எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, July 13, 2011

வைரமுத்துக் கவிஞருக்கு....

தமிழ்த்தாயின் கைபிடித்து
கவிப்பயணம் தொடங்கியவர்,
உயிர்க்கவிதை பல வடித்து
உலகத்தை அடக்கியவர்,
தாய்த் தமிழை தண்மதிக்கு
தன் கவியால் உயர்த்தியவர்,
தாய் மடியில் பிறந்த நாளை
தமிழினமே கொண்டாடும்.

கவிஞர் ஒரு பேரரசு.
சிற்றரசு வாழ்த்தினாலும்
சிறுமைதான் பரவாயில்லை.
பஞ்சப் புலவனின்
பாவாழ்த்தும் பரவாயில்லை.
நானோ  ஒரு பிச்சைக்காரி.
கவித்தட்டு கையில் ஏந்தி
தமிழ் எச்சில் பொறுக்குகின்ற
ராப்பிச்சைக்காரி நான்.

பேரரசை கவியால் வாழ்த்த,..
பூவுக்கே வாசம் சொல்ல,...
பெருவிருப்புக் கொண்டது,
மாபெரிய குற்றமென்று
மதிக்குத் தெரிந்தபோதும்,..
மனதோடு மல்லுக்கட்டி
மகிழம்பூ விரிகையிலே,
மலர்வாசம் மனம் துளைக்க
மடையுடைக்கும் கவியாறு.

வைரமுத்துக் கவிஞரே, - நீங்கள்
தரணியிலே பிறக்குமுன்னே
தமிழ்க்கவிதை படித்தீரா?
தாயின் மணிக்கொடியில்
காப்பியங்கள் கற்றீரா? - உங்கள்
தாயென்ன உங்களுக்கு
தாய்ப்பாலை தர மறந்து
கவிப்பாலா பருக்கிவிட்டாள் ?

தமிழ்க் கவிதை உங்களின்
தடம்பற்றி நடப்பது - உங்களில்
தமிழ் கொண்ட காதலாலா? - இல்லை,
எதிர்மாறும் பொருத்தம்தானா ?

உங்கள் கவிக்கடலின்
ஒற்றைத் துளியினிலும்
வார்த்தைகளில் வாய்மணக்கும்.
வரிகளுக்குள் தேன் சுரக்கும்.
வாசிக்கும் நெஞ்சத்தில்
வகை வகையாய் பூ முளைக்கும்.
வழலைப் பாம்புகளும்
வலம் வந்து படம் எடுக்கும்.

வார்த்தைகளின் இடுக்குகளில்
மயிலிறகை மறைத்துவைப்பீர்.
வரிகளுக்கு நடுவிலே
மல்லிகைப்பூ சொருகிவைப்பீர்.
சந்தத்தின் அதிர்வுகளில்
சங்கீதம் தடவி வைப்பீர்.
சப்தத்தின் இடைவெளியில்
சந்தனம் குழைத்து வைப்பீர்.

சொற்களுக்குள் எப்படி
சர்க்கரையை சிக்க வைப்பீர்?
சில்லென்ற காற்றை அதன்
சிறகுகளில் ஒட்ட வைப்பீர்?
தமிழ்ச் சொல்லை  எந்தத்
தறியிலே ஓடவிட்டு
நெய்தெடுத்துக் கவிவடிப்பீர்?
நெடுவானைப் பிய்த்து வைப்பீர்.

உருகியோடும் கவிவரியின்
உயிர்த்துடிப்பில் நான் கரைந்து,
அழுதழுது கவிபடித்து
அரைத்துயிலில் உளறியதும்....
வார்த்தைகளின் ஆழத்துக்குள்
அமிழ்ந்திருக்கும்  அறுசுவையை
அள்ளிக்குடித்தும் தாகம்
அணையாமல் தவித்ததுவும்.....

சொல்லி மாழாது.
சொற்பஞ்சம் எனக்கிருக்கு.

வைரமுத்துக் கடலுக்குள்
முத்துக் குளித்துத்தானே
சொல்லும்படி
இல்லையென்றாலும்
சும்மாவேனும் கவியெழுத
என் விரல்கள் துளிர்த்தது.
இன் தமிழில் உயிர்த்தது.

என் போல எத்தனையோ
இளங்கவிகள் படையெடுக்க.
தமிழ்க்கொடியை கையில் ஏந்தி
தடையுடைத்து நடக்கின்றீர்.

உம் பயணம் நீளட்டும்.
இள வேனில் சேரட்டும்.
மண் உங்கள் பாடலுக்கு
மத்தாளம் போடட்டும்.
இளம் ரத்தம் புகுந்த உங்கள்
இசைத்தமிழ்ப் பாடல் கேட்டு
தமிழ்த் தாயின் தலைமயிரின்
நரை முடிகள் நீங்கட்டும்.

Post Comment

2 comments:

chandrapal said...

உங்கள் கவிக்கடலின்
ஒற்றைத் துளியினிலும்
வார்த்தைகளில் வாய்மணக்கும்.
வரிகளுக்குள் தேன் சுரக்கும்.
வாசிக்கும் நெஞ்சத்தில்
வகை வகையாய் பூ முளைக்கும்.
வழலைப் பாம்புகளும்
வலம் வந்து படம் எடுக்கும்.

- உங்கள் வரிளின் அமைந்த இயைபு அருமையாக நிற்கிறது. அத்தனை வரிகளும் அழகுடையது. வாழ்த்துக்கள். தொடந்து எழுதுங்கள்.... சந்திரபால்.

RIPHNAS MOHAMED SALIHU said...

@chandrapal: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. மீண்டும் வருக.

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன