எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, July 7, 2011

தப்பிச் செல்ல வழியுண்டா?

மனம்
அங்கும் இங்குமாய்
ஆலாப்பறக்கிறது.

எந்தப் புள்ளியிலும்
நிலை கொள்ள மாட்டேனென்று
அடம்பிடிக்கிறது.

சிந்தனைகள்
சிதறி ஓடுகின்றன.

மனதை
ஒருமுகப்படுத்த
முயன்று தோற்கிறேன்.

எத்தனை பிரச்சினைகள்,
எத்தனை ரூபத்தில் வந்து
உயிரை
பிய்த்தெடுக்கிறது!

உலக வாழ்க்கை
கொடியது என்று
ஒதுங்க நினைத்து,

புத்தகம் திறந்தால்,
புத்திக்குள் கேட்கிறது
புகைவண்டிச் சத்தம்.

கவிதை படிக்க நினைத்தால்,
வைரமுத்து, மு.மேத்தா,
கலீல் ஜிப்ரான் கவிதையும் கூட
கல்லெடுத்து அடித்துத்
துரத்துகிறது என்னை.


கவிதையும் கதையும் தான்
படிக்க முடியவில்லை.
சரி,
திரைப்படம் பார்த்தால்
திசை மாறும் என்று
புதிய படமொன்றை
போட்டுப் பார்க்கிறேன்.
எழுத்தோடும்போதே
மனம் எழும்பி ஓடுகிறது.

தோழிகளோடு
தொலைபேசி அலட்டலுக்கோ,
காதலனோடு
SMS ஊடலுக்கோ,
மனம் கூடவில்லை.

வீட்டு விஷேசத்துக்கு
விருந்துக்கு வந்த
தூரத்து உறவினன்போல்
உணர்வுகளோடு ஒட்டாமல்
விலகியே நிற்கிறது
என் மனது.

வாழ்க்கைப் போர்க்களத்திலிருந்து
புறமுதுகு காட்டி
ஓட முனைந்த
எல்லா முயற்சிகளும்
தோற்றுப் போகின்றன.

மறுபடியும்,
சுவரில் எறிந்த பந்தாய்
நிதர்சனத்தின் 
கோரக் கைகளுக்குள்
சிக்கிக் கொள்கிறேன்.

Post Comment

1 comment:

Niroo said...

எல்லாம் கடந்து போகும்

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன