எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, April 25, 2011

நானாக நான்...

நான் வாழ்வது
ஒரு கனவுலகில்.
இங்கேதான்
என் வாழ்க்கை
அர்த்தப்படுகிறது.


நான் யாரைப்பற்றியும்
கவலைப்படவுமில்லை.
யாருக்கும்
பயப்படவுமில்லை.


நான் நானாக வாழ்கிறேன்.


மற்றவர்களை  நான்
காயப்படுத்தவில்லை.
கண்ணிமைக்கயிலும்கூட
காற்றுக்கு வலிக்காமல்
காப்பாற்றிக்கொள்கிறேன்.


மற்றவர்களுக்காக
மனம் திறந்து செய்கிறேன்.
ஆனால்,
எனக்காக எதையும்
நான் எதிர்பார்க்கவில்லை.


என் சுயத்திற்கு நானோர்
வரையறை விதிக்கிறேன்.
நேர்மையானவளாய்......
தூயவளாய்.....
நம்பகமானவளாய்....
இன்னுமின்னும்
எனக்கு நானே
சுயவிலாசம் கொடுக்கிறேன்.


எனக்கு நானே
நீதிபதியாகிறேன்.
என் வரையறைகளில் இருந்து
தப்பிக்க நேர்ந்தால்
தண்டனை கொடுக்கிறேன்.
கட்டுப்பட்டு நடந்தால்
தட்டிக் கொடுக்கிறேன்.
எனக்கு நானே
எஜமானியாகிறேன்.


என்னை நானே சமைக்கவும்
என்னை நானே சுவைக்கவும்
பழகிக் கொள்கிறேன்.


என் புலன்களை எல்லாம்
புதுப்பித்துக் கொள்கிறேன்.
இயற்கையின்
சின்னச் சின்ன
சிலிர்ப்புகளைக்கூட
ரசிக்க வைத்து
ஐம்புலன்களையும்
அடக்கியாள்கிறேன்.


மழையில் நனைகிறேன்.
வெயிலில் காய்கிறேன்.
பருவ மாற்றங்கள்
என்னை
பண்படுத்துவதாய்
பறைசாற்றிக் கொள்கின்றேன்.


பூமரங்கள் நட்டு
அவற்றின் புன்சிரிப்பிலே
புளகித்துக் கொள்கிறேன்.
காலைப் பூக்களின்
உதடுகளில் உறங்குகின்ற
பனித்துளிகளை...
அவற்றை
முத்தமிட்டு முத்தமிட்டுப் போகும்
பிஞ்சுத் தென்றலை...
அருகில் சென்று
முகர்ந்து பார்க்கிறேன்.


என்னுள்
தேன் கசிவை ஏற்படுத்தும்
காலைத் தென்றலுக்கு
நான் என்னை
காணிக்கையாக்குகிறேன்.


ஆயிரம் ஞாலம் காட்டும்
அந்திவானத்தை
அண்ணாந்து பார்க்கிறேன்.
அதன்
வினாடிச் சித்திரங்களில்
வியர்த்துப் போகிறேன்.


என்
உணர்வின் சிலிர்ப்புகளை
சப்த அரங்கத்தினுள்
சிந்தி விடுகிறேன்.
என் மெல்லுணர்வுகளை
வார்த்தைகளால் வடிகட்டி
கவிதை புனைகிறேன்.


நான் யாருக்கும்
பாரமாயில்லை.
சில ஏமாற்றங்களையும்
ஏற்றுக்கொள்கிறேன்.


என்னுள் நானே
உயர்ந்த எண்ணங்களை
விதைத்துவைக்கிறேன்.


நான்தான் உலகம்.
என்னைவிட யாரும்
உயர்வுமில்லை.
தாழ்வுமில்லை.


என்னை ஒரு
புத்தகமாய்
விரித்து வைக்கிறேன்.
எனக்குத் தோன்றுவதை
பயமில்லாமல்
எடுத்துச் சொல்கிறேன்.


நிஜ உலகத்தால்
நான்
நிராகரிக்கப்படும்போது
இயற்கையின் மடியில்
விசும்பியழுகிறேன்.


நான் பூக்களின் சாதியென்று
நானும்
தம்பட்டம் அடிக்கிறேன்.
நான் கனவுகளின் முடிச்சு.
என்னை,
இலேசாக யாரும்
அவிழ்த்துவிட முடியாதென்று
அறைகூவுகிறேன்.


புத்தகம் படிக்கிறேன்.
எனக்கு நானே
 சிறகுகள் தரவும்
என்னை நானே
தீட்டிக்கொள்ளவும்
புத்தகம் படிக்கிறேன்.


நான் நானாக வாழ்கிறேன்.
என் கனவுலகில்
வாழ்க்கை
அர்த்தப்படுகிறது.

2002

Post Comment

1 comment:

farams said...

wow............. great........
my mind is going back on my life....
thinking those days 9years back....
the same sentences....
those are not only the sentences.... gave a new breath.... got a new mind... got a new strength...
alhamdulillah !!!!!!!!!!

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன