எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, April 28, 2011

வந்துவிடு என் தலைவா .

(மரபுக் கவிதை ஒன்று எழுதிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உந்துதலின் வெளிப்பாடு இது. மரபின் சில வடிவங்களை என் கவிதை தடவிப் பார்க்கிறது.)


அன்பே  எந்தன்  ஆருயிர்க்  காதலனே
என்  மூச்சை  என்னோடு  ஒட்டவைத்த  ஓவியமே 
உன்  பேரைச்  சொல்லித்தான்  என்  பொழுது  விடிகிறது.
உன்  உருவம்  காணாமல்  என்  இறகு  ஒடிகிறது .

சுவாசிக்கக்  கற்றுத்தந்தாய் .
சுற்றங்கள்  மறக்கச்  செய்தாய் - நான்
வாசித்த  கவிதை  எல்லாம் 
நீயென்றே  ஆகிப்போனாய் .
யோசித்துப்  பார்க்கின்றேன் - நின்னை 
நெருங்க  வழி  தெரியவில்லை - ஆதலால் 
யாசித்துக்  கேட்கின்றேன் - என் காதல்
நோய்க்கு  நீ  மருந்தென்றாவாய் .

காதலென்ற  வாசகத்தை  நான்  படித்தேன்.
கனவுகளும்  பல  கண்டு  உயிர்  துடித்தேன்.
மோதலுக்காய்  விழிகளுக்கு  மை  வரைந்தேன்.
மோகனமாய்   என்  இதழை  ஆக்கி  வைத்தேன்.
போதனைகள்  பல  களைந்து  பொன்னே  உன்றன்
புன்னகைக்காய்  காத்திருந்தேன்  வாழ்நாள் எல்லாம் 
சீதறமே  நீ  கடந்து  போகும்போது  – ஒரு 
ஓரவிழிப்  பிச்சை  இடு  போதும்  போதும் .

சித்திரமாய்  வந்தெந்தன்  நெஞ்சினிலே  குடியிருந்தாய்  
பத்திரமாய்  உன்  கனவை  வளர்த்தேன் -சத்தியமாய் 
வெட்டிவிட்டுப்  பார்த்தாலும்  என்னுடலம்  உன்  பெயரை 
சொட்டி  நிற்கும்  காதலிலே  தோய்ந்து.

வா  வா  எந்தன்  மணிமுத்துக்  காவியமே 
தீவாக  நானுள்ளேன்  தெவிட்டாமல்  ரசித்துப்பார் .
எனைச்சுற்றும்  கடலாக  நீயேதான்  மாறிப்பார் 
புனையாத  கவிதைகளின்  பொருளாக  சேரப்பார் .

2002

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன