ஒரு பொழுதில்
காற்றைப் போல
பாரமில்லாமலும்,
இன்னொரு பொழுதில்
கற்பாறையை விட
கனமானதாயும்
இரட்டை வேடம் போடுகிறது
என் மனது.
ஒரு பொழுதில்
பட்டாம்பூச்சிபோல
சிறகு விரித்து
சுற்றித் திரிகிறது .
இன்னொரு பொழுதில்
கோழிக் குஞ்சுபோல
கூட்டுக்குள்ளேயே
ஒதுங்கிக் கொள்கிறது .
சில வேளைகளில்
என் புன்னகைகளில்
பூமியையே வாங்குகிறேன் .
இன்னும் சில வேளைகளில்
கால் அங்குலப் புன்னகையைக்கூட
கடன் வாங்க வேண்டியிருக்கிறது .
ஒரு குழந்தையைப் போல
மண்ணில் புரண்டு,
கால்களை உதறி,
அடம் பிடிக்கிறேன்
ஒரு பொழுதில் .
இன்னொரு பொழுதில்
ஒரு புத்தனைப் போல
கண்களை மூடி
அமைதியான புன்னகையுடன்
எல்லாவற்றையுமே
ஏற்றுக் கொள்கிறேன் .
ஒரு நேரம்
வானம் , பூமி ,
கடல் , காற்று , மழை ,
கல் , முள் , கண்ணீர் என்று
எல்லாவற்றையுமே ரசிக்கிறேன் .
இன்னொரு நேரம்
மழலையின் முத்தத்தில்கூட
மகிழ்ந்திடாமலிருக்கிறேன்.
ஒரு நேரம்
சொந்த பந்தம்,
அண்டை அயலார்,
நண்பன் , எதிரி , துரோகியென்று
எல்லாரையும் நேசிக்கிறேன்.
இன்னொரு நேரம்
பெற்ற அன்னை கூட
எனக்கு
அந்நியமாய்த் தெரிகிறாள் .
என்னாலேயே
அவிழ்க்கமுடியாத
பெரியதொரு
முரண்பாடுகளின்
முடிச்சு நான் .
ஒப்பனையில்லாமலேயே
ஓரங்க நாடகம் நடிக்கிறது
என் மனது.
வேஷம் தரிக்காமலேயே
வேறு வேறாய் அலைகிறது
என் உருவம் .
எனக்கு
நானே ஒரு புதிர்.
ஆனாலும்
ஒன்று மட்டும்
உறுதியாய்ச் சொல்வேன் .
எத்தனை முகம் காட்டினாலும்
என் அத்தனை முகங்களிலும்
உண்மை இருக்கிறது .
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன