எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, June 13, 2011

எந்திரக் கனவு

நீலவானத்தின்
நிலாமுற்றத்தில்

பூங்காற்று
தழுவிச்  செல்ல
பூக்களுக்கிடையில்

இன்னொருபூவாய்

நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டு
நாளெல்லாம் பொழுது கழிக்க
ஒரு  நூறு கனவு
இருக்கிறது
  எனக்குள்ளே.

யாருமில்லா

நிழல்ச் சோலையில்
பாய்
விரித்து உட்கார்ந்து
இலைகளுக்கிடையில்

தலைநீட்டிப்
பார்க்கும்
நிலாத்துளிகளை

பருகிக்கொண்டே

இரவு
முழுவதும்
உருகிக் கிடக்க
ஒரு நூறு கனவு
இருக்கிறது
எனக்குள்ளே.

பனித்துளிகள்

முத்தமிடும்

பச்சைப்
புல்வெளிகளில்
இளங்காலைச்
சூரியனின்
இதமான
தொடுகையுடன்
புள்ளி மான் போல
துள்ளிக்
கொண்டு ஓட
ஒரு  நூறு கனவு

இருக்கிறது
எனக்குள்ளே.

வெட்டவெளியிலே

சிட்டுக்  குருவியின்
சிறகுகள்
பொருத்தி
ரெக்கை
விரித்து
வானக்  கவிதையை
வரி  வரியாய்
வாசித்துப்  பார்க்க
ஒரு நூறு கனவு
இருக்கிறது
எனக்குள்ளே.

அலைகளுக்கப்பால்

நீந்திச் சென்று
ஆழக் கடலின்
அடியினில் கிடந்து
மீன்கள்
பேசும்
மோகன  மொழியை
இதயத்  தண்டின்
இசைக்  கலன்களில்
ஒலிப்பதிவு  செய்ய
ஒரு நூறு கனவு
இருக்கிறது
எனக்குள்ளே.

 
வானத்தை எட்டும்
மலைச் சரிவுகளின்
வளைவுகளில் அமர்ந்து
பாடிப் போகும்
ஓடை நீரின்
ஆனந்த ஸ்வரங்களுக்கு
பாதங்களாலே
தாளங்கள் போட
ஒரு நூறு கனவு
இருக்கிறது எனக்குள்ளே.

இன்னும் இன்னும்
இயற்கை வீணையின்
இதழால் வடியும்
இசையின் மழையும்
கவிதைப் பனியும்
எங்கெங்கெல்லாம்
சிந்திக் கிடக்கிறதோ
அங்கெல்லாம் சென்று
அந்த
இன்பத் தேனை
அள்ளிப் பருக
ஆயிரம் கனவுகள்
இருக்கிறது எனக்குள்ளே.

அழகான இந்தக்
கனவுகளெல்லாம்
இன்னும்
முளைக்காத விதைகளாக
விழிகளுக்குள்ளேயே  தங்கிவிட,

எந்திரப் பொழுதுகளின்
சில்லுகளில் சுழன்றுகொண்டு,
பரபரப்பு நிமிடங்களின் ஆதிக்கத்தில்
அவசரக் கத்தி
என் விரல்களோடு சேர்த்து
கனவுகளையும்
நறுக்கிவிட,

எல்லாத் திசைகளிலிருந்தும்
கல்லடி துரத்தும்
ஒரு பைத்தியக்கார நாயைப்போல
திக்குத் தெரியாமல்
திமிறிக் கொண்டு ஓடுகிறது
என் நிஜங்களின்
நெருப்பு நொடிகள்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன