எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, June 9, 2011

கவிதைக் குழந்தை

நான்  - 
கவிதையின்  குழந்தை .

கவிதையில் 
வார்த்தைகள்  பேசாது .
உள்ளிருந்து 
இருதயம்  பேசும்.

இளம்  பெண்ணின்  இடையைப்போல் 
சொற்கள்  சுருக்கமாய்  இருந்தாலும் 
சந்தங்களில்  ஒலிக்கும் 
அதன்  குரல்.

மலரின்  இதழ்களைவிட 
மென்மையானது 
கவிதையின்  இதயம்.

காற்றின் 
வேக  மாற்றத்தில்கூட 
துவண்டு  விடும் 
கவிதைக்  கொடி.

காலில் 
ஒரு  மீன்  முள்ளுக் 
குத்தினால்  கூட 
கவிதையின்
உணர்வுகளில்  வலிக்கிறது .

வண்ணத்துப்  பூச்சி 
வந்து  அமரும் 
அதிர்வுகளில்கூட 
தடுமாறுகிறது 
கவிதைப்  பூ.

நான்  கூட  – ஒரு 
கவிதையின்  குழந்தைதான்.

துளைக்கும்  பொது 
நொந்த  வலிகளை 
சொல்லிச்  சொல்லி 
காலமெல்லாம் 
அழுது  தீர்க்கும் 
புல்லாங்குழல்  போல,

தன்னை 
கவிதையாய்ப்  பிறப்பித்த 
காயங்களின் 
ரகசியம்  அறிந்திட  முடியாத 
கவிதையின்  குழந்தை 
கண்ணீர்  விடுகிறது .

வெறும்  காலோடு 
வெயிலில்  நடக்கும் 
மழலை,
துடித்துக்  கதறுவது  போல,
வாழ்க்கைப்  பாதையின் 
சின்னச்  சின்ன 
வலிகளைக்கூட 
ஏற்றுக்  கொள்ளாமல் 
கதறியழுகிறது 
இந்தக்
கவிதைக்  குழந்தை .

உயிரை  பிழிந்து 
எழுதிய  கவிதை 
உணர்வுகள்  தெரியாத 
முரட்டுக்  கைகளில் 
சிக்குப்  பட்டு 
வாசிக்கப்படாமலேயே 
சுருட்டி  வீசப்படும்  பொழுது 
கவிதைக்  குழந்தையின் 
கழுத்து நெரிகிறது .


****

கவிதை  –
இலகுவில்  புரியாது .
அதனால்தானோ 
இந்தக்  கவிதைக்  குழந்தையும் 
எப்போதுமே 
அவிழ்க்கப்படாத 
புதிராக  இருக்கிறாள்.

கவிதையின்
உணர்வுகளை  தரிசிக்க 
எந்தப் 
புண்ணிய  நதியிலாவது 
அந்த  இதயங்களின்  துருக்கள்
கழுவப்பட  வேண்டும் .

மழலையின்  மேனியைவிட 
மிருதுவான 
இதயங்களோடுதான்
கவிதை  பேசும்.

இனி  –
இந்தக்
கவிதையின்  குழந்தையும் 
அப்படித்தான்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன