எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, May 27, 2011

பூக்களே சிரிக்காதீர்கள்

பூக்களே சிரிக்காதீர்கள்
புன்னகையை உதிர்க்காதீர்கள்.

மழலையின் சிரிப்பில்கூட

மகிழ்ந்திட முடியவில்லை.- இந்த
விடலைப்பெண் கனவுக்கூடு
வெறிச்சோடிப் போனதிப்போ.

ஆகாய வெளியினிலே

ஆலாப் பறந்தது ஒருகாலம்.
ஏகாந்தக் காட்டுக்குள்
ஏங்கித் தவிப்பது நிகழ்காலம்.

குழந்தையாய் நான்

தத்தித் திரிந்தபோதும்
மகிழ்ச்சியில்
குறையேதும் இருந்ததில்லை.
இப்போ - இந்த
பருவக்குருவிக்கு
சிறகுகள் முளைத்திருந்தும்
பறந்திட முடியாமல்
பதுங்கிக் கிடக்கிறது.

வாலிபம் வந்து

வானம் திறக்க,
வண்ணக் கனவுகளின்
ஊர்வலம் நடக்க,
கரை புரண்டோடும்
உணர்ச்சி வெள்ளத்தின்
கதகதப்பில் நீராடி,
சிறகுகள் உலர்த்தும் நேரம்....

சீதனத் தாழ்ப்பாள் போட்டு

என்னை
சிலுவையில் அறைந்துவிட்டு
கனவுகள் சுகமா என்று
கண்ணடித்துக் கேட்கிறது - இந்த
கனிவில்லா சமுதாயம்.

வாய்ப்பேச்சிலேயே

வரலாறுகளை அழித்தெழுதும்
வல்லமை கொண்ட
மாப்பிள்ளைமாரும்
வந்தவரை லாபம் என்று
வாய் பொத்தி நிற்கிறார்கள்.

என் உணர்வுகளின்

உரோமங்களைப் பிடுங்கிவிட்டு,
நான் துடித்துக் கதறும் வலிகளை
தூரத்தில் நின்று
வேடிக்கை பார்க்கிறது
ஒரு கழுகுக் கூட்டம்.

ஓநாய்கள் வந்து

உட்கார்ந்து பார்க்கிறது
இந்தச் சின்னக் குருவியின்  முதுகிலே .

சுமை தாங்க முடியாமல்

சிறகுகள் சரிகிறது.
இமை மூட முடியாமல்
இரு விழி அழுகிறது.

பூக்களே சிரிக்காதீர்கள்.

உங்கள் புன்னகையில்
பூரிக்க முடியவில்லை.

வேதனை தீயில் - நெஞ்சு

வெந்து தகிக்கிறது.
சோதனைக் காட்டில் இதயம்
நொந்து அலைகிறது.

என்னைப்போல் எத்தனையோ

சிறகுடைந்த பட்டுப்பூச்சிகள் - தங்கள்
கனவுத் தோட்டத்தில்
புதைகுழிகள் தோண்டி
உணர்வுகளையும் ஆசைகளையும்
ஆழமாய்ப் புதைத்துவிட்டு,
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்கிக்கொண்டே,
காலத்தின் வேகத்தோடு
நடைபோட முடியாமல்
தள்ளாடி விழுகிறார்கள்.


இருந்தபோதும்
நாளையின் மீது
நம்பிக்கை இருக்கிறது.


பெண்ணியத்தின் பெருமையை
பங்கு போட்டு விற்கும்
இந்தச் சீதனச் சந்தையை
உடைத்தெறிய
நெஞ்சில் உரம் கொண்ட,
நேரிய குணம் கொண்ட,
இளைய தலைமுறையொன்று
வீறுகொண்டு எழுந்துவரும் .
அவர்களின்
காலடித் தடங்களை
பற்றிக் கொண்டு
பல விருட்சங்கள் முளைக்கும்.

பெண்மையை கேலி செய்யும்

இந்தச் சீதன அரக்கனின்
கழுத்து நரம்புகளை முறுக்கி
கடலில் எறிந்துவிட்டு,
தங்கத் தண்ணீரில் குளித்தெழுந்து
புது சரித்திரம் படைத்திட - அவர்கள்
வருவார்கள்.

ஒரு மலர்வனத்தைப்போல

மௌனமாய் புன்னகைத்து
அவர்கள் கரம் பற்றி
நாங்கள் நடப்போம்.

பூக்களே நீங்களெல்லாம்

அப்போது சிரியுங்கள்.
உங்கள் புன்னகைத் தேனை
நாங்கள்
பருகிட வருவோம்,

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன