எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, April 26, 2011

உன்னை எனக்குப் பிடிக்கிறது

பூங்குயில்  பாஷை  பிடிக்கவில்லை.
பூக்களின்  வாசம்  பிடிக்கவில்லை.
தென்றலின்  ஸ்பரிஷம்  பிடிக்கவில்லை.
தேனின்  இன்சுவை  பிடிக்கவில்லை.

வானின்  மீது  கோலம் போடும் 
மேகம்  எனக்குப்  பிடிக்கவில்லை.
மேகம்  என்னும்  தேரில்  உலவும் 
நிலவும்   எனக்குப்  பிடிக்கவில்லை.

ஊதும்  குழலை  பிடிக்கவில்லை.
ஊரும்  நதியை  பிடிக்கவில்லை.
பேசும்  கிளியை  பிடிக்கவில்லை.
பிஞ்சு  மழலை  பிடிக்கவில்லை.

பூமி  மேலே  சாரல்  தூவும் 
மழையை  எனக்குப்  பிடிக்கவில்லை.
மழையின்  தலைக்கு  கிரீடம்  சூடும் 
வானவில்  எனக்குப்  பிடிக்கவில்லை .

அலையும்  கடலை  பிடிக்கவில்லை.
அசையும்  கிளையை  பிடிக்கவில்லை.
உயர்ந்த  மலையை  பிடிக்கவில்லை.
உலகின்  சப்தம்  பிடிக்கவில்லை .

இசையைப்  பாடி  இரையைத்  தேடும் 
பறவை   எனக்குப்  பிடிக்கவில்லை.
பறவை   மீது  விசிறி யாடும் 
சிறகை  எனக்குப்  பிடிக்கவில்லை .

உன்னை  எனக்குப்  பிடிக்கிறது.
உன்  பிள்ளை  உள்ளம்  பிடிக்கிறது.
என்னை  வந்து  களவாடும் -உன் 
கண்ணை  எனக்குப்  பிடிக்கிறது .

இதயம்  திறந்து  பேசும்  போதுன் 
இதழை  எனக்குப்  பிடிக்கிறது.
இயல்பாய்  புன்னகை  பூக்கும்  போது
இமையின்  ஜாடை  பிடிக்கிறது.

காதல் நதியில் நனைகையிலே - உன்
கவிதைச் சிணுங்கல் பிடிக்கிறது 
ஊடல்  கொண்ட  பொழுதுகளில் -உன்
ஊமை  நாடகம்  பிடிக்கிறது .

உன்னில்  வந்து  மேடை  போடும்
ஆண்மை  எனக்குப்  பிடிக்கிறது.
மெல்ல  நீயோ  பேசும்போதுன் 
மென்மை  எனக்குப்  பிடிக்கிறது .

உன்னை  எனக்குக்  காணப்  பிடிக்கும்.
உனது  நிழலில்  நடக்கப்  பிடிக்கும்.
உனது  விழியால்  கதைக்கப்  பிடிக்கும்.
உனது  இதழால்  சுவைக்கப்  பிடிக்கும்.

கனவில்  உன்னுடன்  குலவப்  பிடிக்கும்.
கவியில்  உன்னை  செதுக்கப்  பிடிக்கும்.
செவியில்  ஊறும்  மகர  யாழில் 
உன்  பெயரின்  நாதம்  இசைக்கப்  பிடிக்கும்.

உன்  விழிக்குள்  என்  விழியை  தேடப்  பிடிக்கும்.
உன்னுடனே  சேர்ந்திருந்து  உண்ணப்  பிடிக்கும்.
உன்  தோளில்  சாய்ந்து கொண்டே  உளரப்  பிடிக்கும்.
உன்  மடியில்  தலை வைத்து  உறங்கப்  பிடிக்கும். 

2002

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன