எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, July 7, 2011

நானும் உன்னை காதலிக்கிறேன்

எப்படி நுழைந்தாய்
எனக்குள்ளே?
என் வாசல் கதவுகள்
வீட்டு ஜன்ன்னல்கள்
என்று
எல்லாத் துவாரங்களையும்
மூடி வைத்தேனே,
எல்லாம் உடைத்து
எப்படி நுழைந்தாய்
என் இதயத்துக்குள் ?

விம்பம் எதுவும்
விழுந்திடாமல் 
கருங்கல்லில் சுவர்கட்டி
காவல் காத்தேன்.

எந்தக்  காற்றும்
தீண்டாவண்ணம்
இறப்பர் பையில்
இறுக்கிக் கட்டி
ஒழித்து வைத்தேன்
இதயத்தை.

காட்டாற்று வெள்ளமாய்
கல் அணைகளை
உடைத்துக்கொண்டு
எப்படிப் புகுந்தாய் ?

உன் பலயீனத்தின் முன்
என் பலம்
தோற்றுப் போனதா?

உன் அன்பின்  பலத்தால்
என் கட்டுப்பாடுகள்
பலயீனப்பட்டனவா ?

என்னைக்
கட்டி வைத்த கயிறுகளை
அவிழ்த்துவிட்டாய்.

நான் பொத்திவைத்த
இதயத்தை
திறந்து விட்டாய்.

பாய்ந்திடாமல்
பறந்திடாமல்
தறிகெட்டு  ஓடிடாமல்
நான் தறித்துவிட்ட
கவிதைச்  சிறகுகள்
உன் காதல்  விரல்  தடவ
மயில்தோகையாய்  விரிகிறது .

கல்லைப்போல் 
விறைப்பாயிருந்தேன்.
என்னை
ஒரு கற்பூரத்  துண்டாய்
கரைய  வைக்கிறாய் .

ஒற்றை நூலில்
என் உயிரை இழைந்து
கற்றைக் குழலால்
காவல் செய்கிறாய்.

உன் அன்பில்
ஒரு தூண்டில் மீனாய்
மாட்டிக் கொள்கிறேன்.

'எறும்பூரக் கற்குழியும்'
என்று
சொன்னது சரிதான்.
நான் வெறுத்தபோதும்
ஒதுக்கியபோதும்
விடாமல்  பொழிந்தாய்
அன்புப் பூமாரி.

இன்று,
என் பிடிவாதங்கள்
உன்னால்
உடைந்து போகின்றன.

இன்னும்  என்னால்
மூடி வைக்க  முடியவில்லை.
'நானும் உன்னை காதலிக்கிறேன்'  என்று
கத்திச் சொல்லத் தோணுது எனக்கு.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன