எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, June 22, 2011

BROKEN WINGS - ஒரு மொழிமாற்றம் - பதிப்பு 2

 முறிந்த  சிறகுகள் 

முன்னுரை
 
காதல்   தன்னுடைய  மந்திரக்  கதிர்களால்  என்  கண்களைத்  திறந்து , அதன்  அக்கினி  விரல்களால்  முதன்முறையாக  என்  ஆத்மாவை  தொட்டபோது  எனக்கு  பதினெட்டு  வயது . தன்னுடைய  அழகினால்  என்  ஆத்மாவை  எழுப்பி  நாட்கள்  கனவுகளாகவும்  இரவுகள்  கொண்டாட்டங்களாகவும் கழிகின்ற  பேரன்பு  என்னும்  தோட்டத்துக்குள்  என்னை  இட்டுச்  சென்ற  முதல்  பெண்மணிதான்  'செல்மா  கெராமி'.

தன்னுடைய  சொந்த  அழகின்  முன்னுதாரணத்தினால்  எனக்கு  அழகை  ஆராதிக்க  கற்றுத்  தந்தவளும் , தன்னுடைய  ஆழமான  அன்பினால் , காதலின்  ரகசியங்களை  வெளிப்படுத்தியவளும்  செல்மா  கெராமிதான்; அவள்தான்  நிஜ  வாழ்க்கை  என்னும்  கவிதையை  முதன்முதலாக  எனக்கு  பாடிக்காட்டியவள் .

ஒவ்வொரு வாலிபனும்  தன்னுடைய  முதல்  காதலை  ஞாபகித்து   அந்த  புதுமையான  மணித்துளிகளின்  உணர்வுகளை  மீட்டிப்  பார்க்க  முயற்சிக்கிறான். அந்த  ஞாபகங்கள்தான்  அவனுடைய  ஆழமான  காயங்களை  மாற்றி  அதன்  மர்மங்களின்  கசப்புத்தன்மையை  புறந்தள்ளிவிட்டு அவனை  ஒரு  மகிழ்ச்சிமிக்கவனாய்  ஆக்கி   விடுகிறது . ஒவ்வொரு  வாலிபனின்  வாழ்க்கையிலும்  அவனுடைய  வசந்த  காலத்தில்    திடீரெனத்    தோன்றி   அவனுடைய  தனிமையை  சந்தோசமான  பொழுதுகளாய்   உருமாற்றி   அவனுடைய  இரவுகளின்  அமைதியை   சங்கீதத்தால்  நிரப்பக்கூடிய   ஒரு  ‘செல்மாஇருக்கிறாள் . ‘காதல்செல்மாவின்  உதடுகளினூடாக   என்  காதுகளுக்குள்   கிசுகிசுக்கப்   பட்டபோது, நான்  எண்ணங்களுக்குள்   ஆழமாக  ஊடுருவி  நிஜ  உலகத்தின்  பொருளையும், வேத நூல்களின் ஆச்சரியமான   உண்மைகளையும்  தேடினேன்  . செல்மா  ஒரு  ஒளித்தூணாக   என்  வாழ்வில் வருமுன், என்னுடைய   வாழ்க்கை  ஒரு  அரை மாத்திரையையும், சுவர்க்கத்தில்   ஆதாமுடையதைப்போன்று    வெறுமையையும்    இருந்தது. என்னுடைய  இதயத்தை  இரகசியங்களாலும்   அற்புதங்களாலும்   நிரப்பி, வாழ்க்கையின்   பொருளை   எனக்குப்   புரியச்   செய்த   என்  இதயத்தின்  ஏவாள்  அவள்தான் .

முதல்  ஏவாள்  தன்னுடைய  சொந்த  ஆசையினால்  ஆதாமை  சுவர்க்கத்திலிருந்தும்  வெளியேற்றினாள். செல்மா  அவளுடைய  இனிமையாலும்  காதலாலும்  தூய  காதல்  என்னும்  சுவர்க்கத்திற்குள்  என்னை  விரும்பி  நுழைய  வைத்தாள். ஆனால், முதல்  மனிதனுக்கு  என்ன  நடந்ததோ  அது  எனக்கும்  நடந்தது . ஆதாமை  சுவர்க்கத்திலிருந்து  விரட்டியடித்த  அந்த  கொடிய  சொல்  போன்றதொன்றுதான்  , அதன்  தகதகக்கும்  விளிம்புகளால்  என்னை  பயமுறுத்தி , எந்தக்  கட்டளைக்கும்  மாறு  செய்யாமலேயே , எந்தத்  தடுக்கப்பட்ட  மரத்தின்  பழத்தையும்  சுவைக்காமலேயே  என்னுடைய  காதல்   சுவர்க்கத்திலிருந்து  என்னை  பலவந்தமாக  வெளியேற்றியது .

இன்று , பல  வருடங்கள்  கடந்தபின்  கண்ணுக்குத்  தெரியாத  சிறகுகளாக  என்னைச்  சுற்றிப்  பறந்துகொண்டு , என்  இதயத்தின்  ஆழத்தை  துன்பங்களால்  நிரப்பி , என்  கண்களை  கண்ணீரால்  குளிப்பாட்டும்  ஆறாத  காயங்களைத்  தவிர  அந்த  அழகான  கனவில்  என்னிடம்  எதுவுமே  மீதமில்லை . என்  பேரன்புக்குரிய  செல்மா  இறந்துவிட்டாள். என்னுடைய  உடைந்துபோன  இதயத்தையும் , சைப்ரஸ்  மரங்களினால்  சூழப்பட்ட  அவளது  கல்லறையையும்  தவிர  அவளை  ஞாபகப்படுத்த  எதுவுமே  இல்லை . அந்தக்  கல்லறையும்  இந்த  இதயமும்தான்  அவளுக்கு  சாட்சியாக  எஞ்சியிருக்கின்றன

 மயானத்தின் அமைதி , கல்லறைகளின்  இருட்டில்  இருக்கும்  கடவுளின்  ரகசியத்தை  வெளிப்படுத்துவதில்லை . உடம்பின்  சாற்றை உறுஞ்சிக்  குடிக்கும்  மரக்கிளைகளின்  அசைவுகளின்  சப்தம்  புதைகுழியின்   மர்மங்களை  வெளியே  சொல்வதில் . என்  இதயம்  தன்   கொடூரமான  வலிகளின்  பெருமூச்சுக்களால் , காதல் , அழகு , மற்றும்  மரணம்  ஆகியவற்றின்  நாடகங்களை  வாழ்க்கைக்கு  அறிவிக்கிறது .
      
பியுரட்  நகரில்  பரந்திருக்கும்  என்  இளைய  நண்பர்களே , பைன் காடுகளுக்கு  அருகில்  உள்ள  அடக்கஸ்தலங்களை  நீங்கள்  கடக்கும்போது  அமைதியாக நுழையுங்கள் . மயானத்தின்  அமைதியை  உங்கள்  காலடிச்  சப்தங்களால்  கலைத்து  விடாமல்  மெல்ல  நடங்கள் . செல்மாவின்  கல்லறையடியில்  பணிவுடன்  நின்று  அவளை மறைத்து  வைத்திருக்கும் மண்ணுக்கு  வந்தனம்  செய்து  ஒரு  ஆழமான  பெருமூச்சுடன்  என்  பெயரை  உச்சரித்து  “ இங்கேதான்  கடல்களுக்கப்பால் காதலின்  கைதியாக  வாழ்ந்துகொண்டிருக்கும்  ஜிப்ரானுடைய  எல்லா  நம்பிக்கைகளும்  புதைக்கப்பட்டிருக்கின்றன . இந்த  இடத்தில்தான் , அவன்  தன்னுடைய  சந்தோசங்களை  தொலைத்தான் , கண்ணீரை   வடித்தான்புன்னகையை  மறந்தான்என்று  உங்களுக்குள்ளேயே  சொல்லிக்  கொள்ளுங்கள் .

அந்தக்  கல்லறையடியில்  சைப்ரஸ்  மரங்களோடு  சேர்ந்து , ஜிப்ரானின்  துன்பங்களும்  வளர்கிறது .  நேற்று  வாழ்க்கையின்  உதடுகளில்  ஒரு   அழகான  ராகமாகவிருந்து , இன்று  பூமியின்  மார்பில்  ஒரு  மௌனமான  ரகசியமாய்  புதைந்துபோன  செல்மாவின்  இழப்பிற்காக  ஒவ்வொரு  இரவும்  வேதனைகளோடும்  ஏமாற்றங்களோடும்  மரக்  கிளைகளோடு  இணைந்து  அவளை  ஞாபகித்துக்கொண்டு  அந்தக்  கல்லறைக்கு  மேலாக  இவனுடைய  ஆத்மா  பறந்துகொண்டிருக்கிறது .

என்னைப்  போல்  வேதனைகளை  சுமந்துகொண்டிருக்கும்  நண்பர்களேஉங்கள்  காதலிகளின்  பெயரில்  உங்களிடம்  ஒன்று  வேண்டுகிறேன் . என்னுடைய  நேசத்துக்குரிவளின்  கைவிடப்பட்ட  கல்லறையில்  ஒரு  மலர்  வளையம்  வையுங்கள் . நீங்கள்  செல்மாவின்  கல்லறையில்  வைக்கின்ற  மலர்கள்  ஒவ்வொன்றும்  நாணம்கொண்ட  ரோஜாவின்  இதழ்களில்  விழுகின்ற  விடியலுக்கான  பனித்துளிகளாயிருக்கும்.


தொடரும்....

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன