எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, June 20, 2011

சந்தேகம் களைவோம்

மனங்களுக்குள் 
அத்துமீறிப்  புகுந்து 
சந்தோஷப்  பூந்தோட்டங்களையும்
நிம்மதிப்  பஞ்சு  மெத்தைகளையும் 
கொளுத்தி  விட்டுப்  போவது 
சந்தேகத்  தீக்குச்சி .

அமைதியான  ஒரு  குளத்தில் 
கல்லெறிந்துவிட்டுப்  போகிறது  அவை .

ஆழமான  உறவுகளுக்கிடையே 
அரக்கனாய்ப்  புகுந்து
அந்த 
ஆத்மார்த்த  பந்தங்களின் 
சுவர்களை 
துண்டு  துண்டாய்ப்  பெயர்க்கிறது .

சந்தோசப்   பூந்தோப்பில் 
எச்சங்களைப்  போட்டு 
அழகான  பூக்களின் 
நறுமணத்தையெல்லாம் 
பிணவாடையாக்கி  விடுகிறது.

மண்ணுக்குள்ளே  இருந்துகொண்டே 
கூரை  வளைகளை  அரித்துவிடும் 
கறையான்களைப்  போல ,
மனதின் 
ஒரு  மூலையில்  இருந்துகொண்டே 
மூளை  நரம்புகளை 
முறுக்கிப்  பிழியும் 
அபூர்வமான 
அழிக்கும்  சக்தி  கொண்ட 
அணுகுண்டு  அது .

எத்தனை  உறவுகளின் 
பாலங்களை  
அஸ்திவாரத்தோடு 
பிடுங்கியிருக்கிறது  அவை .

எத்தனை  உறவுகளை 
இறுக்கிக்  கட்டி  வைத்திருக்கும் 
நேசக்  கயிற்றை    
இழை  இழையாய் பிரித்து 
எறிந்திருக்கிறது .

எத்தனை  காதல்  இதயங்களில் 
அமிலம்  ஊற்றி  
எரித்திருக்கிறது .

சந்தேகம் 
ஒரு  விஷக்  கிருமி .
ஒரே  ஒரு  புள்ளியில்
உற்பத்தியாகி 
உயிர்  வரைக்கும்  பரவும் 
புற்று  நோய்  அது .

ஒரு  நாற்றில்  பிடிக்கும்  பீடை 
 பல துண்டு  வயல்களை 
அழித்துவிடுவது  போல் ,
ஒரு  துண்டுத்  தலைமயிரில்  
தொடங்கி
ஒரு  தலைமுறைக்கே   உலை  வைக்கும்
சந்தேகப்  பூச்சி .

எங்களுக்கிடையில்  நின்று 
சந்தேகப்  பேய் 
தும்மினால்  கூட
எங்கள்  உறவுகளுக்குப்  பிடிக்கும்
காச  நோய் .
****
மனித  உறவுகள் 
மாணிக்கம்  போன்றவை .
பொன்களை  விடவும் 
பெறுமதியானவை .
கண்களைப்  போல 
கண்ணுங்   கருத்துமாய் 
காப்பாற்ற  வேண்டியவை .

அந்த
ஆத்ம பந்தங்களுக்கிடையில்           
வேண்டாமே     
இன்னொரு சகுனி.
****
சந்தேகத்  தீயை 
தீயிட்டுக்  கொளுத்துவோம்.
உறங்கிப்போன  உறவுகளை 
நம்பிக்கை விளக்குகளில் 
திரியிட்டு   எழுப்புவோம்.

நாளை  நம்  உறவுகளில் 
நட்சத்திரம்   பூக்கட்டும்.
நம்  ஆரத்  தழுவல்களில்  
நதிகளுக்கும்   வேர்க்கட்டும் .
நாம் 
கைகோர்த்துப்  பாடும்  பாடல் 
அன்பின்  
தேசியகீதம்  ஆகட்டும்.


Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன