எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, July 6, 2011

கறுப்புக் கவிதை


என் அதிகாலைகள்
இருட்டில் விழிக்கின்றன.

என் பகல்களுக்கு
கிரகணம் பிடித்திருக்கிறது.

எனக்கு
விடியலின் நிறம் கறுப்பு.

நான் ஒரு
கடலோரக் கவிதை.
ஆம்...
கச்சானும் கண்ணீரும்
சுமக்கின்ற கவிதை.
காற்று வாங்க வந்தோர்க்கு
கச்சான் விற்கும்
கறுப்புக் கவிதை.

வீட்டுப் பாடம்
எழுதும் நேரம்,
நான் இங்கே
காற்றில் எழுதுகிறேன்
வாழ்க்கைப் பாடம்.

புத்தகப் பைகளை
சுமக்கும் கைகள்
இங்கே சுமக்கிறது
கச்சான் பொதிகளை.

நிகழ்காலத்தின் முன்
கேள்விக்குறியாய்
கூனி நிற்கிறேன்.

தேடித் தேடிக்
கற்க வேண்டிய
இந்தச் சின்ன வயதில்
ஓடி ஓடி விற்கிறேன்
என் எதிர்காலத்தை.

கனவுகளால் நிரம்பவேண்டிய
என் கண்கள்
கண்ணீரால் நிரம்பி
என் பால்யத்தை சுடுகிறது.

அலைகளோடு
அள்ளுண்டு போகும்
கரையோரக் குப்பையாகிறது
என் வாழ்க்கை.

வறுமைப் பேயோடு
போராடிப் போராடி,
நொந்து நூலாகி,
என் குடும்பம்
குற்றுயிராய்க் கிடக்கிறது.

பிள்ளைப் போராளியாய்
வறுமைக்கெதிராய்
துப்பாக்கி தூக்க வேண்டிய
துர்ப்பாக்கியம் எனக்கு.

******
நான் இங்கே,
பொட்டலம் கட்டி விற்பது
கச்சான் கொட்டையல்ல.
என் கனவுகளின் மூட்டை.

என் கனவுகள் அத்தனையும்
விற்றுத் தீர்ந்தபின்
காற்றிலாடும்
காய்ந்த சருகாய்
திரும்பிப் போகிறேன்.

நேற்றையைப் போலவே,
இன்றைக்கும்,
என் கூட்டுக் குருவிகளுக்கு
கூழையேனும்
குடிக்கக் கொடுப்பேன்.

மீண்டும்,
நாளையும் வருவேன்.
மறுபடியும்,
இதே கடலலையில்
கனவுகளை கல்லாக்கி- அதில்
என் வறுமையின் அழுக்குகளை
அடித்துத் துவைப்பேன்.

******

கல்வி பொதுவுடைமை
என்றதெல்லாம்,
இந்தக் கடலோரம்
பொய்யாகிப் போகிறது.

இந்த
கந்தைச்  சிறுவனின்
கல்லூரிக் கனவெல்லாம்
காற்றோடு  நாற்றமாய்
காணாமல் போகிறது.





Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன