எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, May 11, 2011

அன்னைக்கு ஒரு ஆலாபனை

எத்தனை கவிதைகள்
எழுதி மகிழ்ந்திருக்கிறேன்.
இருந்தபோதும்
எனைப்பெற்ற தாயே,
உன்னைப் பற்றி
ஒரு கவிதை
எழுத
முடியவில்லையே என்னால்.

எத்தனை முறை

முயன்று பார்த்திருக்கிறேன்.
உன் அன்பின்
பரிபூரணத்தை
பரிணமிக்க
எந்த வார்த்தையாலும்
முடியவில்லை என் தாயே.

ஆயிரம் மொழிகள் சேர்ந்து

அழுதழுது பாடினாலும்
உன் அன்புப் பார்வையின் முன்
அவை தோற்றுப் போகுமம்மா.

உன்னை வார்த்தைகளால்

சிறைப்பிடிக்க முடியாதம்மா.

என் உயிரை

பிழிந்து நான்
கவிதை புனைந்தாலும்
உன் தாயன்பின் முன் - அது
தரம் குறைந்து தானிருக்கும்.

உனைப்பற்றிப் பாட

எனக்குப் பயம்.

முன்பள்ளிப் பிள்ளையின்

முதலெழுத்துப் பழக்கம்போல
ஏதோ என் பாட்டுக்கு
ஏடாகூடமாய்
எதையெதையோ கிறுக்குகிறேன்  .
தாயே உன் பெருமை பாட
என் கவிக்குச்
சக்தியுண்டா?

கவிதைக்கு அழகு

உவமை.
இதுபோல அதுபோல
என்று
எதனோடும் உன்னை
இணைத்துப்பார்க்க
முடியவில்லை என்னால்.

உன்

தியாகத்தின் எல்லையை
தேடிப்பார்க்க முடியவில்லை.

தாயே,

உன்
தியாகத்துக்கும் பொறுமைக்கும்
தரணியிலே எதுவும்
நிகரில்லை அம்மா.

என் தாயே,

ஒரு ஆயிரம் தாய்மாரின்
அன்பையல்லவா
நீ எங்களுக்கு
அள்ளிச் சொரிகிறாய்.

உனைப்போல

இன்னொரு தாய்
இங்கே
பிறந்திருக்க முடியாதம்மா.

எங்களுக்காய்

நீ பட்ட வேதனைகள்
சொல்லும்போது,
அந்த
மொழிகள்கூட
அழுதுவிடுகின்றன.

உன்னைப்பற்றி

எழுத நினைத்தால்
இதயம் விம்மி
உடைந்துவிடப் பார்க்கிறது.
கண்ணீர் முட்டி
கதறியழத் தோணுதம்மா.


2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன