்.

உன் சுவாச இடைவெளிகளின்
நீட்சியை
எந்தவொரு மொழியின் ஆளுமையாலும்
அளந்து குறிக்க இயலாது.

மௌனங்களைக்
குழைத்துத் தீட்டிய
ஓவியங்களாய்
வெறுமையை பிரதிபலிக்கும்
உன் புன்னகைகள்
எந்தவொரு பொருளையும்
உணர்த்துவதாய் இல்லை.

எப்போதாவது,
உன் மௌனங்கள் உடையும்போதும்
உணர்வுகள் வெளிப்படாமல்
உள்நாக்கினுள்ளேயே ஒட்டியிருக்கிறது.

பூச்சியங்களுக்குள்  இருக்கும்
வெறுமையை நீ
வெளிப்படுத்திய போதும்,
எனக்கு மட்டும் தெரிகிறது...
பூமிக்கடியில் உள்ள உஷ்ணம்
உன் இதயத்துக்குள்ளும் இருப்பது.

வீசாத பல புயல்களும்
வெடிக்காத சில எரிமலைகளும்
உன் அமைதிக்குள்
ஒழிந்திருப்பதை
உன் இமைகள் தாங்கும் பாரங்களில்
கண்டு கொள்கிறேன்.

உன்னில் தெறித்து விழுந்த
ஒரு மழைத்துளி
மண்ணைச் சுடுகிறது.
***

மௌனங்களுக்குள்ளும்
வெறுமைகளுக்குள்ளும்
தொலைந்துபோன உன்னை
ஏன் நீ
மீட்டெடுக்கக் கூடாது?

உன்னைச் சுற்றும் காற்றிலும்
உன்னில் தூறும் சாரலிலும்
உன் சாலைப் பூக்களின் வாசத்திலும்
நீ ஏன் கரைந்துவிடக் கூடாது?

சுகமாய் சுடும்
அதிகாலைச் சூரியனின் ஸ்பரிஷத்திலும்,
சுதி மாறாமல் பாடும்
காட்டுக் குயில்களின் சங்கீதத்திலும்
ஏன் உன் இதயம்
மயங்கிவிடக் கூடாது?

இரவுகளின் நம்பிக்கையாய்
வெளிச்சத்தை வார்த்துக்கொண்டே
வீதி உலாப் போகும்
மின்மினிப் பூச்சிகளின் அழகிலும்,
வானப் பந்தலில்
பூத்துக் கிடக்கும்
நட்சத்திரப் பூக்களின் பேரொளியிலும்,
ஒளியை வழியனுப்பி
மெல்லிய குளிரை
சில்லெனத் தடவும்
குளிர் நிலவின் பிரம்மாண்டத்திலும்
நீ ஏன் தொலைந்துவிடக் கூடாது?
***

உன் வெறிச்சோடிய வாழ்வில்
நீ எதைக் கண்டாய்?

இன்னும்
எதைக் காண்பதற்காய்
நீ விரதமிருக்கிறாய்?

நீர்க்குமிழியாய்
எந்தநிலையிலும்
உடைந்துவிடக் கூடிய வாழ்வில்
வெப்பத்தை சுமந்துகொண்டு
நீ எதை சாதிக்கப் போகிறாய்?

எழிலைப் போர்த்தியிருக்கும்
இந்த உலகத்தின் இனிமைகளை
நீ இழந்துவிடப் போகிறாயா?
***

அருவிக் கரையில் நீராடி
உன் எரிமலையின் உஷ்ணத்தை
நீ அணைத்துவிடு.

மல்லிகைப் பூக்களின் வாசனை கொண்டு
உன் வெறுமைகளை
நீ நிறைத்துவிடு.

பிஞ்சுத் தென்றலில்
புரண்டு விழுந்து
உன் புயல் காற்றை
அடக்கிவிடு.

வானம் பூமி விரிந்து கிடப்பதும்
மலைகளும் கடல்களும்
படர்ந்து கிடப்பதும்
மரங்களும் மலர்களும்
அடர்ந்து கிடப்பதும்
உன் தனிமையை
துடைப்பதற்காய்த்தான்.

உலகத்தின் பேரழகை
நீ கட்டித் தழுவு.
உன்னை
இறுக்கிய உணர்வுகளின் எச்சங்களை
கண்ணீர்த் துளிகளால்
கழுவித் துடைத்துவிடு.
Post Comment

Sunday, August 7, 2011

உருகி வடியும் வலிகள்


இறுகிப் பிணைந்த
உயிர்ப்பிணைப்பின்
மயிரிழை வெடிப்புக்களுக்குள்ளிருந்து
ஒழுகி விழுகின்ற
கண்ணாடித் துளிகள்
கண்களுக்கு எட்டாத
இருதயத்தின் 
நிர்மலமான இருட்டிற்குள்
உடைந்து விழுகின்றன.

ஆர்ப்பாட்டமில்லாத
தனிமைகளில்
செலவழிக்கப்படாமலிருக்கும் கணங்களின்
உயிர்த்துடிப்புகளை
அந்த உடைதல்களின் 
கீறல்கள்
வலி செய்கின்றன.

மௌனம் மறைத்துக்கொண்டிருக்கும்
அந்தகாரத்தின் கொடூரங்களுக்குள்
ஒரு ஆத்மாவின் கதறல்கள்
துடிக்கத் துடிக்கப்
புதைக்கப்பட்டிருக்கின்றன.

உருகி வடியும் வலிகளின்
விழுப்புண்களாய்,
இன்னமும்
துடைக்கப்படாத ஈரங்களுக்குள்
சேகரித்து  வைத்திருக்கும்
வியர்வைத் துளிகளின் வாசனை
நெஞ்சுக்குள்
பற்றிப் பரவி
ஒரு ஜீவராகத்தின்
ஸ்வரங்களை மீட்டிக்கொண்டு
பட்டை பட்டையாய்
படர்ந்திருக்கிறது. 

Post Comment

Friday, August 5, 2011

ஒரு முடிவின் கதை

என்னது,
என் உலகம்
ஸ்தம்பித்துப் போனதா?

என்னைச் சுற்றி
எந்தக் காற்றும்
அசைவதாயில்லையே...

எந்தக் கிரகமும்
என் பாதத்தின் கீழ்
சுழல்வதாயும் இல்லையே...

ஒட்டடை பிடித்த மேகம்
ஒரு அங்குலமேனும்
நகர்வதாயும் தெரியவில்லை.

ஊருக்குப் போன
மாரி மழை
இன்னமும் திரும்பி
வரவும் இல்லை.

எழுதிக் கோரவுமில்லை,
எந்தவொரு
முன்னறிவித்தலுமில்லாமல்
என் வேர்களெல்லாம்
வேலை விடுப்பு
எடுத்துக் கொண்டனவோ...

இல்லை,
ஓடிக் களைத்ததால்
ஓய்வு பெற்று விட்டனவோ...

என் காலடியில்
கருகிக் கிடப்பதெல்லாம்
என்ன?

அகன்று செறிந்து
என் பசுமையை பறைசாற்றிக் கொண்டு
என்னைப் போர்த்திக் கிடந்த
பச்சிலைகளா
இந்தச் சருகுகளெல்லாம்?

என்னில் கூடுகட்டி
குடும்பமாகிக் குதூகலித்த
குருவிக் கூட்டங்களெல்லாம்
எங்கே?

என் காலடியில் கிடந்து
கதை பேசிக் களித்த
காதலர்களெல்லாம்
எங்கே?

என் பரந்த கிளைகளின் கீழ்
மழைக்கும் வெயிலுக்குமாய்
வந்து இளைப்பாறிய
வழிப்போக்கர்கள் எங்கே?

என் பழங்களை
கொறித்துக் கொண்டு
ஓடிப் பிடித்து விளையாடிய
அணில் கூட்டங்கள் எங்கே?

கற்களோடும் கம்புகளோடும்
என்னில்
காய்கள் கொய்ய வந்த
குழந்தைகளெல்லாம் எங்கே?

என்னில் இனி
பயனில்லை என்று
ஒதுக்கி விட்டார்களா?

எனக்கு சந்தேகமாயிருக்கிறது.
ஒரு வேளை நான்...
இறந்து விட்டேனா??

ஆ... யாரது?
இரும்புக் கோடரியுடன்
என்னை நோக்கித்தானே
வருகிறான்
அந்த விறகுவெட்டி?

என் கிளைகளை
உடைக்கிறான்.
என் உடலை
தறிக்கிறான்.

என்னை வேரோடு
பிடுங்கி விடுவானோ??

வசந்தம் வரும் வரைக்கும்
என்னைக் கொஞ்சம்
விட்டுவைக்க மாட்டானா?

என் கணுக்கள் சிலவேளை
துளிர்க்கக்கூடும் அல்லவா?

என் சந்ததிகளெல்லாம்
எங்கிருக்கிறார்கள்?
அவர்களை நான்
ஒருமுறையாவது
கண்டுவர வேண்டுமே...

என்னைச் சுற்றிக் கிடக்கும்
சருகுகளையெல்லாம்
தன் சாக்கில் திணிக்கிறானே,
அவற்றையும் கூடவா
அடுப்பில் எரிப்பான்?

இல்லை,
அவனின் மனக்குரல்
எனக்குக் கேட்கிறது.

என் விதையில் விளைந்த
ஒரு மரத்துக்கு
என்னை உரமாக்கப் போகிறானாம்.

நன்றி கடவுளே...
என் ஊனம் உரமாக
என் மகனின் வடிவில்
நான் மறுபடியும் துளிர்ப்பேன்.

இப்போதுதான்
என் ஆத்மா
சாந்தியடைகிறது.

Post Comment

Sunday, July 31, 2011

அழகிய இளமைக் காலம்

கனவுகள்  பருகும்  காலம்

கவிதையில்  உருகும்  காலம்


மனதினுள் அருவியொன்று 

 
மடைதிறந்  தோடும்  காலம்


 

விழிகளில்  மீன்கள்  நீந்தும் 

வழிகளில்  மான்கள்  ஓடும் 


துறு துறு வென்று நெஞ்சு


தேடலில் தொலையும்  காலம்அறிவுரை  வெறுக்கும் காலம்


ஆணைகள் உடைக்கும் காலம்


எதிரியும்  நண்பனென்று


உறவிலே துய்க்கும் காலம்மனதினுள்  பட்டாம்  பூச்சி 


சிறகுகள்  விரிக்கும் காலம்


மலரினை மேயும் வண்டை 


மகிழ்வுடன் ரசிக்கும்  காலம்கிளைகளில் காற்று ஏறும்


அசைவிலே  கரையும் காலம்


குயில்களின்  பாட்டு  பரவும் 


திசைகளில் உறையும் காலம்இதழிலே  நகைகள்  ஏற்றி 


இமைகளில்  அமிர்தம்  ஊற்றி  


மழையிலே  நனைந்துகொண்டே 


நகர்ந்திடும்  இளமைக் காலம்

Post Comment

Friday, July 29, 2011

ஆயுதம் ஏந்தும் மௌனம்

எல்லாமும்
முடிந்து போன பின்னும்
மௌனம் மட்டும்
கை கட்டி நிற்கிறது.

சில நேரங்களில்

மௌனம் ஆயுதமாய் மாறி
அழித்திருக்கிறது
சில பல எதிர்ப்புகளை.

பல நேரங்களில்

வெண்புறாவாயும்
சிறகை
விரித்திருக்கிறது.

பல தடவை

பலரிடமும்
மெல்லச் சிரித்து
பல பேரின் மனங்களை
வலை போட்டு
இழுத்திருக்கிறது.

எங்கெங்கிருந்தோ

வீசப்பட்ட
அக்கினிச் சொற்களையெல்லாம்
மௌனம்
தன் உஷ்ணத்தால்
சுட்டு எரித்திருக்கிறது.

இன்று,

முதன் முறையாக
தற்காப்பு ஆயுதமாகி
மார்பை துளைக்கவந்த
மனித வெடிகுண்டுகளிடமிருந்தும்
என்னை
காப்பாற்றி
கரை சேர்த்திருக்கிறது.

இப்போதெல்லாம் .....

மௌனம்
தன் தன்மானத்தை
துறந்துவிட்டு
என் வாழ்வில்
நிம்மதி விளக்கேற்ற
அகிம்சையால் ஒரு
ஆயுதம் தரிக்கிறது.

Post Comment

Thursday, July 28, 2011

விடிகாலைத் தூக்கம்

விடிகாலைப் பொழுது
விழியில் ஓர் கனவு
அழகான கவிதை
அரங்கேறும் உணர்வு

மேகம் தேடிவந்தென்
வாசலிலே பனிப்பொழிய
சேமம் சொல்லிக்கொண்டு
வீடு செல்லும் வானிலவு

நட்சத்திரம் வந்தென்
முற்றத்திலே பூப்பூக்கும்
நல்லதொரு வீணை
மெல்லியதாய் பா இசைக்கும்

அதிகாலைக் குளிரெந்தன்
இருதயத்தில் பசை தடவும்
அசந்த நித்திரையில்
அரைகுறையாய் குயில்  மயக்கும்

அரைத் தூக்கம் கலைந்தபின்னும்
விழி தூங்க அடம் பிடிக்கும்
விலகிய போர்வை நீண்டு
தலை வரைக்கும் பாய் விரிக்கும்

கனவு கலைந்து மீண்டும்
கண்ணயர்ந்து போகையிலே
அயல் கிடக்கும் தொ(ல்)லைபேசி
அலார இடி முழக்கும்

திடுக்கிட்டு உயிர் விழிக்கும்
திகிலொன்றில்  மனம் பதைக்கும்
விடிந்துட்டா என்று நெஞ்சு
விடியலை வைது  தீர்க்கும்

விழித்திட விழி மறுக்கும்
விழிகளில் துயில் வலிக்கும்
அடுத்ததும் சில நிமிடம்
அசந்திட மனம் அழைக்கும்

திரும்பவும் போர்வை போர்த்தி
விரும்பியே துயில் நடக்கும்
பல மணித் துயிலை விட - அந்தச்
சில நிமிடம் தித்திக்கும்.

Post Comment

Tuesday, July 26, 2011

உண்மை அழியாது

புன்னகையில்
ஒழித்தாலும்,
 
பூணாரம்  போட்டு 
மறைத்தாலும்,

பூமிக்கடியில் 

புதைத்தாலும்,

புனல்  கடலில்  
கரைத்தாலும்,
 
காலங்கள் 
மறந்தாலும்,

என்றைக்கோ  துப்பிய  
விதையொன்று
மாரி மழைக்கு
மொல்லென்று   
முழைப்பதுபோல்,
 
பொய்யின்  கோதை
கிழித்துக்கொண்டு,

தக்க சமயத்தில்
சட்டென்று
வந்து  நிற்கும்
அழியாத  உண்மை.

Post Comment

Sunday, July 24, 2011

காதலில் விழுந்தேன்

பூவொன்று கண்முன்னே
நிற்கக் கண்டேன்.
புரியாமல்  தடுமாறி 
விக்கித்து  நின்றேன்.
ச்சீ என்று  விரட்டிவிட 
எண்ணித் தோற்றேன். 
சிலாகிக்கும் அசைவுகளில்
தொலைந்து போனேன்.

மீன்போல விழியிரண்டும்
மோகனங்கள் பாடிவர
தேன் கொண்ட பூவிதழ்கள்
சோபனங்கள் கூறி வர
ஏகாந்தம் தீபங்கள்
ஏற்றக் கண்டேன்.
என் எண்ணத்தில்  பாரியதோர்
மாற்றம்  கண்டேன்.

வேண்டாமே  காதலது 
வலிகொடுக்கும்  என்றவன்  நான்.
வீணாகக்  கழிக்கின்ற 
பொழுதென்றும்   சொன்னேன்.
ஆம்  நீங்கள்   விட்டிலென்று  
அடித்துச்  சொன்னேன்.
அடியோடு  காதலினை 
அணுகேன்  நான் என்றேன்.

வேதங்கள்  பல  சொல்லி 
மிடுக்கிக்  கொண்டேன்.
மிடியோடு  சுடிதார்கள் 
வேஷங்கள்  என்றேன்.
பெண்  என்றும்  பேயேதான் 
போகாதே  என்றேன்.
நீ பைத்தியமாய்  சுற்றுவது 
திண்ணம் என்றேன்.

ஏனென்றே சொல்லாமல்
என் நெஞ்சை நீ திருட
பூவாசம் நெஞ்சுக்குள்
மூச்சாகி உயிர் வருட
என் கொள்கைகள் துகள்துகளாய்
உடையக் கண்டேன்.
கொடியே உன் நினைவில் நான்
பொடியாகிப் போனேன்.

அடியே நீ தடி கொண்டு
அடித்தாலும் சரிதான்...
குதிகாலின் கீழ் வைத்து
மிதித்தாலும் சரிதான்...
விதி என்னை பித்தனாக்கி
அழித்தாலும் சரிதான்... - இனி 
என் மூச்சோடு உன்னை நான்
சுமப்பேன் கண்ணே.


Post Comment

இறுகிய கண்ணீர்

நிச்சயமற்ற
எல்லைக் கோடுகள்


நிரந்தரமற்ற
நலிந்த உறவுகள்


எங்கேயும் முடியலாம் என்று
தொடர்கின்ற பயணங்கள்


இறக்கிவிட  மனமின்றி
விரும்பியே  ஏற்றிக்கொண்ட 
கனமான  சுமைகள்


கைக்கெட்டாத் தூரத்தில்
தலைகீழாய்த் தொங்கும்
அந்தர நொடிகள்


வாயிருந்தும்
வார்த்தைகளுமிருந்தும்
எதிர்க்கருத்துச் சொல்லாத
தன்மானமற்ற மௌனங்கள்


எதையுமே சரியென்று
ஏற்றுக்கொண்ட பக்குவங்கள்


ஊரார் அறியாமல்
உள்ளுக்குள் அரங்கேறும்
ஒப்பாரிப் பாடல்கள்


பிரயாசைப்பட்டு
விழி மூடும் நேரம்
இரவுகளைப் பயமுறுத்தும்
பூதக் கனவுகள்


எத்தனையோ நினைவுகள்
இருள் படிந்த காட்சிகள்
இரும்பிலே வார்த்த
எலும்புக்கூடுகளாகி
கழுத்தை நெரிக்கும் போதும்,


இழவு பார்த்த கண்ணீர்
உருகி விழாமல்
இறுகிக் கனக்கிறது
இதயத்துக்குள்.

Post Comment

Thursday, July 21, 2011

அனுபவம் புதிது

பழகிய இடம்,
பழகிய முகம்,
பழகிய மொழி,
ஒன்றும் புதிதில்லை.

தழுவிச் செல்லும் காற்று,
தகதகக்கும் வானம்,
புழுதி மண்ணின் வாசம்,
புகை குடிக்கும் மேகம்,
இதுவரைக்கும் இங்கே
எதுவுமே புதிதில்லை.

உன் சுவாசம் பட்டபோது,...

என்னைக் குறுக்கிட்ட
கனவுகள் புதிது.
என்மேல் நெருப்பிட்ட
உணர்வுகள் புதிது.
என்னைத் தாலாட்டும்
ராகங்கள் புதிது.
என்னை நீராட்டும்
ஈரங்கள் புதிது.

என் இளமைக் கடப்பலை
கடந்து போகும் உன் நிழல்கள்
தெழித்துவிட்டுப் போகும்
பன்னீர் வாசனை புதிது.

இதயத்தின் மென்சுவரை
இமைகளால் நீவிவிடும்
சுகமான காதலின்
சுவை ரொம்பப் புதிது.

எங்கேயோ தொலையிருந்தும்
எதிர்பாரா தருணங்களில்
நினைவுகளை இழுத்தணைத்து
இதழ் பதித்து அனுப்பிவைக்கும்
உன் இதமான சேஷ்டைகள்
இன்னும் இன்னும் புதிது.

Post Comment

Wednesday, July 20, 2011

கருவறை ரகசியம்

இறைவா...
உன் படைப்பின்
நுணுக்கங்களை
பார்த்துப் பார்த்துப்
பிரம்மித்துப் போகிறேன்.

ஒரு உயிரின் பிரசவத்துக்குள்
நீ பொத்திவைத்திருக்கும்
காருண்யத்தை
எண்ணிப் பார்த்து
கிறுகிறுத்துப் போகிறேன்.

கண்ணுக்கே தெரியாத
சின்னஞ் சிறிய அணுவொன்றில்
எத்தனை பெரிய உருவத்தை
எப்படிப் புகுத்தினாய்?

ஒரு இருண்ட நீர்க்குடத்துக்குள்
உல்லாசமாய் வாழ்கிறதே
ஒரு பிஞ்சு உயிர் !!

அதை
அள்ளி எடுத்து
மாரோடு அணைத்து
முத்தம் பொழிவது
யாரங்கே ?

அதற்கு,
வெண்ணிலா காட்டி,
ஆடு, மாடு, கோழி என்று
பிராக்குக் காட்டி
அசந்த நேரத்தில் அமுதூட்ட
அங்கே
யார்  இருக்கிறார்கள்?

அந்தக் கருவறைக் குழந்தை
முதல் காற்றை நுகரும் போதே
தாயின் மார்பில்
பொசுக்கென்று தாய்ப்பால்
பொங்கி வழிகிறதே....
இதுவன்றோ
உன் பேரன்பின்
உச்சக்கட்டம்.

ஒரு பிரசவத்துக்குள்ளேயே
இறைவா,
நீ எத்தனையோ  அற்புதங்களை
ஒழித்து வைத்திருக்கிறாய் !!

இறைவா,
உன் பிரம்மாண்டத்தின் காலடியில்
என் ஒவ்வொரு அணுக்களும்
மண்டியிட்டுக் கிடக்கின்றன.


Post Comment

Sunday, July 17, 2011

பிரிவுச் சுமை

நீள்கடலின் கரையோரம்
நீந்தி விளையாடும்
ஒரு நண்டு,

தொலைதூர நிலவோடு
தூளியாடும்
முகில் ஒன்று,

அரும்போடு கதைபேசி
விருந்துண்ணும்
இளவண்டு,

நந்தவனக் காற்றோடு
நகையாடும்
தளிர் ஒன்று,

இவைபோல இன்னும்பல
நினைவோடு மாறாமல்
நிழலாகிக் கூட வர,

நெடும்பயணச் சுமைகளிலே
ஒடுங்கிவிழும் கண்ணீர்த்
துளியொன்றின்  சுடும்  ஈரம்
காற்றிலே காய்ந்து போகும்.

Post Comment

Friday, July 15, 2011

மௌனித்த நிஜம்

உலக மேடையில்
அரங்கேற்றப்பட்ட
என்
எத்தனையோ ஆட்டங்களும்
கட்டிய வேஷங்களும்
ஒன்றாகப் பிணைந்த
ஊர்வலம் நடக்கிறது.

ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு விதமாய்
உருவம் தரித்த
என் உணர்வுகள் எல்லாம்
எண்ணத் திரையில்
தய்ய தக்கா ஆடுகிறது.

இதயத்தின் ஓரத்தில்
சலசலத்து ஓடும்
அருவிக் கரையில்
தலைக்குக் குளித்து
சிலுப்பிக்கொண்டு நிற்கிறது
என் சந்தோஷ நிமிடங்கள்.

உருகிய  வியர்வையையும்
உறங்காத இரவுகளையும்
தலைக்கு கிரீடமாயும்
கழுத்துக்கு பட்டியாயும்
மாட்டிக்கொண்டு
நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறது
என் வெற்றிப் பொழுதுகள்.

கடவுளின் ஆசியில்
கல் கூடப்  பெண்ணாகும்
என்ற
உண்மை மறந்து,
புகழ் மாலைகளில்
உச்சி குளிர்ந்த
என் தற்பெருமை
பப்புள் மரத்தின்
உச்சியில் நின்று
குத்தாட்டம் போடுகிறது.

பதவிகள் வந்துசேர,
பகுத்தறிவு
வேலை நிறுத்தம் செய்த போது
கால் விரல் நுனிகளுக்கும்
தலைக்கண  வெறியேறி
தலைவிரித்தாடுகிறது
என் அதிகாரப் பொழுதுகள்.

இப்படி,
எத்தனையோ ஆட்டங்கள்
ஊர் முழக்கித் திரியும்போது,
இதயத்தின் இடுக்கில்
இருட்டு மூலைக்குள்
விதவைப் பெண் போல
முக்காடு போட்டுக்கொண்டு
முடங்கிக் கிடக்கிறது
என் நிஜமான  நிஜம்.

Post Comment

Wednesday, July 13, 2011

வைரமுத்துக் கவிஞருக்கு....

தமிழ்த்தாயின் கைபிடித்து
கவிப்பயணம் தொடங்கியவர்,
உயிர்க்கவிதை பல வடித்து
உலகத்தை அடக்கியவர்,
தாய்த் தமிழை தண்மதிக்கு
தன் கவியால் உயர்த்தியவர்,
தாய் மடியில் பிறந்த நாளை
தமிழினமே கொண்டாடும்.

கவிஞர் ஒரு பேரரசு.
சிற்றரசு வாழ்த்தினாலும்
சிறுமைதான் பரவாயில்லை.
பஞ்சப் புலவனின்
பாவாழ்த்தும் பரவாயில்லை.
நானோ  ஒரு பிச்சைக்காரி.
கவித்தட்டு கையில் ஏந்தி
தமிழ் எச்சில் பொறுக்குகின்ற
ராப்பிச்சைக்காரி நான்.

பேரரசை கவியால் வாழ்த்த,..
பூவுக்கே வாசம் சொல்ல,...
பெருவிருப்புக் கொண்டது,
மாபெரிய குற்றமென்று
மதிக்குத் தெரிந்தபோதும்,..
மனதோடு மல்லுக்கட்டி
மகிழம்பூ விரிகையிலே,
மலர்வாசம் மனம் துளைக்க
மடையுடைக்கும் கவியாறு.

வைரமுத்துக் கவிஞரே, - நீங்கள்
தரணியிலே பிறக்குமுன்னே
தமிழ்க்கவிதை படித்தீரா?
தாயின் மணிக்கொடியில்
காப்பியங்கள் கற்றீரா? - உங்கள்
தாயென்ன உங்களுக்கு
தாய்ப்பாலை தர மறந்து
கவிப்பாலா பருக்கிவிட்டாள் ?

தமிழ்க் கவிதை உங்களின்
தடம்பற்றி நடப்பது - உங்களில்
தமிழ் கொண்ட காதலாலா? - இல்லை,
எதிர்மாறும் பொருத்தம்தானா ?

உங்கள் கவிக்கடலின்
ஒற்றைத் துளியினிலும்
வார்த்தைகளில் வாய்மணக்கும்.
வரிகளுக்குள் தேன் சுரக்கும்.
வாசிக்கும் நெஞ்சத்தில்
வகை வகையாய் பூ முளைக்கும்.
வழலைப் பாம்புகளும்
வலம் வந்து படம் எடுக்கும்.

வார்த்தைகளின் இடுக்குகளில்
மயிலிறகை மறைத்துவைப்பீர்.
வரிகளுக்கு நடுவிலே
மல்லிகைப்பூ சொருகிவைப்பீர்.
சந்தத்தின் அதிர்வுகளில்
சங்கீதம் தடவி வைப்பீர்.
சப்தத்தின் இடைவெளியில்
சந்தனம் குழைத்து வைப்பீர்.

சொற்களுக்குள் எப்படி
சர்க்கரையை சிக்க வைப்பீர்?
சில்லென்ற காற்றை அதன்
சிறகுகளில் ஒட்ட வைப்பீர்?
தமிழ்ச் சொல்லை  எந்தத்
தறியிலே ஓடவிட்டு
நெய்தெடுத்துக் கவிவடிப்பீர்?
நெடுவானைப் பிய்த்து வைப்பீர்.

உருகியோடும் கவிவரியின்
உயிர்த்துடிப்பில் நான் கரைந்து,
அழுதழுது கவிபடித்து
அரைத்துயிலில் உளறியதும்....
வார்த்தைகளின் ஆழத்துக்குள்
அமிழ்ந்திருக்கும்  அறுசுவையை
அள்ளிக்குடித்தும் தாகம்
அணையாமல் தவித்ததுவும்.....

சொல்லி மாழாது.
சொற்பஞ்சம் எனக்கிருக்கு.

வைரமுத்துக் கடலுக்குள்
முத்துக் குளித்துத்தானே
சொல்லும்படி
இல்லையென்றாலும்
சும்மாவேனும் கவியெழுத
என் விரல்கள் துளிர்த்தது.
இன் தமிழில் உயிர்த்தது.

என் போல எத்தனையோ
இளங்கவிகள் படையெடுக்க.
தமிழ்க்கொடியை கையில் ஏந்தி
தடையுடைத்து நடக்கின்றீர்.

உம் பயணம் நீளட்டும்.
இள வேனில் சேரட்டும்.
மண் உங்கள் பாடலுக்கு
மத்தாளம் போடட்டும்.
இளம் ரத்தம் புகுந்த உங்கள்
இசைத்தமிழ்ப் பாடல் கேட்டு
தமிழ்த் தாயின் தலைமயிரின்
நரை முடிகள் நீங்கட்டும்.

Post Comment

Tuesday, July 12, 2011

ஓடிவிடு வெண்ணிலவே...

வண்ண  நிலவே ,
நீ  வழிதவறிப்  போனாயா?
என்றைக்குமில்லாமல் - ஏன்
என் வாசல் நுழைகின்றாய்?

நான்
இருட்டை  அணிந்து
நெருப்புக்  குளிக்கும்  போதெல்லாம்
திரும்பிக்கூடப்  பார்க்காமல்
திமிரெடுத்துப்  போனாயே,
ஒரு துண்டு மேகத்தையாவது
எனக்குத்
துணைக்கனுப்பினாயா ?

இன்று மட்டும் ஏன்
என் விலாசம் தேடுகிறாய் ?

வேதனைப் பாசியில்
வழுக்கி
விழுந்து விழுந்து
தினம் தினம்
இடுப்பை உடைக்கிறேன்.

என் முகமே
என்னிடமிருந்து
கழன்று விழுந்த பின்
எந்த முகவரிக்குச் சொல்ல
நீ சேதி கொணர்ந்தாய் ?

உன் சேதிக்குச் சக்தியுண்டா
என் எலும்புகளை
ஒட்ட வைத்து - அதில்  
வானவில்லைக் கட்டிவைக்க ?

இல்லையென்றால்,.....
வந்த பாதை வழியே
திரும்பிப் பார்க்காமல் ஓடு.
உன்
அரைகுறை முதுகுவருடல்கள்
எனக்கு வேண்டாம்.

ஓடி விடு வெண்ணிலவே,,
நான் கள்ளிமுள் தின்னும்போது
தண்ணீர் எடுத்துக் கொடுக்க
எந்தக் கையும்
எனக்கு வேண்டாம்.

என் தொண்டைக்குழியின்
கிழிசல்களை - உன்னால்
தைத்துவிட முடியாது.
நீ
உன் வழியைப் பார்த்து
ஓடிவிடு வெண்ணிலவே.

Post Comment

Sunday, July 10, 2011

உன் பார்வையில்...........


ஒரே ஒரு
பார்வைக் கீற்றைத்தான்
நீ வீசி விட்டுப் போனாய்.
அந்தச்
சூரியனே
என் கண்களுக்குள்
சுருண்டுவிட்டதுபோல்
எத்தனை வெளிச்சம்
என் விழிகளுக்கு!!

பொங்கிப் பூரிக்கிறது
என் வாலிபம்.

ஆயிரம் வார்த்தைகளில்
வடிக்க முடியாததை
உன் அரை நொடிப் பார்வை
அடித்துச் சொல்கிறது.

நீயென்ன
தீக்குச்சியையா
உரசிவிட்டிருக்கிறாய் 
உன் கண்களிலே?
ஒரு தீப்பிழம்பே
எரிகிறதே
எனக்குள்ளே.

உன் பார்வைத் தீயின்
கனலில்
என் காதல் உலை
கொதிக்கிறது.

Post Comment

சுகமே வேண்டும்

எனக்கு 
சோகங்களை 
சுமக்கப் பிடிக்கவில்லை.
சந்தோஷக்  காற்றை  மட்டுமே 
சுவாசிக்கப்  பிடிக்கிறது.

வாழ்க்கை
வரைந்துவைத்த பாதைகளின்
மேடு பள்ளங்களில்
என்னால்
பயணிக்க முடியவில்லை.

பூக்களால் நெய்த
புடவைகளை மட்டுமே
போர்த்துவேன் என்கிறது
உள்ளம்.

வாடிப் போன மலர்களையும்
வற்றிப்போன நதிகளையும்
எட்ட நின்றேனும்
என்னால்
ஏறெடுக்க முடியவில்லை.

என் வாழ்க்கை கோப்பை
சொப்பனப் பானங்களாலேயே
நிரம்ப வேண்டும் என்று
நிர்ப்பந்திக்கிறது மனசு.

Post Comment

Friday, July 8, 2011

எங்கே பிறக்கிறது கவிதை?

கவிதையொன்று
எழுதவேண்டும் என்று
தீராத ஆசை கொண்டேன்.

வண்ணக் காகிதமும்
வடிவான பேனாவும் கையுமாய்
அழகு மலர்கள்
பூத்துக் குலுங்கி
காற்றோடு அசைந்தாடும்
தோட்டத்து மூலையில்
சொகுசாக அமர்கிறேன்.

இதமான தென்றல்
பூக்களின் சங்கீதத்தை
பூமிக்கு
பாடிக் காட்டுகிறது.

வானவில் போர்த்திய
வண்ணத்துப் பூச்சிகள்
மலர்களில்
மகரந்தம் பருகிய
போதை தணியாமல்
மயங்கி நடக்கின்றன.

ஆஹா...
அழகான காட்சி.
அருமையாய் கவிதை வரும்
என்று
சின்ன சிரிப்புடன்
பேனாவை காகிதத்தில்
பொருத்துகிறேன்.
புள்ளிகளும் கோடுகளும்
காகிதத்தை நிறைக்கிறது.
கிழித்துப் போடுகிறேன்.

புதியதாய் கற்பனைகள்
கோர்த்து
புதுக்கவிதை எழுதலாம் என்று
புத்தம் புதிய
காகிதம் எடுக்கிறேன்.

சிட்டுக் குருவிகள்
மரக்கிளைகளில் தொங்கும்
பின்னல் கூடுகளுக்குள்
போவதும் வருவதுமாய்
நாடகம் செய்கின்றன.
கீ...கீ...சத்தம்
காதுகளுக்குள்
புல்லாங்குழலாய்  ஒலிக்கிறது.

இப்போது
கவிதை எழுத
கற்பனை பிறக்குமென்று
காகிதம் விரிக்கிறேன்.

ம்ஹஊம்..
கவிதைக் காற்று
எதிர்த் திசையில்
அடிக்கிறது.

வண்ணக் கோப்பைகள்
கை தவறி விழுந்ததுபோல்
அந்தி வானம்,
மேக முந்தானைக்குள்
ஓடி மறையும்
சூரியப் பையனின்
சுட்டித்தனங்கள்,
கூடு தேடி
கூட்டம் கூட்டமாய்
விண்ணிலே தவழ்ந்து போகும்
வெள்ளைப் புறாக்கள்,
என்று
எந்த அழகை பார்த்தபோதும்
கவிதை வரவில்லை.

சலித்துப் போனேன்.

"முண்டமே,
உனக்கு
கவிதை எழுத
வரவே வராது"
உள்ளுக்குள் அசரீரி
உரத்து ஒலித்தது.

உடைந்து போய்
திரும்புகிறேன்.

மென்மையான மலரொன்று
காற்றின் அசைவோடு
போட்டிபோட முடியாமல்
ஒடிந்து போய்,
காம்பை விட்டுப் பிரிந்து,
மௌனமாய் விழுகிறது.

அப்போது,
என் பேனாவின் கண்ணீர்
காகிதக் கிண்ணத்தில்
கவிதையாய் வழிகிறது.

Post Comment

Thursday, July 7, 2011

தப்பிச் செல்ல வழியுண்டா?

மனம்
அங்கும் இங்குமாய்
ஆலாப்பறக்கிறது.

எந்தப் புள்ளியிலும்
நிலை கொள்ள மாட்டேனென்று
அடம்பிடிக்கிறது.

சிந்தனைகள்
சிதறி ஓடுகின்றன.

மனதை
ஒருமுகப்படுத்த
முயன்று தோற்கிறேன்.

எத்தனை பிரச்சினைகள்,
எத்தனை ரூபத்தில் வந்து
உயிரை
பிய்த்தெடுக்கிறது!

உலக வாழ்க்கை
கொடியது என்று
ஒதுங்க நினைத்து,

புத்தகம் திறந்தால்,
புத்திக்குள் கேட்கிறது
புகைவண்டிச் சத்தம்.

கவிதை படிக்க நினைத்தால்,
வைரமுத்து, மு.மேத்தா,
கலீல் ஜிப்ரான் கவிதையும் கூட
கல்லெடுத்து அடித்துத்
துரத்துகிறது என்னை.


கவிதையும் கதையும் தான்
படிக்க முடியவில்லை.
சரி,
திரைப்படம் பார்த்தால்
திசை மாறும் என்று
புதிய படமொன்றை
போட்டுப் பார்க்கிறேன்.
எழுத்தோடும்போதே
மனம் எழும்பி ஓடுகிறது.

தோழிகளோடு
தொலைபேசி அலட்டலுக்கோ,
காதலனோடு
SMS ஊடலுக்கோ,
மனம் கூடவில்லை.

வீட்டு விஷேசத்துக்கு
விருந்துக்கு வந்த
தூரத்து உறவினன்போல்
உணர்வுகளோடு ஒட்டாமல்
விலகியே நிற்கிறது
என் மனது.

வாழ்க்கைப் போர்க்களத்திலிருந்து
புறமுதுகு காட்டி
ஓட முனைந்த
எல்லா முயற்சிகளும்
தோற்றுப் போகின்றன.

மறுபடியும்,
சுவரில் எறிந்த பந்தாய்
நிதர்சனத்தின் 
கோரக் கைகளுக்குள்
சிக்கிக் கொள்கிறேன்.

Post Comment

நானும் உன்னை காதலிக்கிறேன்

எப்படி நுழைந்தாய்
எனக்குள்ளே?
என் வாசல் கதவுகள்
வீட்டு ஜன்ன்னல்கள்
என்று
எல்லாத் துவாரங்களையும்
மூடி வைத்தேனே,
எல்லாம் உடைத்து
எப்படி நுழைந்தாய்
என் இதயத்துக்குள் ?

விம்பம் எதுவும்
விழுந்திடாமல் 
கருங்கல்லில் சுவர்கட்டி
காவல் காத்தேன்.

எந்தக்  காற்றும்
தீண்டாவண்ணம்
இறப்பர் பையில்
இறுக்கிக் கட்டி
ஒழித்து வைத்தேன்
இதயத்தை.

காட்டாற்று வெள்ளமாய்
கல் அணைகளை
உடைத்துக்கொண்டு
எப்படிப் புகுந்தாய் ?

உன் பலயீனத்தின் முன்
என் பலம்
தோற்றுப் போனதா?

உன் அன்பின்  பலத்தால்
என் கட்டுப்பாடுகள்
பலயீனப்பட்டனவா ?

என்னைக்
கட்டி வைத்த கயிறுகளை
அவிழ்த்துவிட்டாய்.

நான் பொத்திவைத்த
இதயத்தை
திறந்து விட்டாய்.

பாய்ந்திடாமல்
பறந்திடாமல்
தறிகெட்டு  ஓடிடாமல்
நான் தறித்துவிட்ட
கவிதைச்  சிறகுகள்
உன் காதல்  விரல்  தடவ
மயில்தோகையாய்  விரிகிறது .

கல்லைப்போல் 
விறைப்பாயிருந்தேன்.
என்னை
ஒரு கற்பூரத்  துண்டாய்
கரைய  வைக்கிறாய் .

ஒற்றை நூலில்
என் உயிரை இழைந்து
கற்றைக் குழலால்
காவல் செய்கிறாய்.

உன் அன்பில்
ஒரு தூண்டில் மீனாய்
மாட்டிக் கொள்கிறேன்.

'எறும்பூரக் கற்குழியும்'
என்று
சொன்னது சரிதான்.
நான் வெறுத்தபோதும்
ஒதுக்கியபோதும்
விடாமல்  பொழிந்தாய்
அன்புப் பூமாரி.

இன்று,
என் பிடிவாதங்கள்
உன்னால்
உடைந்து போகின்றன.

இன்னும்  என்னால்
மூடி வைக்க  முடியவில்லை.
'நானும் உன்னை காதலிக்கிறேன்'  என்று
கத்திச் சொல்லத் தோணுது எனக்கு.

Post Comment

Wednesday, July 6, 2011

கறுப்புக் கவிதை


என் அதிகாலைகள்
இருட்டில் விழிக்கின்றன.

என் பகல்களுக்கு
கிரகணம் பிடித்திருக்கிறது.

எனக்கு
விடியலின் நிறம் கறுப்பு.

நான் ஒரு
கடலோரக் கவிதை.
ஆம்...
கச்சானும் கண்ணீரும்
சுமக்கின்ற கவிதை.
காற்று வாங்க வந்தோர்க்கு
கச்சான் விற்கும்
கறுப்புக் கவிதை.

வீட்டுப் பாடம்
எழுதும் நேரம்,
நான் இங்கே
காற்றில் எழுதுகிறேன்
வாழ்க்கைப் பாடம்.

புத்தகப் பைகளை
சுமக்கும் கைகள்
இங்கே சுமக்கிறது
கச்சான் பொதிகளை.

நிகழ்காலத்தின் முன்
கேள்விக்குறியாய்
கூனி நிற்கிறேன்.

தேடித் தேடிக்
கற்க வேண்டிய
இந்தச் சின்ன வயதில்
ஓடி ஓடி விற்கிறேன்
என் எதிர்காலத்தை.

கனவுகளால் நிரம்பவேண்டிய
என் கண்கள்
கண்ணீரால் நிரம்பி
என் பால்யத்தை சுடுகிறது.

அலைகளோடு
அள்ளுண்டு போகும்
கரையோரக் குப்பையாகிறது
என் வாழ்க்கை.

வறுமைப் பேயோடு
போராடிப் போராடி,
நொந்து நூலாகி,
என் குடும்பம்
குற்றுயிராய்க் கிடக்கிறது.

பிள்ளைப் போராளியாய்
வறுமைக்கெதிராய்
துப்பாக்கி தூக்க வேண்டிய
துர்ப்பாக்கியம் எனக்கு.

******
நான் இங்கே,
பொட்டலம் கட்டி விற்பது
கச்சான் கொட்டையல்ல.
என் கனவுகளின் மூட்டை.

என் கனவுகள் அத்தனையும்
விற்றுத் தீர்ந்தபின்
காற்றிலாடும்
காய்ந்த சருகாய்
திரும்பிப் போகிறேன்.

நேற்றையைப் போலவே,
இன்றைக்கும்,
என் கூட்டுக் குருவிகளுக்கு
கூழையேனும்
குடிக்கக் கொடுப்பேன்.

மீண்டும்,
நாளையும் வருவேன்.
மறுபடியும்,
இதே கடலலையில்
கனவுகளை கல்லாக்கி- அதில்
என் வறுமையின் அழுக்குகளை
அடித்துத் துவைப்பேன்.

******

கல்வி பொதுவுடைமை
என்றதெல்லாம்,
இந்தக் கடலோரம்
பொய்யாகிப் போகிறது.

இந்த
கந்தைச்  சிறுவனின்
கல்லூரிக் கனவெல்லாம்
காற்றோடு  நாற்றமாய்
காணாமல் போகிறது.

Post Comment

மாற்றங்கள்


நாளும் பொழுதும் மாறும்.
நாகரீகம் மாறும்.

ஏட்டில் இலக்கணம் மாறும்.
ஏழைக் கண்ணீர் மாறும்.

காற்றின் திசைகள் மாறும்.
காலைப்பூக்கள் நிறம் மாறும்.

பருவங்கள் மாறும்.
பகலும் இரவும் மாறும்.

எண்ணங்கள் ஏதேதாய் மாறும்.
ஏகாந்தம் சுகமாயும் மாறும்.

விஞ்ஞானம் மாறும்.
விண்மீன்கள் இடம் மாறும்.

பூகோளம் தடம் மாறும்.
பூமியின் எடை மாறும்.

கடலின் ஆழம் மாறும்.
காற்றின் அழுத்தம் மாறும்.

வானத்தின் நீலம் மாறும்.
வானிலவின் வெளிச்சம் மாறும்.

வையகத்தின் வெப்பம் மாறும்.
வைகை நதி கொள்கை மாறும்.

நேரத்தின் வேகம் மாறும்.
நெடுவானம் துரும்பாய் மாறும்.

குடிசைகள் கோபுரமாய் மாறும்.
குப்பைக் கிடங்கு குளங்களாய்  மாறும்.

மழைநீரின் துளியொன்று முத்தாக மாறும்.
மரியாதைக்கேனும் வார்த்தைகள் மாறும்.

காலத்தின் போக்கோடு  மாறாமை  மாறும்.
மாற்றங்கள் கூட பலவிதமாய் மாறும்.

மாற்றங்கள் மட்டும் இல்லையென்றால்
வாழ்க்கை பழந்தயிராய்  புளித்து நாறும்.

Post Comment

Broken Wings:ஒரு மொழிமாற்றம் - பதிப்பு 3முறிந்த சிறகுகள் 
 
1.௦ அமைதியான சோகம் 
 
நண்பர்களே, உங்கள்  இளமையின்  விடியலை  நீங்கள்  சந்தோசத்துடன்  ஞாபகப்படுத்தி  அது  உங்களை  விட்டுப்  பிரிந்து  போனமைக்காக  மனம்  வருந்துவீர்கள்.ஆனால்  நான்  அதை  ஒரு  சிறைக்கைதி  சிறைக்கம்பிகளையும்  கைவிலங்குகளையும் ஞாபகப்படுத்துவதுபோல  ஞாபகப்படுத்துகிறேன். குழந்தைப் பருவத்துக்கும்    இளமைப்பருவத்துக்கும்   இடைப்பட்ட  அந்த  வருடங்களை  கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான பொற்காலமாக     நீங்கள்  வர்ணிப்பீர்கள்  . காதல்  வந்து  என்  இதயக் கதவுகளைத்  திறந்து  அதன்  மூலை  முடுக்குகளிலெல்லாம்  விளக்கேற்றும்  வரை  என் இதயத்துக்குள்  விழுந்து  வளர்ந்து  அறிவுலகத்துக்கான  வழிகளை  கண்டுபிடிக்க  முடியாத  ஒரு  அமைதியான  சோகக்  காலமாகத்தான்  அந்த  வருடங்களை  நான்  அழைக்கிறேன். காதல்  எனக்கு  மொழியையும்  வலியையும்  கற்றுக்கொடுத்தது. நீங்கள்  உங்கள்  செயற்பாடுகளை  கண்டுகளித்து, உங்கள்  மௌனமான  கிசுகிசுப்புக்களைக்  கேட்ட  பூங்காக்களையும்   நீங்கள்  சந்திக்கின்ற   இடங்களையும்   சாலையோரங்களையும்  ஞாபகப்படுத்துவீர்கள் . நானும்  கூட வட  லெபனானில்   உள்ள   அந்த  அழகான  இடத்தை   ஞாபகப்படுத்துகிறேன்நான்  என்  கண்களை   மூடும்  ஒவ்வொரு  நேரமும்   மாயங்கள் நிரம்பிய  மரியாதைக்குரிய  அந்த  பள்ளத்தாக்குகளையும்பேரொளியாலும்   பிரம்மாண்டங்களாலும்  மூடப்பட்ட  வானத்தைத்  தொடும்  அந்த  மலைகளையும்  காண்கிறேன். நகரத்தின்  இரைச்சலிலிருந்து  தவிர்ந்து கொள்வதற்காக  என்  காதுகளை  மூடும்  ஒவ்வொரு  சந்தர்ப்பத்திலும்  அந்த  ஓடைகளின்  சலசலப்பையும் மரக்கிளைகளின்  அசைவுகளையும்  கேட்கிறேன் . தன்  தாயின்  மார்புக்காக ஏங்கும்   ஒரு  மழலையைப்போல  நான்  காண  ஏங்குகிற  இந்த  எல்லா அழகுகளும், பரந்த  வானத்தில்  சுதந்திரமாகப்  பறந்துகொண்டிருக்கும்  பறவைக்கூட்டத்தை  பார்க்கும்போது  கூட்டுக்குள்  அடைக்கப்பட்ட  ஒரு  ராஜாளிப்  பறவை  அதை  சுவைக்க  முடியாமல்  வேதனைப்படுவதுபோல, இளமையின்  இருட்டில்  சிறைப்படுத்தப்பட்ட  என்  ஆத்மாவை   அவற்றை   அனுபவிக்க  விடாமல்  காயப்படுத்தியது. அந்தப்  பள்ளத்தாக்குகளும்  குன்றுகளும்   என்னுடைய  கற்பனைக்கு  விளக்கேற்றியது . ஆனால்  கசப்பான  நினைவுகள்   என்னுடைய  இதயத்தைச்  சுற்றி  நம்பிக்கையீன  வலைகளை  பின்னிவிட்டது .

நான் வெளியில்  போகும்  ஒவ்வொரு  நேரமும்  ஏமாற்றத்துடன்  திரும்புகிறேன்  அவற்றுக்கான  காரணத்தை  அறியாமலேயே. மங்கிய  வானத்தைப்  பார்க்கும்  ஒவ்வொரு  நேரமும்  என்னுடைய  இதயம்   சுருங்கிவிடுவதுபோல்  உணர்கிறேன். பறவைகளின்  பாடல்களையும்  ஊற்றுக்களின்  சலசலப்புக்களையும்  கேட்கின்ற ஒவ்வொரு   நேரமும்  நான்   வேதனைப்படுகிறேன்  அந்த  வேதனைக்கான  காரணங்கள்  என்னவென்று  அறிந்துகொள்ளாமலேயே. அறியாமை  ஒருவனை   வெறுமையாக்குகிறது. அந்த  வெறுமை  அவனை  அலட்சியமானவனாக  ஆக்குகிறது  என்று  சொல்லப்படுகிறது. உணர்ச்சிகளற்றுப்  பிறந்து, உறைந்துபோன உருவங்களாக  வாழ்பவர்களிடையே  அந்தக்  கூற்று   உண்மையானதாக   இருக்கலாம். ஆனால் அறிவில்  குறைந்தவனாக  இருந்தாலும்  உணர்ச்சி  மேலீட்டால்  சித்திரவதைப்படும்  ஒரு  நலிந்த  சிறுவன்தான்  பூமியில்  உள்ள  மிகப்பெரிய  துர்ப்பாக்கியசாலியாக   இருக்கமுடியும். ஏனென்றால், அவன்  இரண்டு  விசைகளால்  கிழிக்கப்படுகிறான். முதலாவது  விசை  அவனை  வானத்துக்கு  உயர்த்தி  கனவு  மேகத்தினூடாக  வாழ்க்கையின்  அழகை  அவனுக்கு  காட்டுகிறது . இரண்டாவது  விசை  பூமிக்குக்  கீழாக  அவனைக்  கட்டிப்போட்டு, அவனது  கண்களை  தூசுகளால்  நிரப்பி, பயத்தினாலும்  இருளினாலும்  அவனை  அழுத்துகிறது.

தனிமை மென்மையான , மிருதுவான கரங்களைக் கொண்டது. ஆனால் , அதன் பலமான விரல்கள் இதயத்தைக் கவ்விப்பிடித்து துன்பத்தின் வலியை உருவாக்குகிறது . தனிமை துன்பத்துக்கு   நண்பனாகவும் அதேநேரம் ஆத்மா உயர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்கிறது .

துன்பத்தில்  தள்ளாடிக்கொண்டிருக்கும்  இந்தச் சிறுவனின்  மனம்  இப்போதுதான்  மடல்  விரியும்  ஒரு பூவைப்    போன்றது. அது   அதிகாலையில்  தென்றலுக்கு  அசைந்து  தன்  இதழ்களை  விரிக்கிறது. இரவின்   நிழல்  வரும்போது  அது  அதன்  இதழ்களை  மறுபடியும்  மூடிக்கொள்கிறது. அந்த  சிறுவனுக்கு   நண்பர்களோ, அவனைத்  திசை  திருப்பக்கூடிய  பொழுதுபோக்குகளோ இல்லையென்றால், அவனது  வாழ்க்கை  சிலந்தி  வலைகளைத்  தவிர  வேறொன்றையும்  பார்க்க  முடியாத, பூச்சிகள்  ஊரும்  சப்தத்தைத்  தவிர  வேறெதனையும்  கேட்கமுடியாத  ஒரு  ஒடுக்கமான  சிறையாகத்தான்  இருக்கும்.

என்  இளமைக்காலத்தை  முழுமையாக  ஆட்கொண்டிருந்த  அந்த சோகங்கள்   மகிழ்ச்சிக்  குறைபாட்டினாலோ , நண்பர்களின்  தட்டுப்பாட்டினாலோ  ஏற்பட்டதல்ல. ஏனென்றால்  நான்  விரும்பியிருந்தால்  அந்த  சந்தோஷங்களை   பெற்றிருக்க முடியும். என்னுடைய  அந்த  சோகம்  ஒரு  உள்மனக்  காயத்தினால்  ஏற்பட்டது. அதுதான்  என்னை  தனிமையை   விரும்பச்  செய்தது . மகிழ்ச்சிக்கும்  விளையாட்டுக்குமான  என்  ஆர்வத்தை  அது  கொன்று  போட்டது. அது  என்னுடைய  தோள்களிலிருந்து  இளமையின்  சிறகுகளை  கழற்றிவிட்டது . கடலைச்   சேர  வழிதெரியாமல், தன்  சலனமில்லாத  மேற்பரப்பில்  பூதங்களின்  நிழல்களையும்   மேகங்களினதும்   மரங்களினதும்   நிறங்களையும்   பிரதிபலித்துக்கொண்டு  மலைகளுக்கிடையில்   தேங்கிக் கிடக்கும்  ஒரு  குட்டையாக  அது  என்னை  ஆக்கியது.

நான்  என்னுடைய  பதினெட்டு  வயதை  அடையுமுன்  என்  வாழ்க்கை  இப்படியாகத்தான்  இருந்தது. அந்த  ஆண்டு  என்  வாழ்வின்  மலையுச்சியைப்  போன்றது. அது  என்னுடைய  அறிவுக்கண்ணைத்  திறந்தது. மனித  வாழ்வில்  ஏற்படும்   திருப்பங்களை   விளங்கச்செய்தது. அந்த  வருடம்  நான்  பூமியில்  மறுபடியும்  பிறந்தேன். ஒரு  மனிதன்  புதிதாய்  இன்னுமொருமுறை   பிறக்காவிட்டால், அவனுடைய வாழ்வு, வாழ்க்கைப்   புத்தகத்தில்  ஒரு  வெற்றுப்  பக்கமாகவே   இருக்கும் . அந்த  வருடம், ஒரு  அழகிய  பெண்ணின்  விழிகளினூடாக   சுவர்க்கத்து  தேவதைகள்  என்னைப்  பார்த்துக்கொண்டிருப்பதை   நான்  கண்டேன். அதேநேரம், ஒரு  கொடூரமான  மனிதனின்  இதயத்தில்  நரகத்துச்  சாத்தான்களின்  மூர்க்கத்தனங்களையும்  நான்  கண்டேன். வாழ்க்கையின்  அழகிலும்  அதன்  கொடூரங்களிலும், தேவதைகளையும்  சாத்தான்களையும்   காணாத  ஒரு  மனிதன்  அறிவிலிருந்தும் மிகவும்  தூரமாக விலக்கப்படுகிறான். அவனுடைய  ஆத்மா  அன்பற்ற  வெறும் பாலைநிலமாகத்தான்  இருக்கும்.

தொடரும்.......     


Post Comment