எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, June 8, 2011

மரணம்

மூச்சுக்  காற்று 
முடிந்துவிடும்  பொழுது 
இதயத்தின்  கதவுக்கு 
இறைவன்  குத்தும் 
இறுதி  முத்திரை .

நமக்கான  உணவு 
தீர்ந்துவிடும்  பொழுது
நம்  இரைப்பையை  பூட்டும் 
ஒரு  ஆமைப்  பூட்டு .

நம்முடைய  
கால்கள்  ரெண்டும் 
ஓய்ந்துவிடும்  போது 
அந்நியக்  கால்கள்  எட்டில் 
அரங்கேறும்  நடனம் .

நம்  உயிரின்  பேனா 
உலகத் தாளில் 
எழுதிய  கவிதைக்கு 
விருதுகள்  பெறுவதற்காய் 
விரைகின்ற  பயணம் .

ஒவ்வொரு 
உயிர்க்கூடும் 
கட்டாயம்  தரிசிக்க  வேண்டிய 
கடைசி  நிமிடம் .

வரமாட்டேன்  என்று 
அழுது  புரளும்  உயிரும் 
மரணத்தின்  கைகள் 
அணைத்துக்கொள்ளும்  போது
அமைதியாய்  ஏற்றுக்கொள்ளும் .

ஊசி  பொறுக்கும்  இடைவெளியில்தான் 
உயிரும்  மரணமும் 
விலகியிருக்கிறது .
நம்  உடலில் 
நிழலை  விடவும் 
நெருக்கமாயிருப்பது 
மரணம் .

எந்த  இடம் ,
எந்த  நேரம் ,
எந்த  முறையில் 
நம்  உயிரின்  கயிறு 
அறுக்கப்படும்  என்று 
யாருக்கும்  தெரியாது .


அது  –
உயிரின்  ரகசியம் .

அது  புதைந்து  கிடக்கும்  இடம்
எங்கே  என்று 
புதைத்தவன்  மட்டுமே 
அறிவான் .

இறைவன்  ஒரு 
வேடிக்கைக்காரன் .

அந்த  ரகசியத்தின் 
திறப்பை 
தன்  சட்டை  பையில் 
போட்டு  விட்டு ,
மரணத்தை  மறந்துவிட்ட  உயிர்களின் 
எதற்காகவென்று  தெரியாத 
ஓட்ட  ஆட்டங்களையும் ,
ஓய்வில்லாத்  தேடல்களையும் 
ரசித்துச்  சிரிக்கிறான்  அவன் .

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன