எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, July 6, 2011

Broken Wings:ஒரு மொழிமாற்றம் - பதிப்பு 3முறிந்த சிறகுகள் 
 
1.௦ அமைதியான சோகம் 
 
நண்பர்களே, உங்கள்  இளமையின்  விடியலை  நீங்கள்  சந்தோசத்துடன்  ஞாபகப்படுத்தி  அது  உங்களை  விட்டுப்  பிரிந்து  போனமைக்காக  மனம்  வருந்துவீர்கள்.ஆனால்  நான்  அதை  ஒரு  சிறைக்கைதி  சிறைக்கம்பிகளையும்  கைவிலங்குகளையும் ஞாபகப்படுத்துவதுபோல  ஞாபகப்படுத்துகிறேன். குழந்தைப் பருவத்துக்கும்    இளமைப்பருவத்துக்கும்   இடைப்பட்ட  அந்த  வருடங்களை  கட்டுப்பாடுகளற்ற சுதந்திரமான பொற்காலமாக     நீங்கள்  வர்ணிப்பீர்கள்  . காதல்  வந்து  என்  இதயக் கதவுகளைத்  திறந்து  அதன்  மூலை  முடுக்குகளிலெல்லாம்  விளக்கேற்றும்  வரை  என் இதயத்துக்குள்  விழுந்து  வளர்ந்து  அறிவுலகத்துக்கான  வழிகளை  கண்டுபிடிக்க  முடியாத  ஒரு  அமைதியான  சோகக்  காலமாகத்தான்  அந்த  வருடங்களை  நான்  அழைக்கிறேன். காதல்  எனக்கு  மொழியையும்  வலியையும்  கற்றுக்கொடுத்தது. நீங்கள்  உங்கள்  செயற்பாடுகளை  கண்டுகளித்து, உங்கள்  மௌனமான  கிசுகிசுப்புக்களைக்  கேட்ட  பூங்காக்களையும்   நீங்கள்  சந்திக்கின்ற   இடங்களையும்   சாலையோரங்களையும்  ஞாபகப்படுத்துவீர்கள் . நானும்  கூட வட  லெபனானில்   உள்ள   அந்த  அழகான  இடத்தை   ஞாபகப்படுத்துகிறேன்நான்  என்  கண்களை   மூடும்  ஒவ்வொரு  நேரமும்   மாயங்கள் நிரம்பிய  மரியாதைக்குரிய  அந்த  பள்ளத்தாக்குகளையும்பேரொளியாலும்   பிரம்மாண்டங்களாலும்  மூடப்பட்ட  வானத்தைத்  தொடும்  அந்த  மலைகளையும்  காண்கிறேன். நகரத்தின்  இரைச்சலிலிருந்து  தவிர்ந்து கொள்வதற்காக  என்  காதுகளை  மூடும்  ஒவ்வொரு  சந்தர்ப்பத்திலும்  அந்த  ஓடைகளின்  சலசலப்பையும் மரக்கிளைகளின்  அசைவுகளையும்  கேட்கிறேன் . தன்  தாயின்  மார்புக்காக ஏங்கும்   ஒரு  மழலையைப்போல  நான்  காண  ஏங்குகிற  இந்த  எல்லா அழகுகளும், பரந்த  வானத்தில்  சுதந்திரமாகப்  பறந்துகொண்டிருக்கும்  பறவைக்கூட்டத்தை  பார்க்கும்போது  கூட்டுக்குள்  அடைக்கப்பட்ட  ஒரு  ராஜாளிப்  பறவை  அதை  சுவைக்க  முடியாமல்  வேதனைப்படுவதுபோல, இளமையின்  இருட்டில்  சிறைப்படுத்தப்பட்ட  என்  ஆத்மாவை   அவற்றை   அனுபவிக்க  விடாமல்  காயப்படுத்தியது. அந்தப்  பள்ளத்தாக்குகளும்  குன்றுகளும்   என்னுடைய  கற்பனைக்கு  விளக்கேற்றியது . ஆனால்  கசப்பான  நினைவுகள்   என்னுடைய  இதயத்தைச்  சுற்றி  நம்பிக்கையீன  வலைகளை  பின்னிவிட்டது .

நான் வெளியில்  போகும்  ஒவ்வொரு  நேரமும்  ஏமாற்றத்துடன்  திரும்புகிறேன்  அவற்றுக்கான  காரணத்தை  அறியாமலேயே. மங்கிய  வானத்தைப்  பார்க்கும்  ஒவ்வொரு  நேரமும்  என்னுடைய  இதயம்   சுருங்கிவிடுவதுபோல்  உணர்கிறேன். பறவைகளின்  பாடல்களையும்  ஊற்றுக்களின்  சலசலப்புக்களையும்  கேட்கின்ற ஒவ்வொரு   நேரமும்  நான்   வேதனைப்படுகிறேன்  அந்த  வேதனைக்கான  காரணங்கள்  என்னவென்று  அறிந்துகொள்ளாமலேயே. அறியாமை  ஒருவனை   வெறுமையாக்குகிறது. அந்த  வெறுமை  அவனை  அலட்சியமானவனாக  ஆக்குகிறது  என்று  சொல்லப்படுகிறது. உணர்ச்சிகளற்றுப்  பிறந்து, உறைந்துபோன உருவங்களாக  வாழ்பவர்களிடையே  அந்தக்  கூற்று   உண்மையானதாக   இருக்கலாம். ஆனால் அறிவில்  குறைந்தவனாக  இருந்தாலும்  உணர்ச்சி  மேலீட்டால்  சித்திரவதைப்படும்  ஒரு  நலிந்த  சிறுவன்தான்  பூமியில்  உள்ள  மிகப்பெரிய  துர்ப்பாக்கியசாலியாக   இருக்கமுடியும். ஏனென்றால், அவன்  இரண்டு  விசைகளால்  கிழிக்கப்படுகிறான். முதலாவது  விசை  அவனை  வானத்துக்கு  உயர்த்தி  கனவு  மேகத்தினூடாக  வாழ்க்கையின்  அழகை  அவனுக்கு  காட்டுகிறது . இரண்டாவது  விசை  பூமிக்குக்  கீழாக  அவனைக்  கட்டிப்போட்டு, அவனது  கண்களை  தூசுகளால்  நிரப்பி, பயத்தினாலும்  இருளினாலும்  அவனை  அழுத்துகிறது.

தனிமை மென்மையான , மிருதுவான கரங்களைக் கொண்டது. ஆனால் , அதன் பலமான விரல்கள் இதயத்தைக் கவ்விப்பிடித்து துன்பத்தின் வலியை உருவாக்குகிறது . தனிமை துன்பத்துக்கு   நண்பனாகவும் அதேநேரம் ஆத்மா உயர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்கிறது .

துன்பத்தில்  தள்ளாடிக்கொண்டிருக்கும்  இந்தச் சிறுவனின்  மனம்  இப்போதுதான்  மடல்  விரியும்  ஒரு பூவைப்    போன்றது. அது   அதிகாலையில்  தென்றலுக்கு  அசைந்து  தன்  இதழ்களை  விரிக்கிறது. இரவின்   நிழல்  வரும்போது  அது  அதன்  இதழ்களை  மறுபடியும்  மூடிக்கொள்கிறது. அந்த  சிறுவனுக்கு   நண்பர்களோ, அவனைத்  திசை  திருப்பக்கூடிய  பொழுதுபோக்குகளோ இல்லையென்றால், அவனது  வாழ்க்கை  சிலந்தி  வலைகளைத்  தவிர  வேறொன்றையும்  பார்க்க  முடியாத, பூச்சிகள்  ஊரும்  சப்தத்தைத்  தவிர  வேறெதனையும்  கேட்கமுடியாத  ஒரு  ஒடுக்கமான  சிறையாகத்தான்  இருக்கும்.

என்  இளமைக்காலத்தை  முழுமையாக  ஆட்கொண்டிருந்த  அந்த சோகங்கள்   மகிழ்ச்சிக்  குறைபாட்டினாலோ , நண்பர்களின்  தட்டுப்பாட்டினாலோ  ஏற்பட்டதல்ல. ஏனென்றால்  நான்  விரும்பியிருந்தால்  அந்த  சந்தோஷங்களை   பெற்றிருக்க முடியும். என்னுடைய  அந்த  சோகம்  ஒரு  உள்மனக்  காயத்தினால்  ஏற்பட்டது. அதுதான்  என்னை  தனிமையை   விரும்பச்  செய்தது . மகிழ்ச்சிக்கும்  விளையாட்டுக்குமான  என்  ஆர்வத்தை  அது  கொன்று  போட்டது. அது  என்னுடைய  தோள்களிலிருந்து  இளமையின்  சிறகுகளை  கழற்றிவிட்டது . கடலைச்   சேர  வழிதெரியாமல், தன்  சலனமில்லாத  மேற்பரப்பில்  பூதங்களின்  நிழல்களையும்   மேகங்களினதும்   மரங்களினதும்   நிறங்களையும்   பிரதிபலித்துக்கொண்டு  மலைகளுக்கிடையில்   தேங்கிக் கிடக்கும்  ஒரு  குட்டையாக  அது  என்னை  ஆக்கியது.

நான்  என்னுடைய  பதினெட்டு  வயதை  அடையுமுன்  என்  வாழ்க்கை  இப்படியாகத்தான்  இருந்தது. அந்த  ஆண்டு  என்  வாழ்வின்  மலையுச்சியைப்  போன்றது. அது  என்னுடைய  அறிவுக்கண்ணைத்  திறந்தது. மனித  வாழ்வில்  ஏற்படும்   திருப்பங்களை   விளங்கச்செய்தது. அந்த  வருடம்  நான்  பூமியில்  மறுபடியும்  பிறந்தேன். ஒரு  மனிதன்  புதிதாய்  இன்னுமொருமுறை   பிறக்காவிட்டால், அவனுடைய வாழ்வு, வாழ்க்கைப்   புத்தகத்தில்  ஒரு  வெற்றுப்  பக்கமாகவே   இருக்கும் . அந்த  வருடம், ஒரு  அழகிய  பெண்ணின்  விழிகளினூடாக   சுவர்க்கத்து  தேவதைகள்  என்னைப்  பார்த்துக்கொண்டிருப்பதை   நான்  கண்டேன். அதேநேரம், ஒரு  கொடூரமான  மனிதனின்  இதயத்தில்  நரகத்துச்  சாத்தான்களின்  மூர்க்கத்தனங்களையும்  நான்  கண்டேன். வாழ்க்கையின்  அழகிலும்  அதன்  கொடூரங்களிலும், தேவதைகளையும்  சாத்தான்களையும்   காணாத  ஒரு  மனிதன்  அறிவிலிருந்தும் மிகவும்  தூரமாக விலக்கப்படுகிறான். அவனுடைய  ஆத்மா  அன்பற்ற  வெறும் பாலைநிலமாகத்தான்  இருக்கும்.

தொடரும்.......     


Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன