எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Saturday, August 13, 2011

பேரழகில் கரைந்துவிடு

உன்னை விளக்க
போதுமானதாய் அல்ல
என்னுடைய கவிதைகள்.

உன் சுவாச இடைவெளிகளின்
நீட்சியை
எந்தவொரு மொழியின் ஆளுமையாலும்
அளந்து குறிக்க இயலாது.

மௌனங்களைக்
குழைத்துத் தீட்டிய
ஓவியங்களாய்
வெறுமையை பிரதிபலிக்கும்
உன் புன்னகைகள்
எந்தவொரு பொருளையும்
உணர்த்துவதாய் இல்லை.

எப்போதாவது,
உன் மௌனங்கள் உடையும்போதும்
உணர்வுகள் வெளிப்படாமல்
உள்நாக்கினுள்ளேயே ஒட்டியிருக்கிறது.

பூச்சியங்களுக்குள்  இருக்கும்
வெறுமையை நீ
வெளிப்படுத்திய போதும்,
எனக்கு மட்டும் தெரிகிறது...
பூமிக்கடியில் உள்ள உஷ்ணம்
உன் இதயத்துக்குள்ளும் இருப்பது.

வீசாத பல புயல்களும்
வெடிக்காத சில எரிமலைகளும்
உன் அமைதிக்குள்
ஒழிந்திருப்பதை
உன் இமைகள் தாங்கும் பாரங்களில்
கண்டு கொள்கிறேன்.

உன்னில் தெறித்து விழுந்த
ஒரு மழைத்துளி
மண்ணைச் சுடுகிறது.
***

மௌனங்களுக்குள்ளும்
வெறுமைகளுக்குள்ளும்
தொலைந்துபோன உன்னை
ஏன் நீ
மீட்டெடுக்கக் கூடாது?

உன்னைச் சுற்றும் காற்றிலும்
உன்னில் தூறும் சாரலிலும்
உன் சாலைப் பூக்களின் வாசத்திலும்
நீ ஏன் கரைந்துவிடக் கூடாது?

சுகமாய் சுடும்
அதிகாலைச் சூரியனின் ஸ்பரிஷத்திலும்,
சுதி மாறாமல் பாடும்
காட்டுக் குயில்களின் சங்கீதத்திலும்
ஏன் உன் இதயம்
மயங்கிவிடக் கூடாது?

இரவுகளின் நம்பிக்கையாய்
வெளிச்சத்தை வார்த்துக்கொண்டே
வீதி உலாப் போகும்
மின்மினிப் பூச்சிகளின் அழகிலும்,
வானப் பந்தலில்
பூத்துக் கிடக்கும்
நட்சத்திரப் பூக்களின் பேரொளியிலும்,
ஒளியை வழியனுப்பி
மெல்லிய குளிரை
சில்லெனத் தடவும்
குளிர் நிலவின் பிரம்மாண்டத்திலும்
நீ ஏன் தொலைந்துவிடக் கூடாது?
***

உன் வெறிச்சோடிய வாழ்வில்
நீ எதைக் கண்டாய்?

இன்னும்
எதைக் காண்பதற்காய்
நீ விரதமிருக்கிறாய்?

நீர்க்குமிழியாய்
எந்தநிலையிலும்
உடைந்துவிடக் கூடிய வாழ்வில்
வெப்பத்தை சுமந்துகொண்டு
நீ எதை சாதிக்கப் போகிறாய்?

எழிலைப் போர்த்தியிருக்கும்
இந்த உலகத்தின் இனிமைகளை
நீ இழந்துவிடப் போகிறாயா?
***

அருவிக் கரையில் நீராடி
உன் எரிமலையின் உஷ்ணத்தை
நீ அணைத்துவிடு.

மல்லிகைப் பூக்களின் வாசனை கொண்டு
உன் வெறுமைகளை
நீ நிறைத்துவிடு.

பிஞ்சுத் தென்றலில்
புரண்டு விழுந்து
உன் புயல் காற்றை
அடக்கிவிடு.

வானம் பூமி விரிந்து கிடப்பதும்
மலைகளும் கடல்களும்
படர்ந்து கிடப்பதும்
மரங்களும் மலர்களும்
அடர்ந்து கிடப்பதும்
உன் தனிமையை
துடைப்பதற்காய்த்தான்.

உலகத்தின் பேரழகை
நீ கட்டித் தழுவு.
உன்னை
இறுக்கிய உணர்வுகளின் எச்சங்களை
கண்ணீர்த் துளிகளால்
கழுவித் துடைத்துவிடு.
Post Comment

6 comments:

bhuvan said...

"Unnil tereththu vizhuntha oru mazhai thule mannai suduhirathu" enna varigal...veppatthin unmaiyum,athan tanmayum,yennai vehuvaha kavarnthathu...intha kavitha in ethayame intha varigalaga kuda erukkalam.

RIPHNAS MOHAMED SALIHU said...

Thank u friend... Welcome back.. Need ur comments to improve my writings...

MUTHARASU said...

ஆழ்நிலை மௌனத்தின்
அற்புத வரிகள் ....கவிதை மிக அருமை.

எனக்கு பிடித்த வரிகள்
***வானம் பூமி விரிந்து கிடப்பதும்
மலைகளும் கடல்களும்
படர்ந்து கிடப்பதும்
மரங்களும் மலர்களும்
அடர்ந்து கிடப்பதும்
உன் தனிமையை
துடைப்பதற்காய்த்தான்.****

RIPHNAS MOHAMED SALIHU said...

உங்கள் அழகான வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

விஜயன் said...

//நீர்க்குமிழியாய்
எந்தநிலையிலும்
உடைந்துவிடக் கூடிய வாழ்வில்
வெப்பத்தை சுமந்துகொண்டு
நீ எதை சாதிக்கப் போகிறாய்?
//
காதல்,தனிமை,தத்துவம் என கவிதை இனிக்கிறது. வாழ்த்துக்கள் சகோ

RIPHNAS MOHAMED SALIHU said...

@ விஜயன்

//காதல்,தனிமை,தத்துவம் என கவிதை இனிக்கிறது. வாழ்த்துக்கள் சகோ //

மிக்க நன்றி சகோ...

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன