எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, July 5, 2011

நிலாத்துண்டு எரிகிறது


-->

என் நெஞ்சோரம்  
ஒரு 
நிலாத்துண்டு எரிகிறது .
உன் பிஞ்சு இதழ்கள் 
அணைத்துக்கொண்ட  
அந்த புகைக்கூட்டின்  
செந்தணலில்  
என் நெஞ்சோரம் 
ஒரு நிலாத்துண்டு எரிகிறது .

வளர்ந்து வரும்  
ஒரு வானவில்லின் 
உயிர்த்துடிப்பில்  
நெருப்புத் துண்டமொன்றை
சொருகி விட்டது யார் ?

தாய்ப்பாலின் மொழுமொழுப்பு 
இன்னும் உன் முகத்தில்
பசுமையாய் இருக்குதடா .
எதற்காக – நீ 
உன் முகத்தை 
சொறிக்கல்லில் உரஞ்சுகிறாய் ?

யார் பெற்ற முத்தோ நீ ,
ஒரு 
நெருப்புக் கிடங்கில் விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாய் 
வெடித்துச் சிதறும் போது
நாளைய பூவொன்று  
மொட்டாகவே உதிர்ந்துவிட்டதுபோல்
உள்ளுக்குள் வலிக்கிறது.

உன்  விரலிடுக்குகளின் வழியே 
வெளியாகும் 
புகை வரையும் சித்திரத்தில்  
உன்
நுரையீரல் கருகும் காட்சி கண்டு 
அமிலத்தில் விழுந்த 
ஒரு பூவைப்போல 
என் இதயம் கருகுகிறது .

நீ வெளிவிடும் புகை 
உன்னைச் சுற்றி 
மரணவலை பின்னும் 
அபாயம் உனக்கு 
புரியவில்லையா தம்பி ?

என்  சமுகத்தின் 
நாளைய நட்சத்திரமொன்று
புகைச் சிறையில் 
ஆயுள் கைதியாகும் 
அவலம் கண்டபோது 
நெஞ்சு பொறுக்கவில்லையடா.

உன்  வெளிச்சம் 
மெல்ல மெல்லக் குறைந்து 
ஒரு 
அமாவாசை நிலவாய் ஆக  
உனக்கேன் விருப்பம்?

வண்ணத்துப் பூச்சியின்  
சிறகுகளைப்போல்  
வண்ணத் தட்டாய்  
ஜொலிக்க வேண்டிய
உன்  வாழ்க்கை
சாயம் போன
சீத்தைத் துணிபோல்
நொடிந்து போவது
உனக்கேன் புரியவில்லை ?

உன்  இளமையின் 
பிருந்தாவனத்தில் 
மல்லிகைக்குப் பதிலாக 
கள்ளிச் செடி நட்டு 
நீயே உன் காற்சட்டையை 
கிழித்துக் கொள்வாயா ?

உன்  உதட்டில் 
துடிக்கும் நெருப்பு 
உன்  இதயத்தின் மையத்தில் 
மூளுகின்ற 
நெருப்புக் குண்டத்துக்கு  
விறகாகிறது.

நீயே  உன்  சாவுக்கு 
புதைகுழி தோண்டுவாயா ?

உன்  மரண அறிவித்தலை
உதடுகளில் எழுதுவாயா ?

எந்தக் குட்டிச் சுவர் ,
எந்த கெட்ட நட்பு 
உன்னை 
வாழ்க்கையின் அதலபாதாளத்தில் 
தள்ளிவிட்டது ?

வேண்டாமப்பா .
விட்டு விடு .

உன்  மரணக்குழிக்கு 
நீயே
முகவரி எழுதாதே .

உன்  இளமையின்
அக்கினிச் சுடரை 
சிகரட் புகையால் 
ஊதி அணைத்துவிடாதே .

உன்  வானவில்லின் நிறங்களை 
வாய்க்குழிக்குள் 
கரைத்துவிடாதே .

போன தலைமுறை 
எப்படியோ போகட்டும் .
நீ
நாளைய  நம்பிக்கை .

ஒரு  விருட்சத்துக்கான 
வித்து 
உனக்குள்ளே 
விதைக்கப்பட்டிருக்கிறது .

நாளைய  வரலாற்றை 
எழுதும் பேனா 
உன்  சட்டைப் பையில் இருக்கிறது .
அந்தப் பேனாவை எடுத்து
முதலில் 
உன்  தலை  எழுத்தை  
மாற்றி எழுது .

எந்தப் புகை
உன்னைப் புகைத்துக்கொண்டிருக்கிறதோ 
அந்தப்  புகைக்கு 
எழுது - ஒரு 
விவாகரத்துக் கடிதம் .

அண்ணாந்து பார் .
வானத்தின் முகட்டில் 
உனக்கொரு 
காகிதம் காத்திருக்கிறது .
அதில் எழுது
“ என்  இலையுதிர்காலம் 
முடிந்தது இன்று . – இனி 
என்  வசந்தகாலம்
வரலாறு படைக்கும் ” என்று .





Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன