எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, June 22, 2011

BROKEN WINGS - ஒரு மொழிமாற்றம் - பதிப்பு 1

நான்  ஒரு  புதுமையான  மற்றும்  ஆபத்தான  முயற்சியில்  இறங்கியிருக்கிறேன் . ஒரு  ஆத்ம  கவிஞனின்  ஆழமான  காதலின்  வலிகளை   மொழிமாற்றம்  செய்யும்  ஒரு  ஆபத்தான  பணி  இது .

கலில்  ஜிப்ரான், ஒரு  பிரபலமான  கவிஞர் . அவரது  காதலின் சொந்த வலிகளை அழகாக , ஆழமாக   இதயத்தை  பிய்த்துவிடும்  கனத்தோடு  சொல்லியிருக்கும்  படைப்புத்தான்  “Broken Wings”. அந்த  ஆத்ம  வரிகளில்  ஊறித்  திழைத்து  அந்த  வலிகளை  அணுவணுவாய்  அனுபவித்திருக்கிறேன் . அந்த  மென்மையான  உணர்வுகளில்  மெய்  சிலிர்த்திருக்கிறேன் . அந்த ஆழமான  காயங்களில்  இதயம்  நொந்து  கண்ணீர்  சொட்டியிருக்கிறேன் . தூய  காதலின்  ஒவ்வொரு  பக்கங்களிலும்  ஊடுருவி  அந்தக்  காதல்  சாம்ராஜ்யத்தின்   மூலை முடுக்குகளையெல்லாம்  கண்ணீரோடும்  பயபக்தியோடும்  தரிசித்திருக்கிறேன் .

ஒரு  காதலின்  மெல்லுணர்வுகளை  பிழிந்து  அப்படியே  சொட்டச்சொட்ட  தந்திருக்கிறார்  கவிஞர். மௌனத்தின்  காதலனான  கலில்  ஜிப்ரான்  பூக்களைப்போல  மென்மையான  மனம்  கொண்டவர் .தன  காதலியின்  கல்லறையை  தாண்டுபவர்களுக்கு  அவர்  விடுக்கும்  அன்புக்  கட்டளை  இதயத்தின்  ஓரங்களை  கண்ணீர்த்  துளிகளால்  கீறி  விடுகிறது .

இந்தக்  கண்ணீர்க்  காவியத்தில்  எத்தனை  முறை  உருகிய  போதும்  என்  தாகம்  தீரவில்லை . இதை  எப்படியாவது  தமிழ்  மொழியில்  மொழிமாற்றம்  செய்ய  வேண்டும்  என்ற  பேராவல்  ஏற்படுகிறது . ஆங்கில  மொழி  இத்தனை  தித்திப்பானதா  என்று  என்னை  வியக்க  வைத்தது  இந்தக்  காவியம் . அமுதத்திலும்  இனிமையான  நம்  தமிழ்  மொழியில்  இது  இருந்தால்  எவ்வளவு  சுவையானதாக  இருக்கும்  என்ற  என்  பேராசையின்  காரணமாகத்தான்  இதை  மொழி  மாற்றம்  செய்ய  விளைகிறேன் .

இது  ஏற்கனவே  பலபேரால்  மொழி  மாற்றப்பட்டிருக்கலாம் . இருந்தாலும்  என்  தீராத  ஆசை நானே  இதனை  அனுபவித்து  மொழிபெயர்க்க  வேண்டும்  என்று  வற்புறுத்துகிறது . என்னுடைய  இந்த  முயற்சி  ஆபத்து  மிக்கது  என்பது  எனக்குத்  தெரியும் . அந்தக்  கவிஞனின்  சொந்த  வலிகள்  இவை . அவர்  உணர்ந்தவற்றை  உணர்ந்தவாறு  சொல்லியிருக்கிறார் . என்  ஆர்வக்  கோளாறு , அவருடைய  உணர்வுகளில்  ஒரு  சின்னப்  பிறழ்வை  ஏற்படுத்தினால்கூட  கவிஞர்  உலகம்  என்னை  கைகட்டி  நிற்க  வைத்து  கேள்வி  கேட்கும்  என்று  எனக்குத்  தெரியும் . ஒரு  மண்ணளவு  பிழையைக்  கூட  இந்தக்  கவிஞர்  உலகம்  மன்னிக்காது  என்றும்  எனக்குத்  தெரியும் . மன்னிக்கவே  முடியாத  ஒரு  மாபெரும்  குற்றம்  அதுவென்றும்  எனக்குத்  தெரியும் . அதைவிட , இப்படியானதொரு  ஆபத்தான  பணியைச்  செய்ய  நான்  எந்த  வகையிலும்  தகுதியற்றவள்  என்றும்  கூட  எனக்குத்  தெரியும் . ஆனபோதும் , ஒரு  சின்னக்  குழந்தையைப்  போல  என்  மனம்  கெஞ்சிக்கொண்டிருக்கிறது  இதை  நான்  எப்படியாவது  தமிழ்ப்படுத்தியே  ஆகவேண்டுமென்று .

என்  மரியாதைக்குரிய  கவிஞர்  அவர்களே , உங்களிடம்  மன்றாடிக்  கேட்கிறேன் . என்னை  மன்னித்து  விடுங்கள் . உங்களின்  உணர்வுகளை  மொழி  மாற்ற  எனக்கொரு  அனுமதி  தாருங்கள். ஒரு  குடம்  தண்ணீருக்கு  முன்  தீராத  தாகத்தோடு  காத்திருக்கும் ஒரு  காக்கையைப்  போல  உங்கள்  உணர்வுகளை  அருந்துவதற்காக  ஆவலோடு  காத்திருக்கிறேன்

உங்கள்  உணர்வுகளில்  ஒரு  மிகைப்படுத்தலோ  குறைபாடோ  இல்லாமல்  அப்படியே  தர  முயற்சிக்கிறேன் . ஒரு  குழந்தையின்  தெரியாத்தனமான  உதைகளைப்  பொறுத்துக்  கொள்வதுபோல , இந்தக்  கிறுக்குப்  பெண்ணின்  பைத்தியக்காரத்தனங்களை  நீங்கள்  பொறுத்துக்கொள்ள  மாட்டீர்களா? எனக்குத்  தெரியும் . பூவைப்போல  மென்மையானவர்  நீங்கள் . நிச்சயமாக  என்  ஆசைக்கு  அனுமதிப்பீர்கள். உங்களின்  காதல்  ஆத்மா  என்னைச்  சுற்றி  பறந்துகொண்டிருக்கும்  சப்தம்  எனக்குக்  கேட்கிறது

என்  இறைவா , இந்தப்  பணியை  என்னால்  முடிந்தளவு  சிறப்பாக  செய்ய  எனக்கு  சக்தியைத்  தந்தருள்வாயாக!

அன்பு  நண்பர்களே , இந்தக்  காதல்  கவிஞனின்  உணர்வுகளை  கட்டாயம்  படியுங்கள் . காதலின்  நீள  அகலங்களை  இந்தக்  கண்ணீர்க்  கடலுக்குள்  நீந்தி அளங்கள். லெபனான்  தேசத்து  புல்வெளிகளில்  நடந்து  பாருங்கள் . உங்கள்  இதயங்களில்  நிஸான்  மாதத்து  மலர்கள்  பூக்கட்டும்.



Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன