எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, August 5, 2011

ஒரு முடிவின் கதை

என்னது,
என் உலகம்
ஸ்தம்பித்துப் போனதா?

என்னைச் சுற்றி
எந்தக் காற்றும்
அசைவதாயில்லையே...

எந்தக் கிரகமும்
என் பாதத்தின் கீழ்
சுழல்வதாயும் இல்லையே...

ஒட்டடை பிடித்த மேகம்
ஒரு அங்குலமேனும்
நகர்வதாயும் தெரியவில்லை.

ஊருக்குப் போன
மாரி மழை
இன்னமும் திரும்பி
வரவும் இல்லை.

எழுதிக் கோரவுமில்லை,
எந்தவொரு
முன்னறிவித்தலுமில்லாமல்
என் வேர்களெல்லாம்
வேலை விடுப்பு
எடுத்துக் கொண்டனவோ...

இல்லை,
ஓடிக் களைத்ததால்
ஓய்வு பெற்று விட்டனவோ...

என் காலடியில்
கருகிக் கிடப்பதெல்லாம்
என்ன?

அகன்று செறிந்து
என் பசுமையை பறைசாற்றிக் கொண்டு
என்னைப் போர்த்திக் கிடந்த
பச்சிலைகளா
இந்தச் சருகுகளெல்லாம்?

என்னில் கூடுகட்டி
குடும்பமாகிக் குதூகலித்த
குருவிக் கூட்டங்களெல்லாம்
எங்கே?

என் காலடியில் கிடந்து
கதை பேசிக் களித்த
காதலர்களெல்லாம்
எங்கே?

என் பரந்த கிளைகளின் கீழ்
மழைக்கும் வெயிலுக்குமாய்
வந்து இளைப்பாறிய
வழிப்போக்கர்கள் எங்கே?

என் பழங்களை
கொறித்துக் கொண்டு
ஓடிப் பிடித்து விளையாடிய
அணில் கூட்டங்கள் எங்கே?

கற்களோடும் கம்புகளோடும்
என்னில்
காய்கள் கொய்ய வந்த
குழந்தைகளெல்லாம் எங்கே?

என்னில் இனி
பயனில்லை என்று
ஒதுக்கி விட்டார்களா?

எனக்கு சந்தேகமாயிருக்கிறது.
ஒரு வேளை நான்...
இறந்து விட்டேனா??

ஆ... யாரது?
இரும்புக் கோடரியுடன்
என்னை நோக்கித்தானே
வருகிறான்
அந்த விறகுவெட்டி?

என் கிளைகளை
உடைக்கிறான்.
என் உடலை
தறிக்கிறான்.

என்னை வேரோடு
பிடுங்கி விடுவானோ??

வசந்தம் வரும் வரைக்கும்
என்னைக் கொஞ்சம்
விட்டுவைக்க மாட்டானா?

என் கணுக்கள் சிலவேளை
துளிர்க்கக்கூடும் அல்லவா?

என் சந்ததிகளெல்லாம்
எங்கிருக்கிறார்கள்?
அவர்களை நான்
ஒருமுறையாவது
கண்டுவர வேண்டுமே...

என்னைச் சுற்றிக் கிடக்கும்
சருகுகளையெல்லாம்
தன் சாக்கில் திணிக்கிறானே,
அவற்றையும் கூடவா
அடுப்பில் எரிப்பான்?

இல்லை,
அவனின் மனக்குரல்
எனக்குக் கேட்கிறது.

என் விதையில் விளைந்த
ஒரு மரத்துக்கு
என்னை உரமாக்கப் போகிறானாம்.

நன்றி கடவுளே...
என் ஊனம் உரமாக
என் மகனின் வடிவில்
நான் மறுபடியும் துளிர்ப்பேன்.

இப்போதுதான்
என் ஆத்மா
சாந்தியடைகிறது.

Post Comment

3 comments:

MUTHARASU said...

கவிதை அருமை. உயிரோட்டமுள்ளதாய்உள்ளது.
இன்று பசுமையான மரங்களும் வேட்டையாடப் படுகின்றன.

RIPHNAS MOHAMED SALIHU said...

நன்றி நண்பரே.. மரங்களுக்குள் இருக்கின்ற உணர்ச்சிகளையும் மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையா?. .

MUTHARASU said...

// என் விதையில் விளைந்த
ஒரு மரத்துக்கு என்னை உரமாக்கப் போகிறானாம்//
*** ஒரு மரத்தின் ஏக்கம் தெரிகிறது ***

ஏ மனிதா...
உனக்கு சுவாசத்தை கொடுத்ததற்காகவா
என் சுவாசத்தை முடிக்கிறாய்.
மரம்.
(ஏதோ தோணிச்சு...)

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன