எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, June 28, 2011

வேண்டும் வேண்டும்

விடியாத  இரவொன்று  வேண்டும்  – அதில் 
விழிக்காமல்  துயில் கொள்ள  வேண்டும் .
கனவுக்குள்  கவிபாட  வேண்டும் - அந்தக் 
களிப்பில்  நான்  துயில்  கொள்ள  வேண்டும் .

இதயங்கள்  உறவாடும்  கேண்மை  வேண்டும்
இதழினிலே  வாய்மைத்  தீ  கனல  வேண்டும் .
செறிவான  நாவண்மை   வேண்டும்  – நெஞ்சின் 
செழிப்பான  கனவெல்லாம்  கைகூட  வேண்டும் .

பூமியிலும்  எண்  மடங்கு  பொறுமை  வேண்டும் .
நேற்றலர்ந்த  மலரினிலும்  புதுமை  வேண்டும் .
துரோகமுள்ள  தோழமையோ  ஒழிய  வேண்டும் .
இதழினிலே  இதயம்  காணும்  வலிமை  வேண்டும் .

வெடுக்கென்ற  கோபங்கள்  குறைய  வேண்டும் .
அடிக்கின்ற  காற்றோடு  கரைய  வேண்டும் .
சிரிக்கின்ற  இதழினிலே  இனிமை  வேண்டும் - அதில்
தெறிக்கின்ற  தேன்துளியை  பருக  வேண்டும் .

காதலனை  களவாடும்  கண்கள்  வேண்டும் .
கனவினிலும்  அவன்  நிழலாய்  வாழ  வேண்டும் .
சின்னச்  சின்ன  ஊடலிலே  சிணுங்க வேண்டும் .
சிற்றுளியால் அவன்  பெயரை  செதுக்க  வேண்டும் .

குளிரான  மலையோரம்  ஒதுங்க  வேண்டும் .
குளிர்காய  என்  தோழன்  அருகில்  வேண்டும் .
கரையோர  அலையேறிக்  குதிக்க  வேண்டும் .
கடலுக்குள்  நான்  சென்று  குளிக்க  வேண்டும் .

சிறு  குளத்தில்  தாமரைப்பூ  பறிக்க  வேண்டும் .
என்  சிறுகுழலில்  சூட்டிவைத்து  ரசிக்க  வேண்டும் .
தூண்டிலிட்டு  மீனொன்றை   பிடிக்க  வேண்டும்  – அதை 
சூரியனில்  காயவைத்து  சுவைக்க  வேண்டும்.

திருட்டிருட்டில்  பதுங்கியே  நான்  விழிக்க  வேண்டும் .
இதழ் விரிக்கும் மலரினை நான் ரசிக்க வேண்டும் .
துயிலுகின்ற என்  விழியை  எழுப்ப  வேண்டும்   – மீண்டும் 
துயில்  கொள்ளத்  தாலாட்டுப்  பாடவேண்டும்.

2002

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன