எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, May 16, 2011

ஊமைக் குமுறல்

நூலறுந்த
பட்டம்போல
திக்குத் தெரியாமல்
திசை மாறிப் பறக்கிறது
என் வாழ்க்கை.

பூக்கள்
பறிக்கும்
கனவுகளோடுதான்
உன் -
கை கோர்த்து
நடந்தேன்.

நானே
உன் மேசையின்
சாடிப் பூவாய்த்தான்
பறிக்கப்பட்டிருக்கிறேன்
என்ற
அவலம் எனக்கு
அப்போது புரியவில்லை.

கிரகங்கள் தாண்டும்
உன்
பயணங்களில்
துணை வரத்தான்
நான்  நினைத்தேன்.

நீயோ  - உன்
வீட்டு  முற்றத்தின்
விளிம்புகளைத்தான்
எனக்காக
விரித்து வைத்தாய்.

ஒளியுதிர்க்கும்
என்
இளமையின் முத்துக்களை
உனக்கு
பொன்மகுடமாய்
சூட்டிக் கொள்வாய்
என்று நினைத்தேன்.

அந்த முத்துக்களையே
நீ
அடிக்கடி
உரசிப் பார்க்கிறாய்.

பரந்து  கிடக்கும்  வானத்தில்
சிட்டுக்  குருவியாய்
சுற்றித்  திரிய
ஆசைப்பட்டேன்.

இன்று  -
உன் சுவர்களுக்கிடையில்
சிறகுடைந்து
அழுகிறேன் .

வண்ண  வண்ண 
வானவில்லாய்
வந்துபோன
என்
வாலிபக் கனவுகள்
இன்று
மங்கிப் போன
பழைய புகைப்படம் போல
பரிதவித்துப் பார்க்கிறது.

உன் கூட்டுக்குள்
சிறகடிக்கும்
லவ் பேர்ட்ஸ் போலவும்
நீ சொன்னதைச் சொல்லும்
கிளிப்பிள்ளை போலவும்
நீ கைகாட்டும் இடத்தில்
வால் சுருட்டி உட்காரும்
நாய்க்குட்டி போலவும்
இன்னொரு
செல்லப் பிராணியாய்த்தானா
என்னையும் நீ
கொண்டுவந்தாய் ?

வார்த்தைகள் 
வெளியாகாமல்
ஊசித் துளைகளூடே  
இந்தக் 
காட்டுக் குழல்
ஊமையாய் அழுகிறது.

நீ
அலங்கரித்துக்
கொலுவில் வைக்க 
நானென்ன 
பொம்மையா?

என்
கால்களையும் கைகளையும்
கட்டிப் போட்டுவிட்டு
நீச்சல் குளத்தினை
பரிசாய்த்
தருகிறாய்.

என்
சிறகுகள்
வலிக்கிறது.

குரல்வளை
நசுக்கப்பட்ட
ஒரு குயில்
குமுறி அழுகிறது.


2011


Post Comment

2 comments:

Imran Saheer said...

அழகிய நயம் கொண்ட கவிதை... சில இடங்களில் சொற்களால் என்னை கட்டிப்போட்டுவிட்டீர்கள்... குறிப்பாக,

"உன் மேசையின்
சாடிப் பூவாய்த்தான்
பறிக்கப்பட்டிருக்கிறேன்"

"வார்த்தைகள்
வெளியாகாமல்
ஊசித் துளைகளூடே
இந்தக்
காட்டுக் குழல்
ஊமையாய் அழுகிறது."

வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.

RIPHNAS MOHAMED SALIHU said...

நன்றி இம்ரான். நான்கூட ரசித்த வரிகள் அவை. தொடர்ந்தும் உங்கள் கருத்துக்கள் என்னை துலக்கட்டும்.

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன