எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, June 9, 2011

கண்ணுறங்கு வெண்ணிலவே !

சின்னக்  கருவிழியே,...
செந்தூர  இதழமுதே,...
வண்ணத்  தொடுவானில் 
வந்தாடும்  வளர்மதியே,...

உள்ளக்  கவிதைகளில் 
இசைகோர்த்து  நான்  பாட,
மெல்லத்  தலைசாய்த்து 
வெண்ணிலவே  கண்ணுறங்கு .

என்  மடியின்  கொடியினிலே 
உயிர்  பூத்த  மல்லிகையே,...
கண்ணடிக்கும்  மின்மினியே,...
கண்ணுறங்கு  என்  விழியே.

விண்மீனாய்  என்  கருவில் 
முளைத்திட்ட  வெண்பனியே,...
வெந்நீரில்  நீராடி 
விழி  மூடு  பூந்தளிரே...

ஈரைந்து  மாதங்கள் 
உன்  கனவில்  துயில்  மறந்தேன்.
ஈர  நதிக்கரையே,..
இமை  மூடி  நீயுறங்கு.

தூளியிலே  உனைவைத்து 
ஆரிரரோ  பாடுகிறேன்.
தூரத்துப்  பிறைநிலவே,...
துயில்  கொள்ளு  என்னுயிரே.

மலர்விழியில்  இமையாகி  – என்
மாந்தளிரைக்  காத்திடுவேன்.
மழைமுகிலே  சலனமின்றி 
என்  மார்போடு  நீயுறங்கு.

கன்னப்  பளபளப்பில் 
கண்ணாடி  நாணுதம்மா - உன் 
சின்ன  விரல்  தடவ  – நெஞ்சில் 
தேனாறு  ஓடுதம்மா.

வட்டவிழிப்  பார்வையிலே 
வைரமும்  உருகுதம்மா  – உன்
மொட்டவிழும்  புன்னகையில் 
முத்தமிழும்  உதிருதம்மா.

வெண்  மேகக்  குவியலொன்று 
மண்மீது  தவழ்கையிலே 
மெல்லிதயம்  கரையுதம்மா.
மெல்லிசையாய்  வழியுதம்மா.

இதழோரம்  தேன்  வடியும்  – உன்
ஈர  முத்தங்களில் 
இமைக்  கால்கள்  உறையுதம்மா.
உயிர்க்  காற்று  ஒழுகுதம்மா.

முன்னூறு  நாள்  கருவில்
முளைவிட்ட  தென்னங்கீற்றே,...
கண்ணூறு  கழுவுகிறேன் .
கண்ணயர்வாய்  மூங்கில்  காற்றே !..

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன