எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, July 12, 2011

ஓடிவிடு வெண்ணிலவே...

வண்ண  நிலவே ,
நீ  வழிதவறிப்  போனாயா?
என்றைக்குமில்லாமல் - ஏன்
என் வாசல் நுழைகின்றாய்?

நான்
இருட்டை  அணிந்து
நெருப்புக்  குளிக்கும்  போதெல்லாம்
திரும்பிக்கூடப்  பார்க்காமல்
திமிரெடுத்துப்  போனாயே,
ஒரு துண்டு மேகத்தையாவது
எனக்குத்
துணைக்கனுப்பினாயா ?

இன்று மட்டும் ஏன்
என் விலாசம் தேடுகிறாய் ?

வேதனைப் பாசியில்
வழுக்கி
விழுந்து விழுந்து
தினம் தினம்
இடுப்பை உடைக்கிறேன்.

என் முகமே
என்னிடமிருந்து
கழன்று விழுந்த பின்
எந்த முகவரிக்குச் சொல்ல
நீ சேதி கொணர்ந்தாய் ?

உன் சேதிக்குச் சக்தியுண்டா
என் எலும்புகளை
ஒட்ட வைத்து - அதில்  
வானவில்லைக் கட்டிவைக்க ?

இல்லையென்றால்,.....
வந்த பாதை வழியே
திரும்பிப் பார்க்காமல் ஓடு.
உன்
அரைகுறை முதுகுவருடல்கள்
எனக்கு வேண்டாம்.

ஓடி விடு வெண்ணிலவே,,
நான் கள்ளிமுள் தின்னும்போது
தண்ணீர் எடுத்துக் கொடுக்க
எந்தக் கையும்
எனக்கு வேண்டாம்.

என் தொண்டைக்குழியின்
கிழிசல்களை - உன்னால்
தைத்துவிட முடியாது.
நீ
உன் வழியைப் பார்த்து
ஓடிவிடு வெண்ணிலவே.

Post Comment

2 comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன