எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Saturday, May 14, 2011

இதயத்தின் போராட்டம்

எம்
இதயங்கள்
இறுகிப்போய்விட்டன.

மனதின்

பரப்புகள்
மரணித்துப் போய்விட்டன.

ஓயாது  சுற்றும்

உலகம்  போல
ஓயாத  எங்களின்  
தேடல்களின்
இடைநடுவே ...

கொஞ்சம்  சிந்தியுங்கள் .
இதயங்கள் என்ன
எந்திரங்களா 
நீங்கள் 
முடுக்கும்   போதெல்லாம் 
இயங்குவதற்கு
?

உறக்கத்தின்
நடுப்  பொழுதில்
பூதாகரமாய்த்  தோன்றும்
நேற்றைய  நினைவுகளிலும் ...
சாதிக்கத்  துடிக்கும்
நாளைய  கனவுகளிலும் ....
அவை  -
அழகான 
ராத்திரிப் பொழுதுகளைக்கூட
தொலைத்து விடுகின்றன..

எங்கள்
இறுக்கங்களையும்
அழுத்தங்களையும்
சுமந்து  கொண்டிருப்பதால்
மனதின்
சுதந்திரம்
மறுதலிக்கப்படுகிறது.

இது  தொடர்ந்தால் ,
துடிக்கின்ற   இதயம்
சீக்கிரமே 
அடங்கி விடும் 
அபாயம்  இருக்கிறது .

ஆதலால் ,
இனி 
உங்கள்  வயிறுகளைப்  போல
இதயங்களுக்கும்
உணவு  கொடுங்கள் .

முடங்கிக்  கிடந்த
உணர்வுகளுக்கெல்லாம்
சிறகுகள் கொடுத்து
இஷ்டம் போலப்
பறக்க விடுங்கள்.

இந்த
எந்திர வாழ்க்கையின்
எல்லைகளுக்கப்பால்
உள்ள
ஒரு சுந்தர வாழ்க்கையை
சுவாசித்துப் பாருங்கள்.

பல தாழ்ப்பாள்களுக்குள்
தடுக்கப்பட்டிருக்கும்
மனதின்
மெல்லுனர்ச்சிகளை
வாய்க்கால்களுக்குள்
வடித்து விடுங்கள்.

உங்கள் மனங்களின்
வரண்டுபோன பகுதிகளை
நட்பென்னும் நதிக்குள்
நனைத்து எடுங்கள்.
முடிந்தால்
மூழ்கி  எழுங்கள்.

காதலையும்
பாசத்தையும்
ஹந்தானை மலையின்
காலைப்  பனிபோல்
இதயமெல்லாம்
நிரம்ப  விடுங்கள்.

உங்கள்
இதயங்களின்
இரத்த ஓட்டத்தை
தடுத்துக்கொண்டிருக்கும்
இரும்புத்  திரையை
உடைத்தெறியுங்கள் .

இதயத்தின்  தேவைகள்
மறுதலிக்கப்பட்டதனால்
அது
இறுகி இறுகி
இமயம் போல
உயர்ந்து விட்டது.

என்றைக்கோ ஒருநாள்
எரிமலைக் குழம்பாய்
கொதித்துவிடுமுன்,..

இப்போதே ..
எங்கள்
இதயங்களின்
இரத்த  ஓட்டத்தை
பனித்துளிகளால்
சுத்திகரிப்போம்.

இனி,
வாரத்தில்
ஒருநாளாவது,
இதயங்களுக்கு
சுவாசிக்க
இடமளிப்போம் . 



2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன