எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Saturday, May 28, 2011

நெஞ்சை சுடும் நினைவுகள்

நிலாப் பொழியும்
கடற்கரைச் சாலைகளில்
கால்தடம் பதிக்கிறேன்.

நுரை தள்ளும் அலைகள்

என் பாதங்களை
உரசிப் போகின்றன.

அமைதியான ஒரு

தென்றல் காற்று
என் மேல் மோதிக்கொண்டு
ஒரு மெல்லிய சிலிர்ப்புடன்
விலகிப் போகிறது.

காற்றோடு கரைந்துவரும்

கடல் நீரின் வாசம்
சுவாசத்தில் கலக்கிறது.

தூரத்தில் எங்கோ...

புல்லாங்குழலின் இசையோடு
ஒரு மெல்லைய கானம்
காற்றோடு கசிகிறது.

நண்டு பிடிக்கும் சிறுவர்கள்,

மணல் வீடு கட்டும் குழந்தைகள்,
அலைகளில் துள்ளிக் குதிக்கும் இளசுகள்,
கிளிஞ்சில் பொறுக்கும் குமரிப் பெண்கள்,
என்று - இங்கே
எல்லாமே
அழகியல் மொழியின்
அசைவுகளாய்த்தான் இருக்கின்றது.

எனக்கு மட்டும்

அலைகளில் தத்தளித்து,
அரைகுறை உயிரில்கூட
அலறித் துடித்து,
உயிரை நிறுத்தி வைக்கும்
போராட்டங்களில் தோற்றுப்போய்,
அந்தரத்தில் மெல்ல அடங்கி,
மோட்சத்தில் அமர்ந்து கொண்டு,

என்னை,

கண்ணீர் கடலுக்குள்
கரைசேர முடியாமல்
காலமெல்லாம்
அமிழ்த்தி வைத்திருக்கும்
என் ஆசை மனைவியினதும்
என் செல்ல மகனினதும்
அந்தக்
கடைசி நேரக் கதறல்கள்
காதுகளுக்குள்
ரணமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன