எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, July 24, 2011

இறுகிய கண்ணீர்

நிச்சயமற்ற
எல்லைக் கோடுகள்


நிரந்தரமற்ற
நலிந்த உறவுகள்


எங்கேயும் முடியலாம் என்று
தொடர்கின்ற பயணங்கள்


இறக்கிவிட  மனமின்றி
விரும்பியே  ஏற்றிக்கொண்ட 
கனமான  சுமைகள்


கைக்கெட்டாத் தூரத்தில்
தலைகீழாய்த் தொங்கும்
அந்தர நொடிகள்


வாயிருந்தும்
வார்த்தைகளுமிருந்தும்
எதிர்க்கருத்துச் சொல்லாத
தன்மானமற்ற மௌனங்கள்


எதையுமே சரியென்று
ஏற்றுக்கொண்ட பக்குவங்கள்


ஊரார் அறியாமல்
உள்ளுக்குள் அரங்கேறும்
ஒப்பாரிப் பாடல்கள்


பிரயாசைப்பட்டு
விழி மூடும் நேரம்
இரவுகளைப் பயமுறுத்தும்
பூதக் கனவுகள்


எத்தனையோ நினைவுகள்
இருள் படிந்த காட்சிகள்
இரும்பிலே வார்த்த
எலும்புக்கூடுகளாகி
கழுத்தை நெரிக்கும் போதும்,


இழவு பார்த்த கண்ணீர்
உருகி விழாமல்
இறுகிக் கனக்கிறது
இதயத்துக்குள்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன