எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, July 8, 2011

எங்கே பிறக்கிறது கவிதை?

கவிதையொன்று
எழுதவேண்டும் என்று
தீராத ஆசை கொண்டேன்.

வண்ணக் காகிதமும்
வடிவான பேனாவும் கையுமாய்
அழகு மலர்கள்
பூத்துக் குலுங்கி
காற்றோடு அசைந்தாடும்
தோட்டத்து மூலையில்
சொகுசாக அமர்கிறேன்.

இதமான தென்றல்
பூக்களின் சங்கீதத்தை
பூமிக்கு
பாடிக் காட்டுகிறது.

வானவில் போர்த்திய
வண்ணத்துப் பூச்சிகள்
மலர்களில்
மகரந்தம் பருகிய
போதை தணியாமல்
மயங்கி நடக்கின்றன.

ஆஹா...
அழகான காட்சி.
அருமையாய் கவிதை வரும்
என்று
சின்ன சிரிப்புடன்
பேனாவை காகிதத்தில்
பொருத்துகிறேன்.
புள்ளிகளும் கோடுகளும்
காகிதத்தை நிறைக்கிறது.
கிழித்துப் போடுகிறேன்.

புதியதாய் கற்பனைகள்
கோர்த்து
புதுக்கவிதை எழுதலாம் என்று
புத்தம் புதிய
காகிதம் எடுக்கிறேன்.

சிட்டுக் குருவிகள்
மரக்கிளைகளில் தொங்கும்
பின்னல் கூடுகளுக்குள்
போவதும் வருவதுமாய்
நாடகம் செய்கின்றன.
கீ...கீ...சத்தம்
காதுகளுக்குள்
புல்லாங்குழலாய்  ஒலிக்கிறது.

இப்போது
கவிதை எழுத
கற்பனை பிறக்குமென்று
காகிதம் விரிக்கிறேன்.

ம்ஹஊம்..
கவிதைக் காற்று
எதிர்த் திசையில்
அடிக்கிறது.

வண்ணக் கோப்பைகள்
கை தவறி விழுந்ததுபோல்
அந்தி வானம்,
மேக முந்தானைக்குள்
ஓடி மறையும்
சூரியப் பையனின்
சுட்டித்தனங்கள்,
கூடு தேடி
கூட்டம் கூட்டமாய்
விண்ணிலே தவழ்ந்து போகும்
வெள்ளைப் புறாக்கள்,
என்று
எந்த அழகை பார்த்தபோதும்
கவிதை வரவில்லை.

சலித்துப் போனேன்.

"முண்டமே,
உனக்கு
கவிதை எழுத
வரவே வராது"
உள்ளுக்குள் அசரீரி
உரத்து ஒலித்தது.

உடைந்து போய்
திரும்புகிறேன்.

மென்மையான மலரொன்று
காற்றின் அசைவோடு
போட்டிபோட முடியாமல்
ஒடிந்து போய்,
காம்பை விட்டுப் பிரிந்து,
மௌனமாய் விழுகிறது.

அப்போது,
என் பேனாவின் கண்ணீர்
காகிதக் கிண்ணத்தில்
கவிதையாய் வழிகிறது.

Post Comment

4 comments:

Niroo said...

இதுக்கு போய் இவ்வளவு சிரமம்??

லவ் பண்ணுங்க கவிதை வரும், கதை வரும், அப்புறம் ஊருக்குள தகராறு வரும் , எல்லாம் வரும்

RIPHNAS MOHAMED SALIHU said...

வாழ்க்கையில் எத்தனை இன்பங்களை கண்டாலும் வாழ்வின் வலிகளில்தானே மனது கசிகிறது.

Anonymous said...

கவிதை நாம் கரைந்துபோகிற சந்தர்பங்களில் தான் தோன்றுகின்றன...

கவிதையை பெற கவிஞனின் மனம் எத்தனை தேடல்களை நிகழ்த்த வேண்டி இருக்கிறது

RIPHNAS MOHAMED SALIHU said...

@durairajv :ஆம்.. நம் உள்மனதை தொடும் விஷயங்கள் நம்மையும் அறியாமல் கவிதையாய் வடிவெடுக்கிறது..

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன