எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, May 17, 2011

இரத்தல் இழிதன்றோ!

முப்பதுக்கும் நாப்பதுக்கும்
இடையில்தான்
உனக்கு வயதிருக்கும்.
மூப்பின் நரைகூட
உன் தலைமுடியை
தொடவில்லை.

வாட்ட சாட்டமாய்
வடிவாய்த்தான் இருக்கின்றாய்.
இருந்தும் எதற்கிந்த
ஈனப் பிழைப்புனக்கு?

நீ செய்யும் தொழிலுனக்கு
கேவலமாய்த் தெரியலையா?
தெருத்தெருவாய்த் திரிகையிலே -உன்
தன்மானம் சுடவில்லையா?

அடைத்திருக்கும் கதவினை
தட்டுகிறாய் நீ.
அடுக்களையில் வேலைகளை
அப்படியே போட்டுவிட்டு,
அரும்பிய வியர்வையினை
அரைகுறையாய் துடைத்துவிட்டு,
யாரோ எவரோ என்று
ஓடி வருகின்றேன்.

கூனிக் குறுகியுன்
குருதியும் உறைந்துவிட,
நாணிக் கோணி நீ
நாற்புறமும் பார்த்துவிட்டு,
மெல்லப் பல்லிளித்து,
'ஹதியா தாங்க' என்று
கையேந்தி நிற்கின்றாய்.

உச்சிச் சூரியன்
எப்படித்தான் என்னுடைய
நுனி மூக்கில் இறங்கினானோ!
என் கண்ணின் சுவாலையிலே
நீ
கருகிப் போயிருப்பாய்.

கை கால்கள் எல்லாமே
நல்லாய்த்தான் இருக்கிறது.
கட்டுடலும் கூட
கச்சிதமாய் இருக்கிறது - என்று
எண்ணிய நான் ஏதேதோ
என் வாயால் கொட்டிவிட,

முறைத்து என்னை
விழிகளாலே சுட்டுவிட்டு,
இழுத்து தடாரென
என் கதவால் அறைந்துவிட்டு,
விருச்சென்று  நடக்கின்றாய்.
விறைத்துப்போய் நிற்கின்றேன்.

அப்படி நானென்ன
பொல்லாப்பைச் சொல்லிவிட்டேன்.
இரத்தல் இழிதென்றும்,
இடியப்பம் அவித்தாலும்

உன் குடும்பம் வாழும் என்றும்,
நிலக்கடலை வறுத்தாலும்
வறுமைப்பேய் ஓடும் என்றும்,
நல்லதைத்தானே
நானுனக்குச் சொன்னேன்.

இரத்தலினை ஈனத்தொழில்- என்று
இகழ்ந்ததாலா உனக்குக் கோபம்? - ஓ..
செய்யும் தொழில் தெய்வமெனும்
கொள்கையோடிருக்கிறாயோ?
இல்லை,
சும்மாவே சாப்பிட்டு
சுணையற்றுப் போனதனால்,
கையேந்தும் வேலை
கால்களுக்குப் பழகியதால்,
செய்யாதே என்று சொன்னால்
சூடாகிப் போகிறாயா?



சோம்பேறிப் பேயின்
சிறைப்பிடியில் கிடக்கின்றாய்.
உழைப்பாலே வரும் இன்பம்
உணராமல் இருக்கின்றாய்.


உடம்போடு உயிர் பிழிந்து,
உதிரத் துளி சிந்தி,
உழைக்கின்ற வர்க்கத்தின்
கால் வயிறு நிரம்புமுன்னே
முழு மனதும் நிறையுமந்த
இன்பத்தின் சுவையை நீ
ஒரு தடவை சுகித்தாலும்
சத்தியமாய் சொல்கின்றேன்
இன்னொரு கதவினோரம்
ஒருபோதும் நெளியமாட்டாய்.


ஹதியா - தர்மம்

2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன