எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, June 28, 2011

என் அன்புப் பெற்றோருக்கு ..


இது  நான்  A/L  பரீட்சை  முடிந்தபின்  ஆங்கில  வகுப்பொன்றுக்கு  சென்று  ஒரு  நியாயமான  காரணத்துக்காக  சற்றுத்  தாமதமாக  வந்ததற்காக  என்  பெற்றோர் , குறிப்பாக  என்  தாய்  என்னிடம்  “எங்கே  போனாய் ?” என்று  கேட்ட  அந்த  ஒரே  ஒரு  கேள்வியின்  வார்த்தைகளுக்காகவல்ல , அது  கேட்கப்பட்ட  பாணியில்  நான்  இதயம்  உடைந்து  தேம்பித்  தேம்பி  அழுது  தீர்த்தபின்  எழுதுயது.

நான் 
அழுத  கண்ணீர் 
சத்தமின்றி 
அடங்கிப்  போகிறது .

உலகையே  எனக்குள் 
குடியமர்த்தத்  துடித்த 
என்  மனதை 
கேள்விக்கணையால் 
குத்திக்  கிழித்துவிட்டீர்களே .

நான்  பல  யுகங்களை 
விலைக்குவாங்கத்  துடிக்கிறேன் .
என்  பெற்றோரே , - நீங்கள் 
ஏன்  என்னை 
பாடப்  புத்தகத்துக்குள் 
பத்திரப்படுத்தப் பார்க்கிறீர்கள்  ?

என்  இலட்சியங்கள் 
உயர்வானவை .
நான்  வானத்தை  அளந்து 
வான்முகிலாக 
ஆசைப்படுகிறேன்.
நீங்களோ 
கூட்டுக்  கிளிபோல 
என்னை 
குறுகச்  சொல்கிறீர்கள் .

“ நீ  பெண்  பிள்ளை ”
உங்கள்  தலைமுறையில் 
நீங்கள்   கேட்ட
அதே  வார்த்தையை 
உங்கள்  பிள்ளையிடம் 
அப்படியே  ஒப்புவிக்கிறீர்களே ,
இதுவென்ன  நியாயம் ?

நான்  பறக்க  விரும்புகிறேன் .
சிறகுகளைத்  தரவேண்டிய  நீங்களே 
எனையேன் 
சிறையிருக்கச்  சொல்கிறீர்கள் ?

ஒரு  சாதாரணமான  
இளம்பெண்ணின் 
கனவுகளும்  ஆசைகளும்தான் 
எனக்கும்  இருக்குமென்று 
தப்பான  தராசில் 
எடைபோட்டு  விட்டீர்கள் .

சில்லறை  வலைகளுக்குள் 
நான்  சிக்கி  விடுவேனென்று 
சின்னதொரு  வட்டத்தினுள் 
சிந்தித்ததனால் 
இந்த  மீனை 
நீந்த  வேண்டாமென்று 
நிர்ப்பந்திக்கிறீர்கள்.

அன்புப்  பெற்றோரே ,
என்  எண்ணத்தின் 
விண்ணப்பத்தை 
கொஞ்சம் 
செவி  சாய்த்துக்  கேளுங்கள் .

நான்
ஒரு  இலட்ச்சியப்  பெண்ணாக 
உருமாறப் போகிறேன் .

நான்
மண்ணில்  பிறந்ததை 
அடையாளப்படுத்த  வேண்டும் .
நாளைய  சந்ததி 
வரலாற்றுப்  புத்தகத்தில்  
என்  வாழ்க்கையையும் 
படிக்க  வேண்டும் .

ஒரு  இந்திரா  காந்தி  போல் ,
ஒரு  மேரி  கியூரி  போல்
நானும் 
வாழ்ந்த  வாழ்க்கையை 
அடையாளப்படுத்திக்கொள்ள 
ஆசைப்படுகிறேன் .

என்  பெற்றோரே ,
என்  பாதையைக்  கொஞ்சம் 
திறந்து  தாருங்கள் .
நான்  உல்லாசமாய் 
பயணிக்கப்  போகின்றேன் .

2002

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன