எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, July 15, 2011

மௌனித்த நிஜம்

உலக மேடையில்
அரங்கேற்றப்பட்ட
என்
எத்தனையோ ஆட்டங்களும்
கட்டிய வேஷங்களும்
ஒன்றாகப் பிணைந்த
ஊர்வலம் நடக்கிறது.

ஒவ்வொரு பொழுதும்
ஒவ்வொரு விதமாய்
உருவம் தரித்த
என் உணர்வுகள் எல்லாம்
எண்ணத் திரையில்
தய்ய தக்கா ஆடுகிறது.

இதயத்தின் ஓரத்தில்
சலசலத்து ஓடும்
அருவிக் கரையில்
தலைக்குக் குளித்து
சிலுப்பிக்கொண்டு நிற்கிறது
என் சந்தோஷ நிமிடங்கள்.

உருகிய  வியர்வையையும்
உறங்காத இரவுகளையும்
தலைக்கு கிரீடமாயும்
கழுத்துக்கு பட்டியாயும்
மாட்டிக்கொண்டு
நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறது
என் வெற்றிப் பொழுதுகள்.

கடவுளின் ஆசியில்
கல் கூடப்  பெண்ணாகும்
என்ற
உண்மை மறந்து,
புகழ் மாலைகளில்
உச்சி குளிர்ந்த
என் தற்பெருமை
பப்புள் மரத்தின்
உச்சியில் நின்று
குத்தாட்டம் போடுகிறது.

பதவிகள் வந்துசேர,
பகுத்தறிவு
வேலை நிறுத்தம் செய்த போது
கால் விரல் நுனிகளுக்கும்
தலைக்கண  வெறியேறி
தலைவிரித்தாடுகிறது
என் அதிகாரப் பொழுதுகள்.

இப்படி,
எத்தனையோ ஆட்டங்கள்
ஊர் முழக்கித் திரியும்போது,
இதயத்தின் இடுக்கில்
இருட்டு மூலைக்குள்
விதவைப் பெண் போல
முக்காடு போட்டுக்கொண்டு
முடங்கிக் கிடக்கிறது
என் நிஜமான  நிஜம்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன