எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, May 9, 2011

என் வருங்காலக் கணவனுக்கு

என்னைப் 
பெண்பார்த்துவிட்டுப்போன 
என்  வருங்காலக்  கணவனே (???),

நீ 
வருகிறாய்  என்று 
என்  வீட்டில் 
எத்தனை  தடபுடல்கள் .

இந்த  ஏற்பாடாவது 
சரியாகிவிட  வேண்டுமென்று 
என்  பெற்றோரின்  நெஞ்சில் 
ஆயிரம்  ஏக்கங்கள் .

கூரையைப்  பிரித்து 
தோரணம் 
ஒன்றுதான் 
போடாத  குறை .
எங்கள்  வரவேற்பில் 
எந்தக்  குறையும் 
கண்டுவிடக்  கூடாதென்பதில் 
கவனமாயிருந்தார்கள் .

புளி  போட்டுத்  துலக்கிய 
பித்தளைப்  பாத்திரம்போல் 
நான் 
பளபளக்க  வேண்டுமென்று ,
முதல்  தரப்  பட்டும்..
முகம்  முடி  ஒப்பனையும் ..
அப்பப்பா -
அழகாய்த்தான்  இருந்தேன் .

உனக்கு  அனுப்பவென்றே 
நான்
பிரத்தியேகமாய் 
எடுத்த 
புகைப்படத்தைப்  பார்த்து 
என்னைப்
பிடித்துப்போனதால்தான் 
நீ  வருகிறாய்  என்றார்கள் .

நானோ  உன்னை 
கனவிலும்  கண்டதில்லை .
நீ -
வெள்ளையா  கருப்பா  ..
ஒல்லியா  உடம்பா ..
எதுவுமே  தெரியாது .

இருந்தாலும்  பரவாயில்லை .
நானென்ன  பெண்தானே .
என்னை -
முகம்  தெரியாத 
உனக்காக  அலங்கரித்தேன் .
புத்தம்புது  ஒப்பனையில் 
பொன்னாக  ஜொலித்தேன் .
புடவைக்கடை  கொலுபொம்மையாய் 
எடுப்பாய்த்தான்  இருந்தேன் .
******
என்  பெற்றோரின்  முகத்தில் 
எத்தனை  கலவரங்கள் .
இந்தச்  சம்பந்தமாவது 
சரியாகிவிட  வேண்டுமென்று
ஓயாத  பரபரப்பு .

என்  மனது 
வறியவன் வீட்டுப்
பானைபோல
வெறுமையாய்  இருந்தது .
இந்தப் 
பெண்பார்க்கும்  படலம் 
எனக்கொன்றும்  புதிதில்லை .

ஏமாற்றக்  குளத்தில் 
எத்தனை  முறைதான் 
மூழ்கி  எழுவது ?

எத்தனை  முறைதான்
என்  எதிர்பார்ப்புகள் 
எரிந்து  சாம்பலாவது ?

நிறைகுடத்தைப்போல் 
தளம்பாமலிருந்தது  மனசு .

புகைப்படத்துக்குப்  போல 
மாப்பிள்ளைமாருக்கும்
புன்னகைத்துப்  போஸ்  கொடுத்து 
பழகிவிட்டது  எனக்கு .

வா ..
உயிருள்ள  பொம்மையொன்று 
உட்கார்ந்திருக்கின்றது .
பார்த்துவிட்டுப்  போ  என்று
எத்தனை  பேருக்கு 
காட்சி  கொடுத்திருக்கிறேன் .

இந்தப்
பெண்பார்க்கும்  படலம்
எனக்கொன்றும்  புதிதில்லை .
******
நீ 
வந்துவிட்டாய்   என்று  -உன்னிடம் 
என்னை  அழைத்துகொண்டுபோக 
அடுத்த  வீட்டுப்  பெண்கள் 
அவசரமாய்  வந்தார்கள் .

மின்கலம்  பூட்டிய 
இயந்திர  பொம்மையாய் 
வழி  தொடர்ந்தேன்  நான் .

தேநீர்த்  தட்டு  
கையில்  தரப்பட்டது .
உனக்குத் 
தேநீர்  தந்துவிட்டு 
எதிரே  வந்து 
உட்கார  வேண்டும் .
இதுதான்  ஏற்பாடு .

நல்ல  வேளை .
நீ 
தனியாய்த்தான் 
வந்திருந்தாய் .
இல்லாவிட்டால் 
உன்  நண்பனும்  என்னை 
இலவசமாய்ப்  பார்த்திருப்பான் .

சொல்லித்தந்தது  போல் 
தலைகுனிந்தே  நடந்து  வந்து
தேநீர்த்  தட்டை 
நீட்டினேன்  உன்னெதிரே.

நீ -
தேநீர்க்கோப்பையை 
தொடும்போது ..
நம்  கண்கள்  நான்கும் 
மோதிக்கொண்டன .

மின்சாரம்  ஒன்று 
பாய்ந்த்தது  நெஞ்சிலே .
இதயம்  வேகமாய் 
அடித்துக்  கொண்டது .
கைகளில்  நடுக்கம் ,
இதழ்களில்  துடிப்பு .
சமாளிக்கத்  தெரியாமல் 
தடுமாறிப்  போனேன் .

நீ
பார்த்துக்கொண்டேதானிருந்தாய் .
அழுத்தமான  பார்வை .
உதடுகளில் 
மெல்லியதாய்  ஒரு 
புன்னகைக்  கோடு .

நீ
அழகாய்த்தானிருந்தாய் .
திடமான தோள்கள்  ..
துடிப்பான  மீசை ..
நீ
அழகாய்த்தானிருந்தாய் .

அந்த 
ஓரிரு  வினாடிகள் 
அத்தனை  நீளமா ?

உன்  எதிரே 
நான்  அமர்ந்தேன் .
நிமிர்ந்து  உன்னை
நேராய்ப்  பார்க்க 
முடியவேயில்லை  என்னால் .

நீ
அளவாகக்  கதைத்தாய் .
இயல்பாக  சிரித்தாய் 
என்  பெற்றோரோடு .

ஓரக்கண்ணால் 
உன்னை  பார்த்ததை 
நீ
கண்டுவிட்டாய் .
ஐயோ ..
நாணத்தில் 
நான்  பட்ட  அவஸ்தை !!

நான்   நினைக்கிறேன் 
நீதான்
எனக்கானவன்  என்று .

என்னை
பிடித்திருக்கின்றது என்றோ 
பிடிக்கவில்லை என்றோ 
நீ  – எதுவுமே 
சொல்லவில்லை .
சொல்லியனுப்புகிறேன் 
என்று 
சொல்லிவிட்டுப் 
போய்விட்டாய் .
******
திருமணம் என்பது 
என் 
பெற்றோரின்  சுமைதீர்க்க -நான்
புரிந்துகொள்ளும் 
ஒப்பந்தம்  என்றுதான் 
எண்ணியிருந்தேன் .
உன்னை  பார்த்தபின்தான் 
ஆசைக்  கனவுகள் 
அனலாய்  சுட்டன .
******
இரண்டு  மூன்று  நாளாய் 
உன்  முடிவு  வருமென்று 
காத்திருந்தே 
என்  கனமான  இதயம் 
கரைந்துபோய்  விட்டது .

இது 
சரிவராவிட்டாலும்  என்று
என்  பெற்றோர் 
இன்னொரு 
பெண்பார்க்கும்  நாடகத்தை 
இன்றைக்கோ  நாளைக்கோ 
அரங்கேற்றப்  பார்க்கிறார்கள் .

அவர்களைச்  சொல்லி 
குற்றமுமில்லை .

இன்னுமொருமுறை 
முகச்சாயம்  பூசி 
தேநீர்  கொடுக்க 
என்னால் 
முடியாதடா.

தயவுசெய்து 
சம்மதமென்று 
நீ 
ஒரு  வார்த்தை  சொல்லிவிடு .

பெண்ணின்  உடலில் 
தசையும்  எலும்பும் 
மட்டுமில்லை .
தன்மானம்  ஒன்றும் 
உள்ளதென்று 
நீ  மட்டுமாவது 
புரிந்துகொள்.

2011

Post Comment

2 comments:

மேமன்கவி பக்கம் said...

"நல்ல வேளை .
நீ
தனியாய்த்தான்
வந்திருந்தாய் .
இல்லாவிட்டால்
உன் நண்பனும் என்னை
இலவசமாய்ப் பார்த்திருப்பான் "
அருமை அருமை

RIPHNAS MOHAMED SALIHU said...

உங்கள் கருத்துக் கிடைத்தது எனக்கு மிகப் பெரிய கௌரவமாக இருக்கிறது. மிக்க நன்றி.

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன