எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, May 2, 2011

என்ன சொல்ல நினைக்கிறாய்?

இடி மின்னல் மழையோடு கூடிய மாலைப் பொழுதொன்றில்..

மேகமே
நீயுன்னை
நீட்டி
முழக்குவதேன்?


ஓயாமல்
நீர் தள்ளி
ஒரு யுத்தம்
செய்வது ஏன்?


உன் கதையைச்
சொல்லி நீ
ஒப்பாரி
வைக்கிறாயா?


மண் பாடும்
துயர்ப் பாக்கு
மறு பாட்டுப் பாடுறாயா?


யுத்தத்தின்
எச்சங்கள்
நிலைத்திருக்கும் பூமியின்
உச்சத்தில்
நின்று நீ
எக்காளமிடுவது ஏன்?


பச்சிளம் குழந்தைகள்
பட்டினிச் சாவிலே
சித்தம் கலங்கி நீ
பித்தனாய் பிதற்றுராயா?


ஊணிழந்து
உறையிழந்து
உற்ற சொந்தம்
தனையிழந்து
வாடி நிற்கும் பேதைகளின்
கண்ணீர்க் கதை கழுவ
நீராகப் பிறப்பெடுத்து
நீயோடி வருகிறாயா?


ஆதரவும்
அரவணைப்பும் தவிர
மற்றொன்று அறியாத
மங்கையரும்
மாந்தளிரும் கூட
சிறையிலே அடைப்பட்டு
சிதை பட்டுப் போவதனை
கண்டு பொறுக்காமல்
கதறி அழுகிறாயா?


இதயங்களைப்
புதைத்துவிட்டு
பிணத்துக்கு மாலை
போட்டுக் கொண்டாடும்
இனவாதத் தலைகளுக்கு
எட்டி உதைத்து
எச்சரிக்கை செய்கிறாயா?


மேகமே
நீயுன்
விழியசைவின் வீரியத்தில்
சொல்ல நினைப்பதென்ன?
சொல்லி முடித்ததென்ன?

2011


Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன