எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, May 25, 2011

மரங்களே...

பூமிக்கு அழகு தரும்
புதுக்கவிதை
நீங்கள்தான்.

மண்ணுக்கு

இறைவன்
சூட்டிய
மணி மகுடம்
நீங்கள்தான்.

உலகுக்கே

குடைபிடிக்கும்
உத்தமர்கள் 
நீங்கள்தான்.

காற்றிலே

சுரம்பிரிக்கும்
கலைஞர்கள் 
நீங்கள்தான்.

சின்னதாய்

ஒரு வித்தில்
சுருண்டு கிடந்தாலும்,
மண்ணிலே
விழுந்தவுடன்
மலையாக
உயர்கிறீர்கள்.

சூரியனின்
சாறுறிஞ்சி
சுவைக்கத்
தருகிறீர்கள்.

உற்பத்திச் சாலையிலும்,
ஊர்திகளின் உலாக்களிலும்,
உதிரிகளாய் சுரக்கின்ற
கரியமிலத் தயிரை
கடைந்து
பருகியன்றோ
உலகத்தின் காற்றின்
உஷ்னத்தை தணிக்கிறீர்கள்   .

வானத்தில் கரைந்திருக்கும்
வன்னூதாக் கதிர்களின்
வன்முறைகள் 
ஒழுகிடாமல்
ஓசோனின் ஓட்டிலுள்ள
ஓட்டைகள் அடைக்கிறீர்கள்.

சுவாசத்தின் எச்சங்கள்
சேர்ந்து உருவான
காற்றின் அழுக்குகளை
கழுவித் துடைக்கிறீர்கள்.

இன, மொழி பேதம் பார்த்து
நீங்கள்
இறக்கைகள் விரித்ததில்லை.
எளியவன் சாய்ந்தபோதும்
ஏந்திட மறுத்ததில்லை.

கழுத்துக்கு மாலை
வீழுமென்று
காற்றுக்கு நீங்கள்
அசைந்ததில்லை.
கைதட்டல் வேண்டி
என்றும்
கலர் கலராய்
பூத்ததில்லை.

புகழாரம்
பெறுவதற்காய்
பழம் காய்கள்
காய்த்ததில்லை.
புன்னகையும்
கண்ணீரும்
பொய்யாக
உதிர்த்ததில்லை.

சில
கோலாடிக் காம்புகள்
உங்கள்
கிளைக் கைகள் உடைத்தாலும்,
வீறாப்புக்காரர்கள்
வேரோடு அழித்தாலும்
விறகாகிக் கூட
விருந்துகள்
படைக்கிறீர்கள்.

எதையுமே
வேண்டிடாமல்
எல்லாமே தருகிறீர்கள்.
எதனிடமும்
தோற்காமல்
எவரெஸ்டில்
இருக்கிறீர்கள்.

மரங்களே நீங்கள்தான்
மனிதனின்
பள்ளிக்கூடம்.
உங்கள்
மார்பிலே
சுரக்கும்  பால்தான்
மாந்தர்க்கு
சொல்லும்  பாடம்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன