எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Saturday, May 14, 2011

கத்தும் கவிதைகள்

என் கவிதை
என் இதயத்தின்
காயங்களுக்கு
களிம்பு
தடவியிருக்கிறது.

என்
கண்ணீரின் சூட்டை
கழுவியிருக்கிறது.

இயற்கையின்
வார்ப்புகளில்
நான்
மெய்சிலிர்த்த
பொழுதுகளில்
இதயத்தில் தேனாய்
சுரந்திருக்கிறது.

என்
கால்களின் செருப்புகள்
களவாடப்பட்டிருந்த  வேளை
என்னை
தன்  சிறகுகளில்  ஏற்றி
சுமந்திருக்கிறது .

என்
முதுகெலும்பு
முறிந்து  விழுந்த
தருணங்களில்
ஊன்றுகோலாய்  மாறி
தாங்கியிருக்கிறது  என்னை .

பருவம்  தந்த
மதர்ப்பில்
விழுதுகளில்  வேரூன்றி  
விருட்சமாய்
விரிந்து  கிடந்த
என்-
காதல்  ஆலமரத்தின்
கிளைகளில்  தாவி
குதூகலித்திருக்கிறது .

விடிவெள்ளியாய்  நான்
தனித்திருந்த  பொழுதுகளில்
உடுக்கூட்டமாய்  என்னோடு
உறவாடியிருக்கிறது .

இப்படி-
என்
உணர்வின் சிலிர்ப்புகளாயே
இதுவரை
என் கவிதை
இருந்திருக்கிறது.

இனி- என்
கவிதையின் கைகள்
நீளும்.

இன்னொருவர் கண்ணீரை
தன் கண்ணில்
ஏந்தும்.

துப்பாக்கி 
முனைகளில்தான்
சமதர்மம் பேசும்.

பனித் துளிகளோடும் 
பண்பாடும்
குயில்களோடும்
கைகோர்த்துக் கிடந்த
என் கவிதை
இனி
நெருப்புமிழும்
நட்சத்திரங்களோடு
ஒப்பந்தம்
போடும் .

நிலாச் சோறு
உண்டு களித்த
கனாக் காலம்
முடிந்து போனது
என் கவிதைக்கு.

இனி
நிகழ்காலத்தின்
சகதிகளுக்குள்
புரண்டெழுந்து
பாடும் .

வறியவன்  வயிறுகளில்
பசித்து  அழும் .

உழைப்பவன்
வியர்வையின்
உப்புக்களை
உலகச் சந்தையிலே
விலை பேசும்.

முகமூடிக் 
கலாச்சாரத்தின்
முதுகுத்  தோலை
பிய்த்தெறியும்.


வேலை தர  முடியாத
பல்கலைக்கழக
பட்டங்களையும்
மாலை  மாட்டும்
போட்டோக்களையும்  
நடுத்தெருவில்  போட்டு
கூவி  விற்கும் .


கண்கட்டிய
தேவதையின்
கைத்தராசு
வலியவன் கைகளில்
விலை போய் விட்டது.


இனி
எளியவன்
குரலில்
உரத்துக் கத்தும்
என் கவிதை.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன