எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, April 28, 2011

உமிக்குவியல்

அந்தப்  பாதை .
ஏழெட்டு  வருடங்களுக்கு  முன் 
எங்கள் பிஞ்சுக்  கால்கள் 
தடம்  பதிக்காத 
மணல்களே அங்கு  
இருந்திருக்காது .

அந்தப்  பாதையில்தான் 
பாடசாலை  முடிந்தபின் 
நானும்  என்  தோழிகளும் 
நர்த்தனமாடுவோம் .

இமய  மலைபோல்  குவிந்திருக்கும் 
அந்த  உமிக்குவியல்தான் 
தினமும்  எங்களை 
புரட்டிப்  புரட்டி 
புதுமை  செய்தது .

அங்கே  ஏன்  அது 
குவிந்திருக்கின்றது  என்றறியும் 
பழுத்த  அறிவு 
எங்களுக்கிருக்கவில்லை.
அதில்  குதித்து  விளையாடும் 
குழந்தைத்  தனம்தான் 
எங்களுக்குள் 
குதித்துக்  கொண்டிருந்தது.


புத்தகப்  பைகளையும் 
காலணிகளையும் 
சேர்த்தெடுத்து 
ஓர்  ஓரமாய் 
மூடி  வைத்துவிட்டு 
அந்த  மலையில் 
நாங்கள்  
குதிக்கத்  தொடங்கினால் 
மதியச்  சூரியன் 
மயங்கிப்போய் விடுவான் .

அந்தப்  பஞ்சுக்  குவியல்மேல் 
படுத்துருளுவோம்.
பிஞ்சுக்கைகளால் 
அள்ளி  எடுத்து 
அத்தனை  பேரையும் 
உமிக்  குளியல்  செய்வோம் .

குதித்துக்  குதித்து 
கும்மாளம்  அடிப்போம் .
அந்த 
உமி  மலைக்குள் 
ஒளிந்து  மறைந்து 
புதிதாய்  மீண்டும் 
பிறந்து  வருவோம் .

உமி  மலையின் 
 உச்சியில்  நின்று 
அந்தக்  காலத்துப் 
புதுப்பாடல்களை 
மொத்தமாய்க்  கூவி 
விண்ணதிர  முழக்குவோம் .

என்னை  ஒருத்தி 
தள்ளி  விடுவாள் .
அவளை  ஒருத்தி
தள்ளி  விடுவாள் .
அப்படியப்படியே,
அத்தனை  பேரும் 
மொத்தமாய்  உருளுவோம் .

எங்கள்  பிஞ்சு  மனங்கள் 
புரண்டு  கிடந்ததால் 
உமிக்குவியல் 
புனிதம்  அடைந்ததா ?
புழுதி  அடைந்ததா?
இதுவெல்லாம்  தெரியாது .

ஆனாலும்  நாங்கள் 
மேலுமியைக்  கீழாக்கி 
கீழுமியை  மேலாகி 
அன்றாடம்  அதனை 
புதிதாகச்   செய்தோம் .

நேரம்  போனதும்,
எங்கள்  உமி  மலையை 
பிரிய  முடியாமல் 
பிரிந்து  வந்து …
சீருடையிலும் 
காலுறையிலும் இருந்த  
உமியின் 
அடையாளம்  துடைத்து …
பக்கத்துக்  கிணற்றின் 
குளிர்  நீரில்  முகம்  கழுவி ….
அடுத்த  வீட்டுக்  கிழவியின் 
மண் முட்டியில் 
புகைத் தண்ணீர்  குடித்து …
மீண்டு  வந்து - எம் 
உடைமைகளைப்  பார்த்தால் ,..
கைக்குட்டையோ  எழுதுகோலோ
காணாமல்  போயிருக்கும் .

இதயத்தில் பயமொன்று 
இடியாக  வந்திறங்கும் .


******

அப்பப்பா ….
அந்த  இறந்தகாலம் 
நினைக்க  நினைக்க 
நெஞ்சுக்குள் 
தேனள்ளித்  தெளிக்கிறது .

அந்தப்  பேரின்பன்களை 
இன்னுமின்னும் 
அனுபவிக்க 
இப்போதும்  நாங்கள்
குழந்தைகளாயில்லையே .

இப்போதும் ,..
அந்தப்  பாதையை 
கடக்க  நேர்ந்தால் …
அந்த ,
இறந்துபோன 
உமிக்குவியலில் 
உருண்டு  விட்டுத்தான் 
வருகிறேன்.

2002

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன